ஆன்மிகம்

தொண்டரைக் காப்பாற்றப் பிரம்படிபட்ட சிவன்

ரஞ்சனி பாசு

ஆவணி மூலம்: செப்டம்பர் 10

“பாண்டி நாடே பழம்பதி, தில்லைக்கூத்தனே தென்பாண்டி நாட்டானே” என மணிவாசகப் பெருமானால் பாடப் பெற்ற பாண்டிய நாட்டில், நான் மாடக் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை நகரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தெய்வ மணங்கமழும் தேவாரத் திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 திருத்தலங்களில் மதுரை முதன்மையானது.

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் அருளுருக் கொண்டு அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளியது மதுரை நகரில்தான். இவற்றைத் தொகுத்து பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தைப் படைத்தார். மதுரையில் வருடம் முழுவதும் பன்னிரண்டு மாதங்களிலும் திருவிழா நிகழப் பெறுவதால் ‘விழாக்கள் மலிந்த நகரம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது. அவற்றுள் சிறந்தது ஆவணி மூலத் திருவிழா.

காட்சிகளாகும் திருவிளையாடற் புராணம்

இறைவன் தனது அடியவரான திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசகரை அரசனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற, காட்டில் உள்ள நரிகளைப் பரிகளாக மாற்றி, பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்துக்குரியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 18 நாள் திருவிழாவாக ஆவணி மூலப் பெருவிழா நடைபெறும். அதில் கரிக்குருவிக்கு உபதேசித்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, மாணிக்கம் விற்றருளியது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, உலவாக் கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, குதிரைக் கயிறு மாற்றுதல், நரி பரியாக மாறுதல், பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றது ஆகிய பத்துத் திருவிளையாடல்களைக் குறிக்கும் விதமாகக் காட்சியமைப்பு நடைபெறும்.

SCROLL FOR NEXT