ஆன்மிகம்

பசுமைத் தொழில்நுட்பத்தில் முன்னோடி ஆலயம்

செய்திப்பிரிவு

சென்னை மயிலாப்பூர் ஆலயத்தில் அன்னதானம் சமைப்பதற்காக இரண்டு இயற்கை எரிவாயு யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினம்தோறும் 150 பேருக்கான அன்னதானம் இந்த இயற்கை எரிவாயு அடுப்புகளின் மூலமே சமைக்கப்படுகிறது.

கபாலீஸ்வரர் ஆலயத்தின் கோசாலையில் வளர்க்கப்படும் 25 பசுக்கள் இடும் சாணத்திலிருந்து இந்த இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

“இயற்கை எரிவாயுவை ஆலயத்தில் பயன்படுத்தும் முதல் முயற்சி இது. இத்திட்டம் வெற்றியடைந்தால் பிற ஆலயங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். கபாலீஸ்வரர் திருக்கோயில் குளத்தில்தான், ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த, காற்றூட்டும் கலன்களையும் வைத்துள்ளோம். அதையும் மற்ற கோயில் குளங்களில் செயல்படுத்தப்போகிறோம்.” என்கிறார் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முக மணி.

பசுஞ்சாணத்தின் அளவுக்கு தண்ணீரைக் கலந்து 12 க்யூபிக் மீட்டர் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் செயல்திறன் ஆறு கிலோகிராம் எல்பிஜி எரிவாயுவின் செயல்திறனுக்குச் சமமானது. மிச்சமிருக்கும் சாணக்கழிவுடன், காய்கறிக் குப்பைகளைக் கலந்து உரமாக்கப்பட்டு, 21 நாட்களுக்கொரு முறை ஆலய நந்தவனத்தில் இடப்படுகிறது.

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிவாயு உருவாக்கும் நெருப்பு நிறமற்றது; மணமும் அற்றது.

SCROLL FOR NEXT