வயதில் மூத்தவர்கள் மட்டுமே பொதுவாகப் படிக்கும் பக்தி இணைப்புகளிலிருந்து வேறுபட்டு சினிமா பிரபலங்கள், பல்சமய அறிஞர்கள், பேராசிரியர்கள், மதச்சார்பற்றவர்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ள ‘ஆனந்த ஜோதி’ பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அர்த்தங்களைத் தேடுபவர்களுக்கு ஒளிவிளக்கு ‘ஆனந்த ஜோதி’ சமயங்களைக் கடந்த ஆன்மிகம் பற்றிய தேடலை முன்வைக்கிறது. பெளத்தம், உபநிடதங்கள், சூஃபி, கிறிஸ்தவம், இஸ்லாம் சமயச் சிந்தனைகளையும், நுணுக்கமான மறைமுகத் தத்துவங்களையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. பல சமய உரையாடல்களுக்கு அவை அஸ்திவாரமாகின்றன.
மற்ற சமயங்களின் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இக்கட்டுரைகள் உதவுகின்றன. சமயப் பிரச்சாரமாகவும், கடவுள் துதி பாடும் பக்தியேடாகவும் இல்லாமல் ஆழமான வாழ்வியில் கோட்பாடுகளை எளிமையாக விளக்கும் படைப்புக்கள் இடம்பெறுவது பாராட்டுக்குரியது. ஆறுமுகத் தமிழனின் 'உயிர் வளர்க்கும் திருமந்திரம்', 'ஆன்மா எனும் புத்தகம்' போன்ற தொடர்கள் மானுட வாழ்வின் அர்த்தங்களைத் தேடுபவர்களுக்கு ஒளி விளக்காக இருக்கும்.
- இரா. முரளி, தத்துவப் பேராசிரியர்
ஒளிரட்டும் ஆனந்த ஜோதி சேமித்து வைத்துக்கொண்டு, நேரம் அமையும்போதெல்லாம் விருப்பம்போல் வாசிக்க 'இந்து தமிழ்' இணைப்பிதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் அறிவுச் செல்வமாகத் திகழ்கின்றன. 'ஆனந்த ஜோதி' இணைப்பிதழில் அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம். இஸ்லாமிய வாழ்வியலை தந்துவரும் விதமும் சூஃபி துறவிகளுக்கு விரிவான அறிமுகம் கொடுத்ததும் மறக்கமுடியாது. தற்போது நான் விரும்பிப் படிக்கும் தொடர்களில் ஒன்று ‘ஆன்மா எனும் புத்தகம்’. இது புதிய முயற்சி. ஒளிரட்டும் ஆனந்த ஜோதி. - எம். முகமது அன்வர்தீன், பேச்சாளர், காரைக்கால் வானொலி
|
சூபி தொடர் தொடரட்டும்
ஆனந்த ஜோதியில் தொடக்கம் முதலே என் கவனம் ஈர்ப்பது ‘இஸ்லாம் வாழ்வியல்’ தொடர்பான கட்டுரைகள். சூபி ஒரு பெருங்கடல் என்றாலும், அதிலிருந்து சிறந்த முத்துகளை எடுத்துத் தந்த ‘துளி சமுத்திரம் சூபி’ தொடரை மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் தலைசிறந்த சூபி கவிஞர்களின் இசைப் பாடல்களை வெளியிட்டு அவை சித்தரிக்கும் கடவுள் - மனிதன் இடையிலான காதலை எதிர்காலத்தில் விவரித்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
- தாஜ்நூர், திரை இசையமைப்பாளர்
போட்டி போட்டு படிக்கும் இதழ் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழையே காலம்காலமாகப் படிக்கும் பழக்கமுள்ள எங்கள் வீட்டில் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழுக்காகவே வியாழக்கிழமை ‘இந்து தமிழ்’ நாளிதழ் வாங்க ஆரம்பித்தோம். வியாழக்கிழமை நானும் எனது கணவரும் முதலில் யார் ‘ஆனந்த ஜோதி’யைப் படிப்பது என்று போட்டி போடுவோம். ஆலய அறிமுகங்கள், பத்மவாசனின் ஓவியத் தொடர் எனது நெஞ்சத்தைக் கவர்ந்தவை. எனது கணவர் மருத்துவர் என்பதால், அவர் இரவு வீடு திரும்பும்போது படிப்பதற்காக இஸ்லாமிய, கிறிஸ்தவக் கட்டுரைகளைக் குறித்து வைத்து, அவருக்குப் படிக்கக் கொடுப்பேன். நான் சமீபமாக ஆன்மிகக் கட்டுரைகள் எழுதி வருவதற்கு ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழ் தான் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். - சாந்தகுமாரி சிவகடாட்சம், எழுத்தாளர்
|
ஆனந்த ஜோதியில் வாசகர்கள் விரும்பிய மாற்றங்கள் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற படிவத்தில் பூர்த்திசெய்து நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் அனுப்பியிருந்தனர். ‘ஆனந்த ஜோதி’யில் வெளியாகும் படைப்புகளில் சித்தர்கள் அறிமுகம், ஆலய வரலாறுகள், நகைச்சுவை எழுத்துகளை வாசகர்கள் தங்களது விருப்பமாகக் கூறியுள்ளனர். தொடர்களில் ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’, ‘மஹா அமிர்தம்’, ‘ஆன்மா என்னும் புத்தகம்’ ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘விவிலிய மாந்தர்கள்’, ‘துளி சமுத்திரம் சூபி’ ஆகியவையும் வாசகர்களை பரவலாக ஈர்த்துள்ளன. ஓவியங்கள், ஒளிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்டுரைகள், தொல்லியல் செய்திகள், ஆன்மிகப் புதிர்கள் ஆகியவை ‘ஆனந்தஜோதி’யில் வாசகர்களின் கூடுதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது. உபநிடதங்கள் தொடங்கி மெய்ஞானக் கட்டுரைகளும் பல்சமய எழுத்துகளும் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது. உங்களின் ஆதரவையும் விருப்பத்தையும் உந்துதலாகக் கொண்டு அடுத்துவரும் வாரங்களில் ‘ஆனந்த ஜோதி’யை புத்தொளியுடன் படைக்கத் தயாராகி வருகிறோம். |