பகவான் யோகமூர்த்தி மகா பெரியவா மீளா அடிமை (பி.ஒய்.எம்.எம். டிரஸ்ட்) அறக்கட்டளையின் சார்பாக அன்றாடப் பூஜைகள், பிரதோஷ பூஜைகள், சிவராத்திரி பூஜை, மகா பெரியவா ஆராதனை, மாதாந்திர மற்றும் ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் அனுஷம் ஜெயந்தி பூஜைகள் ஆகியவை காஞ்சி கோயிலில் நடத்தப்படுகின்றன. இந்த அறக்கட்டளையின் சார்பாக சமர்ப்பண் – 2017 கலை நிகழ்ச்சிகள் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, நாரத கான சபாவில் நடத்தப்பட்டன.
முதல் நாள் உமாசங்கர் குழுவினரின் `ஓம்காரா’ நிகழ்ச்சியும் விக்கு விநாயக்ராம் குழுவினரின் `சமர்ப்பணம்’ நிகழ்ச்சியும் நடந்தன. இரண்டாம் நாளில், சுபாஷ் சந்திரன், கணேஷ் குமார் ஆகியோரின் சங்கரா, டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் கர்னாடக இசை நிகழ்ச்சியும் நடந்தன.
இசை மழையில் ஓம்காரா
வயலின், புல்லாங்குழல், கீபோர்ட், கடம், தவில், டிரம்ஸ் என வாத்தியங்களின் சேர்ந்திசையில் வெளிப்பட்டது `ஓம்காரா’. கடம் மற்றும் பல்வேறு தாள வாத்தியங்களை வாசித்த உமா சங்கரின் தெளிவான வழிநடத்துதலில், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களும் இசையின் மூலமாகவே நமக்கு உணர்த்தப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட தாளக்கட்டுகளில் அடுக்கடுக்காக ஓசையை அதிகரித்துக் கொண்டே சென்று, ஒரு தாள அடுக்கு முடியும் இடத்தில் பிரணவ மந்திரமான `ஓம்காரா’ என்னும் ஒற்றைச் சொல் மந்திரத்தை உமாசங்கர் சொல்ல, அதே தாளகதியில் அரங்கில் இருந்தவர்கள் திருப்பிச் சொல்லுமளவுக்கு ரசிகர்களுடன் நிகழ்ச்சி ஒன்றியதைப் பார்க்கமுடிந்தது. மேற்கத்திய வாத்தியமாக டிரம்ஸ் இருந்தாலும் அதை மற்ற வாத்தியங்களோடு ஒருங்கிணைக்கும் வகையில் அடக்கி வாசித்தார் ஆனந்தன் பிரேம்குமார்.
இசை சமர்ப்பணம்
கிராமி விருது பெற்ற கடம் வித்வானான விக்கு விநாயக்ராம், வயலின் கலைஞர் குமரேஷ், வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ், தாள வாத்தியக் கலைஞர் செல்வ கணேஷ் ஆகியோரின் கூட்டணி இசையில் சிவபெருமானின் கையிலிருக்கும் உடுக்கை, மகா பெரியவர், சரஸ்வதி, குரு ஆகியோருக்கு இசை சமர்ப்பணம் செய்யப்பட்டது. வயலினில் குமரேஷ் தொடங்கும் ஒரு இசைக் கோவையை ஜெயந்தி குமரேஷ் தொடர்ந்த விதம், விறுவிறுப்பான ஒரு `ரிலே’ போட்டியை கண்டது போல் இருந்தது.
இறுதியாக ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு மேலாக `சுப்ரமண்யா’ என்னும் தாளக் கோவையை கடம் வாத்தியத்தில் விக்கு விநாயக்ராம் வழங்கிய விதம், அந்த ஆறுமுகனே மேடையில் தரிசனம் தந்தது போல் இருந்தது.