ஆன்மிகம்

வெள்ளி அதிகார நந்தி 100

யுகன்

சமயக் குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலங்களுள் திருமயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. மயில் உருவில் அன்னை பராசக்தி, பரேமேஸ்வரனை நோக்கி தவமிருந்த தலம் என்பதால், திருமயிலை என அழைக்கப்பட்டது. கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும் அருள்புரியும் திருமயிலையும் கயிலைக்கு ஒப்பானது என்று கூறும் அருளாளர்களும் உண்டு.

`காணக் கண் கோடி வேண்டும் கபாலி’ என்னும் பாடலின் வரிகளில், இறைவன், அதிகார நந்தியில் பவனிவரும் அழகைக் குறிப்பிட்டிருப்பார் பாபநாசம் சிவன். திருமயிலை கோயிலின் பங்குனி விழாவின் மூன்றாவது நாளில் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் இறைவனின் திருவீதி வலம் வைபவம் நடக்கும். இந்த வெள்ளி அதிகார நந்தியின் 100வது ஆண்டு இது.

வெள்ளிக்கவசம் பூண்ட அதிகார நந்தி

தொடக்கத்தில் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருந்தது இந்த அதிகார நந்தி. இந்த நந்திக்கு, வெள்ளிக் கவசம் அணிவித்து அழகு பார்த்தவர் த.செ.குமாரசுவாமி பக்தர். பாரம்பரியமான வைத்தியத் தொழில் பார்த்துவந்த பரம்பரையில், ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த த.செ.குமாரசுவாமி பக்தர் மருத்துவத் துறையில் தனக்குக் கிடைத்த வருமானத்தில் நான்கில் ஒருபங்கை ஆலயத் திருப்பணிக்காகச் செலவிட்டார். இந்த அடிப்படையில், மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் அதிகார நந்திக்கு அன்றைய நாளிலேயே சுமார்

48 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, வெள்ளித்தகடுகளில் கலைநயமிக்க அலங்கார வேலைப்பாடுகளைச் செய்து, அதைக் கவசமாக அதிகார நந்திக்கு அணிவித்தார். இந்த வெள்ளிக் கவச திருப்பணியை அவர் ஏறக்குறைய (1912-ல் தொடங்கி 1917 அக்டோபர் 5 வரை) ஐந்தாண்டு காலம் எடுத்துக்கொண்டு செய்துமுடித்தார்.

“கடந்த 4-ம் தேதி வெள்ளி அலங்கார நந்திக்கு நூற்றாண்டு விழா நடந்தது. மயிலை கோயிலுக்கு அளிக்கப்பட்ட வெள்ளி அதிகார நந்திக்கு ஆண்டுதோறும் விசேஷ காலங்களில் திருப்பணிகள் செய்வதுடன், அதைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறோம்” என்றார்

த.செ.குமாரசுவாமி பக்தர் அவர்களின் குடும்ப உறவினர்களில் ஒருவரான பிரபு.

“வைத்தியரான த.செ.குமாரசுவாமி பக்தரின் கைங்கர்யத்தால் அதிகார நந்திக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நூறு ஆண்டுகளாக அந்த வெள்ளிக் கவசத்தை முறையாக மெருகேற்றி, வழிவழியாக அதைப் பராமரிக்கும் கைங்கர்யத்தை ஊர்கூடி தேர் இழுப்பது போல் எங்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்துவருகின்றனர். இந்த பக்தி கைங்கர்யத்தை நாங்கள் செய்வதற்கான எல்லா பெருமையும் இறைவனுக்கும் த.செ.குமாரசுவாமி பக்தருக்குமே உரியவை” என்றார் பிரபல ஓவியரும் த.செ.குமாரசுவாமியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருமான மணியம் செல்வன்.

SCROLL FOR NEXT