நம் புராணக் கதைகள் எல்லாமே, படைப்பின்போது, நமது பிரக்ஞையில் ஏற்பட்ட மலர்ச்சி பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கும் சாதனங்கள். தனிமனத்தின் வரையறைகளைக் கடந்த இந்த உண்மைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் அளவுக்குப் பெரும்பாலானவர்களின் பிரக்ஞை நிலை இன்னும் வளரவில்லை.
அதனால், கதைகள் வழியாக அந்த உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் இந்தக் கதைகள் வழியாகவே அவற்றின் உட்பொருளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
தன்னை வேண்டித் தவம் செய்த அசுரர்களுக்கு பிரம்மா நேரில் தோன்றி, அவர்கள் கேட்ட வரங்களைக் கொடுக்கிறார். அந்த வரங்களைப் பெற்றுக்கொண்ட அசுரர்கள், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல துன்பங்களை ஏற்படுத்திய கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அது ஏன் அசுரர்கள் பிரம்மாவிடம் வரம் கேட்கிறார்கள்? அவரும் ஏன் அப்படி வரங்களை வாரி வழங்குகிறார்? பிரம்மா யார்?
மனிதப் பிரக்ஞை இன்னும் தன் சுய நிலையை அடையவில்லை. பிரக்ஞை இப்போதிருக்கும் நிலையில் பெருமளவுக்கு இன்னும் மனத்தின் பிம்பங்களைச் சார்ந்துதான் இயங்குகிறது. தூய பிரக்ஞை என்பது இன்னும் நம்மில் பலர் அறியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
பிரக்ஞை மனத்தின் பிம்பங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்குள் தானே விழித்துக்கொள்ளும் போதுதான் தூய்மையான ஒரு நிலையை அடைகிறது. அப்படியாக அது விழித்துக்கொள்ளும் பட்சத்தில் மனிதன் பரிணாமத்தின்
புதியதொரு நிலையை, புதியதொரு தளத்தை அடைகிறான். அப்போது அவனுடைய பிரக்ஞையும் பார்வையும் புதிய வீச்சுகளை அடைகின்றன. இன்னும் விழிப்புக் கொள்ளாத நிலையிலிருக்கும் பல புதிய சக்திகள் அவனுக்கு அப்போது வந்து சேர்கின்றன.
‘நான்' என்னும் உணர்வு, பிரக்ஞையின் அடிப்படைத் தன்மையாக இருப்பதால், தூய பிரக்ஞை நிலையில்தான் சுத்தப் பிரக்ஞையான 'நான்' உணர்வு நிலைக்க முடியும். இந்த நிலைதான், பிரபஞ்சத்தின் முதல் சுயவுணர்வுதான், பிரம்மா.
அசுரர்களுக்கு ஏன் வரம்
சரி, ஆனால் அசுரர்களுக்கு ஏன் அம்மாதிரியான வரங்கள் கிடைக்கவேண்டும்? ஆணாலோ பெண்ணாலோ, பகலிலோ இரவிலோ மரணம் வரக்கூடாது என்பது போன்ற வரங்கள் ஏன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்? அது மட்டுமல்ல, அப்படி ஒரு உன்னத நிலையை அடைந்த பிறகு எப்படி அசுரர்கள் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் செய்கிறார்கள்? அது எப்படி சாத்தியம்?
தேவர்கள், அசுரர்கள் என்று தனியாக யாருமில்லை. அவை ஆழ்மனப் பிரக்ஞையின் அம்சங்கள். சுயவிழிப்பு அடைந்த ‘நான்' என்பது பிரக்ஞையின் மலர்ச்சியில் ஒரு கட்டம். அவ்வளவுதான். அது இறுதியான முழு விழிப்பல்ல. அதுவே முழுமுதற் பொருளல்ல.
தூய்மையான 'நான்' விழித்து நிலைப்படும்போது புதிய சக்திகள் வெளிப்படுகின்றன. ஆனால் அந்தச் சக்திகளை உள்ளே இருக்கும் வாசனைகள் பற்றிக் கொண்டுவிடுகின்றன. புதிய சக்திகளை துஷ்பிரயோகம் செய்யாத அளவுக்கு அக முதிர்ச்சி உடனே வந்துவிடுவதில்லை.
