ஆன்மிகம்

இறைத்தூதர் கதைகள் 02: எழு, எச்சரிக்கை கொடு

செய்திப்பிரிவு

மெதுவாக, ஆனால் நிதானமாக மக்காவின் வீடுகளில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. எல்லா இடங்களிலும் மக்கள் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களின் முன்னோடியான இபின் இஷாக், இஸ்லாமின் திருச்செய்தியை ஒவ்வொன்றாகத் தான் சந்தித்த தனிநபர்களிடம் மூன்று ஆண்டுகள் இறைத்தூதர் பகிர்ந்துகொண்டார் என்று சொல்கிறார்.

அதற்குப் பிறகு, ‘சுரா அல்-முதத்திர்’ வெளிப் பட்டவுடன், மக்களை எச்சரிக்கும்படி இறைவன் இறைத்தூதருக்குக் கட்டளையிட்டார். “ஓ, மேலங்கியால் சுற்றப்பட்டிருப்பவனே, எழுந்திரு, எச்சரிக்கைக் கொடு,” என்று இறைவன் இறைத்தூதரிடம் தெரிவித்ததாக இந்நிகழ்வை விளக்கியிருக்கிறது குர்ஆன்.

இந்தக் காலகட்டத்தில், இறைத்தூதரை வெளிப்படையாக மக்காவின் மக்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்களின் பகையும் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பொறுமையாகப் பொறுத்து கொள்ளும்படி இறைத்தூதருக்கு இறைவன் அறிவுறுத்தியிருந்தார். அதனால், இறைத்தூதரும் அவரது தோழர்களும் மக்காவுக்கு வெளியே அமைந்துள்ள தொலைதூர நகரத்துக்குச் சென்று ரகசியமாக வழிபட்டுவந்தார்கள்.

இறைத்தூதரின் பணிகளால் மக்காவில் இஸ்லாம் மார்க்கம் பரவத் தொடங்கியதால், குரைஷ் பழங்குடியினரின் தலைவர்கள் மகிழ்ச்சியற்று இருந்தனர். இறைத்தூதர் அவர்களின் மத நம்பிக்கைகள், வழிப்பாட்டு வழிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுதான் அதற்குக் காரணம்.

அடிப்படையில், இறைவனை மற்றவர்களுடன் தொடர்புப்படுத்தும் ‘ஷிர்க்’ வழி, ஒருவனே தேவன் என்பதை வலியுறுத்தும் ‘தவ்ஹீத்’ வழி இரண்டுக்கும் இடையிலான பிளவாக இது இருந்தது. இறைத்தூதரின் தந்தையும் தாத்தாவும் இறந்தபிறகு, அவரது மாமா அபு தாலிப் அவருக்குப் பாதுகாப்பாக இருந்தார். அதனால், மற்றவர்களால் அவருக்குத் தீங்கு செய்ய முடியவில்லை.

நபிகள் மீது புகார்

அரேபியாவில், அந்நாட்களில், ஓர் இனத்தவரின் பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்குப் பிறர் தீங்குவிளைவித்தால், அது ஒட்டு மொத்தமாக அந்தப் பழங்குடியினரிடம் மோதுவதைப் போன்று கருதப்பட்டது.

அதனால், இறைத்தூதரைப் பற்றி பேசுவதற்காகக் குரைஷ் தலைவர்கள் அபு தாலிப்பைச் சந்திக்க வந்தனர். அவரது மருமகன் முஹம்மது, தங்கள் தெய்வங்களைப் பழித்து பேசியதாகக் குற்றம் சாட்டினர்.

அத்துடன், தங்கள் முன்னோர்கள் அறியாமையின் காரணமாக கண்மூடித்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றினார்கள் என்றும், சரி எது, தவறு எது என்று ஆராய்ந்து பார்க்காமல் செயல்பட்டனர் என்று அவர் பேசிவருவதாகத் தெரிவித்தனர். இந்தக் காரியத்தைச் செய்யாமல் இறைத்தூதரை அபு தாலிப் தடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்,

அப்படியில்லாவிட்டால், அவர்களே இந்தப் பிரச்சினையை நேரடியாக இறைத்தூதருடன் தீர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று தெரிவித்தனர். இறைத்தூதருக்கு அபு தாலிப் வழங்கிவரும் பாதுகாப்பைத் திரும்பப்பெற வேண்டுமென்று அவர்கள் கூறினர். அப்போது, இறைத்தூதரின் பணிகளைக் கட்டாயப்படுத்தி நிறுத்துவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று குரைஷ் பழங்குடியினர் நினைத்தனர்.

- பயணம் தொடரும்

தமிழில்: என். கௌரி

(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட், தொடர்புக்கு: 96001 05558)

SCROLL FOR NEXT