ஆன்மிகம்

சமணம்: ஆன்மாவை ஆராதித்தவர்

விஜி சக்கரவர்த்தி

உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் உயரிய கொள்கைகளையும் மக்களிடையே போதித்தவர்கள் இறைவனுக்கு இணையாகப் போற்றப்படுகிறார்கள். அவ்வகையில் சமண மதத்தில் குந்தகுந்தாசாரியர் முதன்மையானவர்.

இவர் ஆந்திர மாநிலத்தில் கி.மு.52-ம் ஆண்டில் குண்டக்கல் (கோண்ட குந்த்) எனும் ஊரில் பிறந்தார். மரியாதை காரணமாக அவ்வூரின் பெயரிலேயே குந்தகுந்தர் என அழைக்கப்பட்டார். இவருக்கு பத்மநந்தி, ஏலாச்சாரியார், வக்ரகிரிவா, க்ரத்தபிச்சர் எனும் பெயர்களுண்டு.

குந்தகுந்தர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள பொன்னூர் மலை எனப்படும் நீலகிரி மலை மீது தவம் இருந்துள்ளார். மலையின் மீது இவரின் பாதங்கள் உள்ளன. சமணர்களுக்கு இவ்விடம் புண்ணிய இடமாகத் திகழ்கிறது.

குந்தகுந்தர் தமது பதினோராவது வயதில் முனிதீட்சை மேற்கொண்டார். கி.மு.8-ல்

ஆச்சார்யர் பதவி ஏற்று 51 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்துள்ளார். திருப்பாதிரிப்புலியூரியிலிருந்த திராவிட சங்கத்தின் தலைவராக இருந்தார். குந்தகுந்தர் 84 நூல்களை பாகுடங்களாக பிராகிருத மொழியில் எழுதி உள்ளார். பாகுடங்கள் என்றால் காணிக்கை என்பதாகும்.

இவை ஆன்மாவை மையப்படுத்தி எழுதியவை. இவர் ஆன்மாவை ஆராதித்தவர். சமயசாரம் எனும் இவரின் நூல் மிகச் சிறந்த நூலாகும். ஆனாலும் அந்நூலில் தம்மைப்பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

குந்தகுந்தர் திருக்குறளை எழுதி திருவுள்ளம் நாயனார் மூலம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் திருவுள்ளம் நாயனாரின் பெயர் மருவி திருவள்ளுவர் என்றாயிற்று என்பர் எனவும், குந்தகுந்தாசாரியார் காலமும் திருக்குறளும் முதல் நூற்றாண்டுயெனவும் பேரா.அ.சக்கரவர்த்தி என்பவர் தன் திருக்குறள் உரையில் எழுதியுள்ளார்.

குந்தகுந்தாசாரியரின் நூல்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராட்டி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சிகாகோ பல்கலைக்கழகத்திலும் இவரின் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பல்கலைக்கழகம் அஷ்டபாகுடங்கள் எனும் நூலை 5 முறை வெளியிட்டுள்ளது.

குந்தகுந்தர் குஜராத்திலுள்ள ஊர்ஜந்தகிரிக்குச் சென்று வந்துள்ளார். கிருஷ்ணபகவான் தாதகீ கண்டதீவு சென்று வந்ததுபோல் குந்தகுந்தர் சாரணரித்தியின் (விண்ணில் செல்லும் ஆற்றல்) மூலம் விதேஹம் (மேலுலகின் இடம்) சென்று சீமந்தர பகவானைத் தரிசித்து பரதகண்டம் திரும்பினார் என நம்புகின்றனர்.

இவர் இறுதியாக கர்நாடக மாநிலத்திலுள்ள குந்தாத்ரி எனும் மலையை அடைந்து அங்கு சமாதி அடைந்தார். அம்மலையில் தைலபன் எனும் அரசன் கி.பி. 12-ம் நூற்றாண்டில் பகவான் பார்சுவ நாதரின் ஆலயத்தை எழுப்பி சிறப்பு செய்தான்.

இன்றும் தமிழகத்தில் பொன்னூர் மலையில் குந்தகுந்தாசாரியாரின் திருப்பாத கமலங்களுக்குப் பூசைகள் செய்து வழிப்படுகின்றனர்.மலையடியில் அவர் பெயரில் குந்தகுந்தநகர், குருகுலம், தொழிற்பயிற்சி நிலையம், திருக்குறள் ஆராய்ச்சி மையம் போன்றவை இயங்கி வருகின்றன.

SCROLL FOR NEXT