‘கோர்’ என்ற பாரசீக மொழிச் சொல்லே கோரிப்பாளையம் என்ற பெயருக்கு ஆதாரமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. அடக்கஸ்தலமான சமாதியை, கல்லறையைக் குறிக்கும் சொல்லே கோர். ஹஜ்ரத் சுல்தான் ஷம்சுதீன் பாதுஷா, ஹஜ்ரத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா ஆகிய இறைநேசர்களின் நினைவிடங்கள் இருப்பதால் இந்த இடம் கோரிப்பாளையம் என்ற பெயர் பெற்றது.
கோரிப்பாளையம் பெரிய பள்ளிவாசல், வைகை ஆற்றின் வடக்குக் கரையில் பெரிய நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கண்கவரும் கல் துாண்களால் அமைந்துள்ள பள்ளிவாசல் இது. இதன் மினரா கோபுரங்கள் உயரமானவை. அதற்குத் தேவையான மிகப் பெரிய பாறை அழகர் மலையிலிருந்து அப்போது கொண்டு வரப்பட்டது.
ஹஜ்ரத் சுல்தான் ஷம்சுதீன் பாதுஷா, ஹஜ்ரத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் 13-ம் நுாற்றாண்டில் ஓமானிலிருந்து மதுரைக்கு வந்து, நகரின் வடபகுதியில் ஆட்சி நடத்தினர். அரசாட்சி நடத்திய இருவரும் இறைநேசத் திருப்பணிகளிலும் ஈடுபட்டனர்.
பாதுஷா சகோதரர்களின் சட்ட ஆலோசகராகவும், அரசாங்க நீதிபதியாகவும் ஹஜ்ரத் காஜி சையது தாஜுதீன் இருந்தார். அவரும் ஓமான் நாட்டிலிருந்து மதுரைக்கு வந்தவர். அவருடைய நினைவிடம் காஜிமார் தெருவில் அமைந்துள்ளது.
கோரிப்பாளையம் மகான்களின் நல்லாசியை நாடி பள்ளிவாசல் தர்காவுக்கு வந்து பயனடைந்தவர்களின் பட்டியல் விரிவானது. அரசர்களும் பொதுமக்களும் அவர்களில் அடங்குவர்.
மன்னரையும் மக்களையும் குணமூட்டியவர்கள்
சுந்தர பாண்டிய மன்னர் நோயினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது சையது சுல்தான் அலாவுதீனும், சையது சுல்தான் சம்சுதீனும் அவரைக் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது 13-ம் நுாற்றாண்டின் பிற்பகுதிக்கும் 14-ம் நுாற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவம் அது. பாண்டிய மன்னர், இந்த இரண்டு இறைநேசர்களையும் கண்ணியப்படுத்தும் நல்லெண்ணத்துடன் கோரிப்பாளையம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களின் உரிமையை வழங்கினார்.
மதுரை வட்டார முஸ்லிம்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசர் திருமலை நாயக்கர் கோரிப்பாளையம் பெரிய பள்ளிவாசலைக் கட்டிக்கொடுத்தார். பல இன, சமய மக்களும் மகான்களின் நல்லாசியைப் பெறுவதற்காக இந்தப் பள்ளிவாசல் தர்காவுக்கு வந்து செல்கின்றனர்.
சுல்தான் அலாவுதீன், சுல்தான் சம்சுதீன் ஆகியோரின் சந்ததியினர் குலசேகர கூன் பாண்டிய மன்னரிடமிருந்து கோரிப்பாளையம் தர்கா பராமரிப்புக்காக சொக்கிக்குளம், பீபி குளம், சிருதுார், திருப்பாளை முதலான ஆறு கிராமங்களையும் விலைக்கு வாங்கினர். அதற்கு 14,000 தங்கக் கட்டிகளை அவர்கள் கொடுத்தனர். வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில், 1573-ம் ஆண்டில், அந்த கிராமங்களின் உரிமை பற்றி வழக்கு தொடுக்கப்பட்டது. பாண்டிய மன்னர் கையெழுத்திட்ட ஆவணங்கள் ஆதாரமாக இருந்ததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்றும் கோரிப்பாளையம் தர்கா, இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது.