ஆன்மிகம்

சுவாமிநாதா... அரோகரா!

செய்திப்பிரிவு

புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலங்களில் சுவாமிமலையும் ஒன்று.

முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில், சுவாமிமலை தனித்துவமானது. மலையே இல்லாத கும்பகோணத்தில் சிறியதொரு மலை மீது அமர்ந்திருக்கும் ஆலயம் இது.

இந்தக் கோயிலின் ஸ்தல புராணம் பிரமாண்டமானது.

பிருகு மகரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார். தன் தவத்துக்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களது சிறப்பை இழப்பார்கள் என மனதுக்குள் சங்கல்பம் போல் சாபத்தை ரெடியாக வைத்திருந்தார்.

பிருகு முனிவரின் தவ வலிமையால், ஏழேழு உலகும் தகித்தன. தேவர்கள் கிடுகிடுத்துப் போனார்கள். எல்லோரும் ஓடிவந்து, சிவபெருமானை வேண்டினார்கள். உடனே சிவனார், பிருகு முனிவரின் சிரசில் கைவைத்தார். தகிப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் முனிவரின் தவம் கலைந்தது. அவரின் ஆணைப்படி, சாபப்படி, சிவபெருமான் பிரணவ மந்திரத்தை மறந்தே போனார்! ஆக, பிருகு முனிவர், சிவனாருக்கே சாபமளித்தார்.

அதையடுத்து, முருகப்பெருமான், பிரம்மாவிடம் பிரணவத்தின் பொருள் என்ன என்று கேட்டதும் தெரியாததால் சிறை வைத்ததும்தான் தெரியுமே என்கிறீர்களா?

அப்போது பிரம்மாவுக்குப் பரிந்து பேசிய சிவனாரும் ,பிரணவப் பொருள் தெரியாமல் மாட்டிக் கொண்டார். பிறகு அப்பாவுக்கு பிரணவப் பொருள் சொல்லி ஞானகுருவெனத் திகழ்ந்தார்; அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாவானார் முருகப் பெருமான்!

அப்பா சிவபெருமானுக்கு மட்டுமா உபதேசம் செய்தார்?

தந்தைக்கு வலது காதில் பிரணவத்தின் பொருள் உபதேசித்த முருகப்பெருமான், இடது காதிலும் உபதேசம் செய்தாராம். ஏன்? ஈசனின் இடபாகத்தில் உமையவள் இருக்கிறாள்தானே. தன் அம்மாவுக்கும் பிரணவப் பொருள் தெரியட்டும் என்பதற்காக, சிவபெருமானின் இடதுகாதிலும் உபதேசம் செய்து அருளினார் என்கிறது சுவாமிமலை ஸ்தல புராணம்!

இப்பேர்ப்பட்ட சுவாமிமலையில் சஷ்டி நாளில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை, சுவாமிநாத சுவாமியை வணங்குவார்கள். நாளை சஷ்டி (8..6.19). இந்தநாளில், முருகப்பெருமானை வணங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் ஞானகுரு முருகப்பெருமான்!

SCROLL FOR NEXT