ஆன்மிகம்

இருவரில் யார் அழகு?

எஸ்.கோகுலாச்சாரி

மகாலட்சுமியின் தமக்கைக்கு ஜேஷ்டாதேவி என்று பெயர். மூத்ததேவி என்பார்கள். இருவருக்கும் ஒரு முறை அழகு பற்றிய பிரச்சினை வந்து விட்டது. நாரதர்தான் இப்பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்.

அம்மா ஜேஷ்டாதேவி! மகாலட்சுமி, இருவரும் அழகுதான். ஒரே ஒரு வேறுபாடு. ஜேஷ்டாதேவி போகும்போது அழகு. அன்னை மகாலட்சுமி, வரும்போது அழகு.

மகாலட்சுமி செல்வத்தை மட்டும் தருவதில்லை. செல்வத்தின் பயனையும் தருகிறாள். மகாலட்சுமி விலகும்போது, அந்தச் செல்வமே பகையாக மாறி அழிக்கிறது. நம்மாழ்வார், “செல்வமே பெருநெருப்பாய்” என்று இதனைப் பாடுகிறார்.

மகாலட்சுமியின் திருஷ்டி

வாமன அவதாரத்தில் - எங்கே மகாலட்சுமியின் திருஷ்டி - அதாவது கடைக்கண் பார்வை, மகாபலியின் மீது விழுந்து விட்டால், அவன் செல்வத்தை இந்திரனுக்குத் தர இயலாது என எண்ணி, மான்தோலால் தன் மார்பில் அகலாமல் இருக்கும் மகாலட்சுமியை பகவான் மறைத்தாராம்.

ராவணன் சகல செல்வங்களோடு வாழ்ந்தான். மகாவிஷ்ணுவாகிய ராமனிடமிருந்து, மகாலட்சுமியாகிய சீதையைப் பிரித்து அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்தான். ஆனால் செல்வமாகிய மகாலட்சுமியை சிறைவைத்த இராவணன் தன் செல்வங்களையெல்லாம் இழந்தான்.

இந்த உலகம் உயிரற்ற சேதனப் பொருட்களையும் உயிருள்ள ஜீவாத்மாக்களையும் தன்னகத்தே கொண்டது. இவைகள் தோன்றுகின்றன; நிலைக்கின்றன; மறைகின்றன. சிருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் என்ற இம்மூன்று நிலைகளும் எவர் செய்கிறாரோ , அவரே பகவான்.

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ; என்கிறது தைத்திரீய உபநிஷத். இவைகளைத் தினசரி பாராயணம் செய்வதன் மூலம்  மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

பொருள் எளிமை

மாதாதான் தெய்வம்; தந்தைதான் தெய்வம்; ஆசார்யன்தான் தெய்வம்; விருந்தினர்தான் தெய்வம்; இவர்களைக் கொண்டாடவேண்டும் என்பது சாதரணமானப் பொருள்.

இந்த நால்வகைப்பொருளும் மகாலட்சுமியைக் குறிக்கும் என்பது சிறப்புப்பொருள். ஸர்வலோகாநாம் மாதா, அதாவது எல்லா உலகிற்கும் தாய் என்பதால் அவளைத் தாயாகக் கொண்டாடுகிறோம். உயிர்களுக்கான எல்லாவிதமான நன்மைகளையும் செய்வதாலும் தந்தையான விஷ்ணுவைக் காட்டி அவரோடு நம்மைச் சேர்த்து வைப்பதாலும் தந்தையைக் காட்டிய தாய் ஆகிறாள்.

உபதேசத்தாலே உயிர்களைத் திருத்துவதால் அவளே குருவாகிறாள். தாய்க்குரிய இனிமையும், தந்தைக்குரிய நன்மை தரும் குணமும், ஆச்சாரியனுக்குரிய ஆன்ம நன்மையும் ஒரு சேரத் தருவதாலும், பகவானோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாலும் அவளே தெய்வமாகிறாள்.

மகாலட்சுமியின் பரிவு

மகாலட்சுமியின் பரிவு எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டும். ஒரு குழந்தை தவறு செய்திருந்தாலும் கூட, அதைப் பெரிதுபடுத்தாது, அக்குழந்தையின் மீது தந்தை கோபம் கொள்ளாது தடுத்து இருவரையும் சேரவிட்டு மகிழ்பவள் தாய். மகாலட்மித் தாயார் குழந்தைகளான பக்தர்கள் செய்யும் சிறு நற்செயல்களைக்கூட பெருமாளிடம் மலைபோல விவரித்துச் சொல்வாளாம். ஏதேனும் குறைகள் இருப்பினும் அதனை கடுகளவு குறைத்துக் காட்டுவாளாம்.

மகாலட்சுமியான சீதை, பூமாதேவியின் அம்சமாக இருப்பினும் (பூமாதேவி தேவி யின் அங்கமாகவே கொள்வது மரபு) தன்னைக் கொடுமைப்படுத்திய ராட்சசிகளை அழிக்க அனுமன் அனுமதி கேட்டபோது, “மாருதி! இவ்வுலகில் பாவம் செய்யாதவர்கள் யார்? இவர்கள் அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு தீங்கு செய்தவர்கள். எனவே ‘மன்னித்து விடு’” என்று கருணை காட்டியவள்.

மன்னித்தல் பேரழகு. மகாலஷ்மி நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ?

SCROLL FOR NEXT