கொடிய குணமும், கடினமான மனமும் கொண்ட மனிதர்கள் இறைவனின் அருளிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால் இவர்கள் நரகத்தின் அடிப்பகுதியில் வைக்கப்படுவார்கள். கண்களில் பெரும் கனலும், இதயத்தில் பாறையென கடினமும் கொண்ட மனிதன் அபாக்கியவான் ஆவான். இறைவனின் பேரருளால், அவனது அருளைச் சுமந்து மனிதரிடையே மனித வடிவில் வந்துதித்த நபிகளார் சக மனிதர்களின் துன்பங்களை களைபவராக இருந்தார். மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடுபவராகவும், அவர்கள் துன்பங்களின் துயர் துடைப்பவராகவும், தவறிழைக்கும்போது அவர்கள் மீது அனுதாபங்கொண்டு அரவணைத்து நல்வழிப்படுத்துபவராகவும், செல்வந்தர்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், பறிபோன உரிமைகளைப் பெற்றுத் தருபவராகவும், அதற்காக போராடும் போராளியாகவும் அவர் இருந்தார்.
நபிகளாரின் வாழ்வை அறிவு மற்றும் உண்மை என்னும் அழகான ஆபரணங்களால் அழகுப்படுத்தி வைத்தான் இறைவன். அவரது வாழ்க்கை ஒழுக்கத்தின் சிகரமாக விளங்கியது. அன்பாலும், இரக்கத்தாலும் நிரம்பி வழிந்தது. சக மனிதர்களின் துயரங்களைக் கண்டு உருகும் குணம் அவர்களுடையது. அடுத்தவர்க்கு உதவி செய்ய ஓடோடிச் செல்லும் பரோபகாரி அவர்.
இரக்கமே பிரதானம்
இந்த அருங்குணங்களை முன்வைத்துதான் நபிகளார் மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது என்று சாட்சியமளிக்கிறது திருக்குர்ஆன்: “நபியே, இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் உம்மை விட்டு விலகிப்போய் இருப்பார்கள்”
இந்த அருங்குணங்களின் வெளிப்பாடை உஹது என்னும் இடத்தில் நடந்த அதே பெயராலேயே இஸ்லாமிய வரலாற்றில் வழங்கப்படும் யுத்தத்தில் காணலாம். இந்த போரில் நபிகளாரை ஒழித்துவிட எல்லாவித முயற்சிகளையும் எதிரிகள் மேற்கொண்டனர். நபிகளாரின் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு அவரது உயிருக்கு பெரும் அறைக்கூவலாக இருந்த போர் அது. எதிரிகளின் அம்பு நபிகளாரின் தலைக்கவசத்தைத் துளைத்து அவரது முன்பற்களில் சில உடைந்து போயின.
கன்னங்களில் பெரும் காயம் ஏற்பட்டது. இந்தத் தீரா துயர் கண்டு நபித்தோழர்களில் சிலர் எதிரிகளைச் சபிக்க நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள். ஆனால், மனிதர்களின் மீது அளவற்ற பேரன்பு கொண்ட நபிகளாரோ, “என் சமூகத்தார் என்ன செய்கிறார்கள் என்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை நல்வழிப்படுத்துவாய் இறைவா!” என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றார்.
இப்படி இரக்கமே பிரதானம் என்பதை நபிகளாரால் போதிக்கப்பட்ட இஸ்லாம், முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. இதனை அவர்களின் இறைநம்பிக்கையின் ஒரு அளவுகோலாகவும் நிர்ணயிக்கிறது.
“பூமியில் உள்ளோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” என்கிறார் நபிகளார். இரக்கம் காட்டுவது என்பது சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாக சுட்டுகிறார்.
“இறைவன் பூமியையும், வானங்களையும் படைத்தபோது, அவன் நூறு கருணைகளையும் சேர்த்தே படைத்தான். அந்த ஒவ்வொரு கருணையின் விசாலமும், வானம் பூமி இவற்றுக்கு இடைப்பட்ட தூர அளவிலானது. இதன் ஒரு தன்மையைத்தான் அவன் பூமிக்கு அனுப்பி வைத்தான். அதனால்தான் ஒரு தாய் தன் குழந்தையிடம் பேரன்பு கொள்கிறாள். விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் இரக்கம் காட்டிக் கொள்கின்றன” என்கிறார் நபிகளார்.
அனுபங்களால் அறிவு விசாலமடைவதுபோலவே, பல்வேறு நிலைகளில் மனிதனின் கருணையும் வளர்ந்து பற்றிப் படர்கிறது. இத்தகைய கருணையை அழிக்க அனுமதிப்பது அந்த மனிதனை நரகத்திற்கு வழிநடத்தும் பாதையாகிவிடும்.