ஒரு மலையடிவாரத்தில் சிறிய குடில் அமைத்து ஒரு ஜென் குரு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் மாலை குரு வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அவருடைய குடிலில் ஒரு திருடன் புகுந்துவிட்டான். எத்தனைத் தேடியும் அவனுக்கு அங்கே எதுவும் கிடைக்கவில்லை. களைத்துப்போய் உட்கார்ந்திருந்த திருடனை வீட்டுக்குள் நுழைந்ததுமே குரு பார்த்துவிட்டார். “என்னைத் தேடி நீ நெடுந்தூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கிறாய். உன்னை வெறுங்கையுடன் அனுப்ப எனக்கு மனதில்லை. அதனால் என் ஆடைகளை உனக்குப் பரிசாகத் தருகிறேன், எடுத்துச்செல்” என்று தான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து திருடனுக்குக் கொடுத்தார் குரு. ஒரு நிமிடம் தயங்கிய திருடன், வந்ததற்கு இந்த ஆடையாவது கிடைத்ததே என்று வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். வெற்றுடம்புடன் அமர்ந்து நிலவை ரசித்துக் கொண்டிருந்த குரு, “இவனுக்கு அந்த நிலவையே கொடுத்து அனுப்பலாம் என்று நினைத்தேன், அதற்குள் ஓடிவிட்டான்” என்று முணுமுணுத்தார்.