ஆன்மிகம்

நீதியரசர் சனீஸ்வரர்!

வி. ராம்ஜி

சனி பகவானை மனமார வணங்கித் தொழுதால், நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் தகர்த்து அருள்வார் சனீஸ்வரர். சனிக்கிழமைகளில் சனி பகவானை தொடர்ந்து தரிசியுங்கள். தடைகளை விலக்கி, காரியத்தில் வெற்றியைத் தருவார் சனீஸ்வரர்.

இருக்கும் தெய்வங்களிலேயே சனி பகவான்தான் மிகுந்த கோபக்காரர். அதேசமயம், பாசக்காரரும் கூட. தவறு செய்பவர்களிடம் கோபம் கொள்வார். நல்லவர்களிடம் பாசம் பொழிவார். எமதருமராஜனின் சித்ரகுப்தன், நம் பாவ புண்ணியக் கணக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறானோ இல்லையோ... ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் சனீஸ்வரர். அதற்குத் தக்கபடியே நமக்குப் பலன்களையும் வழங்கி வருகிறார்.

தவறென்றால் தவறுதான். கண்டிப்பதிலும் கறார் காட்டுவதிலும் தண்டனை வழங்குவதிலும் சனீஸ்வரர் நீதியரசர்! ஆகவே, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள், சத்திய வாழ்க்கையை வாழ்பவர்கள், சனி பகவானைக் கண்டு எப்போதுமே பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

‘அட... நல்லதுக்கும் காலமில்லை. நல்லவங்களுக்கும் காலமில்லை’ என்றெல்லாம் பொருமுகிறவர்கள், சனிக்கிழமை நன்னாளில், சனீஸ்வரருக்கு உகந்த நாளில், கோயிலுக்குச் சென்று, நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சனீஸ்வரரை மனதார வேண்டுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மறக்காமல் அவருக்கு எள்தீபமேற்றி வழிபடுங்கள்.

‘சனீஸ்வரா... நான் எந்தத் தப்பும் பண்ணலைப்பா. நீதான் காப்பாத்தணும்’ என மனமுருகி முறையிடுங்கள். நல்லவர்களைக் காத்தருள்வதுதான் சனீஸ்வரரின் தலையாய வேலை!

ஆகவே, சனி பகவானை சனிக்கிழமைகளில் தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சனி பகவான், நம்மைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டால்தான் பிரச்சினை. நாம் சனீஸ்வரரையும் சனிபகவான் வழிபாட்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால்,  நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக, பலன் மேல் பலன்தான் நமக்கு!

சனி பகவான் இருக்கிறார். நல்ல விஷயங்களுக்கெல்லாம் எப்போதும் துணை நிற்கும் சனீஸ்வரர், நல்லவர்கள் பக்கமே நின்று, அருளும்பொருளுமாக அள்ளித்தருவார்!  

SCROLL FOR NEXT