நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.
செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.
காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
மேஷம்
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே, படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை 8-ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சிறிய மோதல்கள் வந்து நீங்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரத்தில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். தங்க நகைகள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். யாருக்காகவும் உத்திரவாதக் கையெழுத்திடாதீர்கள். சிறியவர்களை அனுசரித்துப் போக வேண்டும். உங்களின் இலக்கை போராடி பிடிக்க வேண்டி வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேச வேண்டும். அத்தியாவசியச் செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.
குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனம்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், வதந்திகள், பழைய கடன் குறித்த அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயம் உடனே முடியும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிர கதியில் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும்.
குரு 8-ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். அவர்களின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டிய காலம் இது. இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.
| பரிகாரம்: அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். துவரம் பருப்பைத் தானமாகக் கொடுங்கள். |
ரிஷபம்
கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சளைக் காமல் பயணிப்பவர்களே! ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களைக் கூறு போட்டு பார்த்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார்.
எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். பெற்ற பிள்ளையிடம் கூடப் பேசுவதற்குப் பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்குக்குப் பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களைத் தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப் போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். வீட்டுக்கு ஏன் திரும்புகிறோம் என்ற மனநிலை மாறும்.
ஈகோவாலும், உப்புக்குப் பிரயோஜனம் இல்லாத பிரச்சினையாலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக் கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். இரண்டு, மூன்று முறை முயன்றும் முடியாமல் போன விஷயங்களெல்லாம் இனி, சாதகமாக உடனே முடியும். எதிரி யைப் போல் பார்த்த பிள்ளைகள் இனி, பாசமாக இருப்பார்கள்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வது இனி, குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களைக் குறை கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்களால் நன்மை உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் எங்கே சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வசதிகூடும்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதரர் வகையில் சச்சரவு வரும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்-. குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்சினை, வீண் பதற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் கடன் பிரச்சினையாலும், பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி, பண உதவி கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களைப் பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம், சொத்து சுகத்தையும் தரும்.
| பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். கடலைப் பருப்பு தானமாகக் கொடுங்கள். |
மிதுனம்
உதிக்கும்போதே விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து வீடு, மனை சேர்க்கையையும், குழந்தை பாக்கியத்தையும், ஓரளவு அடிப்படை வசதிகளையும் தந்த குருபகவான் இப்போது 04.10.2018 முதல் 28.10.2019 வரை 6-ம் வீட்டில் மறைவதால் சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேச வேண்டி வரும். நீங்கள் மாறிவிட்டதாகச் சிலர் சொல்லிக் கொள்வார்கள்.
முன்கோபம் அதிகமாகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவுநீர் குழாய் அடைப்பு, குடிநீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கக்கூடும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன் மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது.
10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாகச் சமாளிப்பீர்கள். 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சாதுக்கள், சன்னியாசிகளின் ஆசி கிட்டும். புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு வந்து செல்லும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரிகளையெல்லாம் தாமதமின்றிச் செலுத்தப் பாருங்கள். வாகனம் பழுதாகிச் சரியாகும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத் தில் குருபகவான் செல்வதால் பணம் வரத் தொடங்கும். வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்த வர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர் களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர் கள் உறுதுணையாக இருப்பார்கள்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் அக்காலகட்டத்தில் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்விகச் சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். என்றாலும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்சினைகள் வந்து செல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.
அக்கம்பக்கத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். வேலையாட்களை விரட்டாதீர்கள். உத்தியோகத்தில் வீண் பழிகளைச் சுமக்க வேண்டி வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையைப் புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.
| பரிகாரம்: ஆஞ்சநேயர் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பாசிப்பயிறைத் தானமாகக் கொடுங்கள். |