தொண்டைமான் சக்கரவர்த்தி விஷ்ணு பக்தரும் ஆவார். சிறந்த ஆட்சியாளர். இவரது ராஜ்ஜியத்தில் பிராமணர் ஒருவர் இருந்தார். அவருக்கு காசி யாத்திரை போக வேண்டும் என்ற ஆசை. ஆனால், அவர், உடல்நலக் குறைவினால் உயிரை விட நேர்ந்தது.
உயிர்போகும் தருணத்தில் தன் மகனை அழைத்து தான் இறந்த பிறகு அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரது ஈமச் சடங்குகளை முடித்து அஸ்தியை எடுத்துக்கொண்டு அவரது மகன் காசிக்குப் புறப்பட்டார்.
காசிக்கு செல்லும் முன்னர், தன் மனைவி, மக்களைப் பாதுகாப்பதற்காகத் தொண்டை மானுடைய அரண்மனையில் விட்டுச் சென்றார். திரும்பி வந்து யாத்திரை பூர்த்தியாகிவிட்டதென்று சொல்லி, மனைவி, குழந்தைகளை அனுப்புங்கள் என்று கேட்டார். ராஜா அவர்களை அழைத்து வரப் போனபோது, அந்த பிராமணனின் மனைவி குழந்தைகள் இறந்து கிடந்தனர்.
ராஜா அதிர்ந்து போனார். திரும்பி வந்து பிராமணனனிடம், ‘உனது மனைவி குழந்தைகள் திருப்பதிக்குச் சென்றுள்ளனர். நாளை வா அனுப்பி வைக்கிறேன்’ என்றார். அரண்மனையில் இருந்து திருப்பதி மலையானின் கோயிலுக்குச் சுரங்கப்பாதை வழியாக சென்று சக்கரவர்த்தி ஏழுமலையானிடம் அழுது முறையிட்டார். பிராமணனின் மனைவி, குழந்தைகளை உயிரோடு எழுப்பி தரும்படித் துதித்து நின்றார்.
கருணை பிறந்தது
“ஐயனே மலையப்பா, கோவிந்தா, நீதான் கதி எனக்கு. நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சுகிறார். மலையப்பனின் மார்பில் வசிப்பவள் தயாதேவி அல்லவா. இறைவனுக்குக் கருணை பிறந்தது.
கொஞ்சம் நீர் கொடுத்து அதனைக் கொண்டு சடலங்களின் மீது தெளிக்க வேண்டுமென்று தயாபரனான ஏழுமலையான் கூறினார். சக்கரவர்த்தியின் வேண்டுதல் வீண் போகவில்லை. தண்ணீரைத் தெளித்ததும் பிராமணனின் மனைவி, குழந்தைகள் உறக்கத்திலிருந்து எழுந்ததைப் போல எழுந்தனர். இறைவன் கருணை புரிவான் என்ற நம்பிக்கை, மாறாத அன்பு நமக்கு இருந்தால் நாம் பிணத்தையும் எழுப்பி விடலாம்.
தொண்டைமான் நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்தவர். “உன் மனைவி, குழந்தைகள் இறந்து விட்டனர், அவ்வளவுதான் போய்வா” என்று அலட்சியப்படுத்தி இருக்கலாம். ஆனால் கொடுத்த வாக்கு தவறக்கூடாது என்பது மனிதர்களின் தலையாய பண்பு. அதற்காகவே தொண்டைமான் மலையப்பனிடம் முழுநம்பிக்கை வைத்துச் சடலங்களை எழுப்பிவிட்டார்.
அதுபோல ஒரு நம்பிக்கை எனக்கில்லையே சுவாமி என்று முடித்தாள் நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com