ஆன்மிகம்

ஆடி அசைந்து வரும் ஆழித்தேர்

வி.சுந்தர்ராஜ்

இன்று தேரோட்டம்

மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு என்பார்கள். ஆமாம்! திருவாரூர் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்.

சைவ சமய ஆலயங்களில் பெரிய ஆலயமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரியதாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் தொடங்கி வாழையடி வாழையாக வந்த சைவத் திருக்கூட்ட மரபினர் அனைவரும் போற்றி, பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலாகும்.

இக்கோயில் 16.22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று பிரகாரங்கள், 78 சன்னிதிகள், 9 கோபுரங்கள்,11 மண்டபங்கள், 114 சிவலிங்கத் திருமேனிகள், 54 விநாயகர் திருமேனிகளையும் கொண்ட கோயில் இது. தல விருட்சகமாகச் சிவப்பு பாதிரி மரம் அமைந்துள்ளது.

திருமுறையில் பதிவான தேர்

தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இதர திருக்கோயில்களின் தேர்களிலிருந்து இத்தேர் முற்றிலும் மாறுபட்டது. 31 அடி உயரம் கொண்ட இத்தேர் கட்டுமானத்தில் இரண்டு இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல், அருமையான சிற்பங்களுடன் அமைந்துள்ளது. எண்கோண வடிவமாக அமைந்துள்ள இத்தேர் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட இத்தேரின் உயரம் 96 அடி. அலங்கரிக்கப்பட்ட பின்னர் இத்தேரின் எடை 350 டன் இருக்கும்.

தேரின் முன்புறம், தேரினை இழுத்துச் செல்வது போல் பாயும் அமைப்பில் நான்கு குதிரைகள் உள்ளன. 32 அடி நீளம், 11 அடி உயரம் உடைய குதிரைகள் தமிழர்களின் கலை நயத்தைப் பறைசாற்றும் வகையில் உள்ளன.

பிரசித்தி பெற்ற இந்த ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதிநாயனார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் கதைச் சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராணக் காட்சிகளும் மரத்தில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகத் தேரின் அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட தேர்

முன்பிருந்த ஆழித்தேர் 1970-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது 2011-ல் தேர் செப்பனிடும் பணி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்று, பழமை மாறாமல் சுமார் 9 ஆயிரம் கனஅடி மரங்கள் பயன்படுத்தப்பட்டு, ரூ.2.17 கோடியில் செப்பனிட்டுப் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டத்தின் போது உற்சவர் தியாகராஜர் அம்பாளுடன் தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

ஆரூரா தியாகேசா

தேரோட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று (16-ம் தேதி) காலை 7 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தேரோட்டத்தைக் காணவும், வடம்பிடிக்கவும் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலிருந்து பக்தர்கள் திருவாரூருக்கு வருகைபுரிவார்கள். ஆரூரா...தியாகேசா.. என பக்த கோஷத்தோடு ஆழித்தேரின் வடம்பிடித்து இழுத்து மகிழ்வார்கள்.

SCROLL FOR NEXT