'நான்' என்பது சிருஷ்டியின் மையம். ஆனால் பரம்பொருள் சிருஷ்டிக்கு அப்பால், முதலும் முடிவும் இன்றி, காலமற்று நிற்கும் வஸ்து. அதை அறிந்துகொள்ளும் வரைக்கும் வாசனைகளுக்கு ஆட்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது.
ஹிரண்யன் கேட்ட வரம்
ஹிரண்யன் பிரம்மாவிடம் தனக்கு எப்போதும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தைத்தான் கேட்டான். ஆனால் பிரம்மா அவ்வாறான வரத்தைத் தருவது தன் சக்திக்கு உட்பட்டதல்ல என்றும், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கு மட்டுமே தன்னால் வரமளிக்க முடியும் என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகுதான், மனிதனாலோ விலங்காலோ, பகலிலோ இரவிலோ, வீட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.
மரணம் பிரம்மாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல. பிரம்மா சிருஷ்டி கர்த்தா. அவர் சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவரல்ல. மரணத்தைப் பரம்பொருள் மட்டுமே முடிவு செய்ய முடியும். மரணமற்ற பெருவாழ்வைப் பரம்பொருள் மட்டுமே அளிக்க முடியும்.
வாசனைகள் எல்லாம் அழிந்து, 'அகம்'பாவம் அழிந்து, பரிபூரண சரணாகதி அடைந்த பின்னரே அது கிடைக்க முடியும்.
தூய்மையான 'நான்' என்னும் நிலையைத் தீண்டிய பிறகே தான் யார், தனக்கு ஆதாரமாக இருப்பது என்ன என்று அறிந்து கொள்ளும் வேட்கை தொடங்குகிறது. அதன் பிறகுதான், ‘நான்‘ உணர்வில் லயித்துத் தன் வாசனைகளை முற்றிலும் விடுத்து, தனக்குள் தான் ஒடுங்க முடியும்.
அத்தகைய உள்ளத்துடன் தன்னையே பரம்பொருளிடம் ஒப்புவித்த நிலையில் மனம் அடங்கிய பின்பு, பரம்பொருளின் அருளால் ஆத்ம தரிசனம் கிட்ட முடியும். மரணத்தைக் கடந்த நிலையை அடைவது அதன் பிறகுதான். இந்த நிலையைத்தான் திருமூலர்,
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவதில்லை நமனுமங்கில்லை
இடும்பையுமில்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்று விட்டோர்க்கே
என்று தெளிவாகச் சொல்கிறார். அதன்பிறகுதான் 'படும்பயன்' இல்லை. அப்போதுதான் கர்மவினை என்னும் காலச் சுழற்சியின் பிறப்பு-இறப்பு என்னும் சக்கரத்திலிருந்து விடுபட முடியும்.
அன்பு உள்ளங்கள்
இன்னொரு விஷயம். அசுரர்கள்தான் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்கிறார்கள். தனக்கு அந்தச் சக்தி வேண்டும், இந்தச் சக்தி வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள்.
பரம்பொருளின்மீது மாறாத பக்தி கொண்டு அதை அறிந்துகொள்ள முயன்ற எல்லோரும் தவம் செய்தது நாராயணனைக் குறித்தோ, பரமேஸ்வரனைக் குறித்தோதான் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பரம்பொருளின் தரிசனமும் அதில் ஐக்கியமாகிவிடும் விழைவும் வேட்கையும் கொண்டவர்கள் தனக்கென்று எந்த சக்தியையும் வேண்டுவதில்லை. இருக்கும் எதுவுமே தன்னுடையதல்ல என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் தன்னையே பரம்பொருளுக்கு முழுமையாக அர்ப்பணித்து, ஆத்ம தரிசனம் மட்டுமே வேண்டி நிற்கும் அன்பு உள்ளங்கள் அவை.
புராணக் கதைகளின் உட்பொருளைப் புரிந்துகொண்டு, நம்மை நாம் புரிந்து கொள்வதற்கு உதவும் வரைபடமென அவற்றைக் கொள்வோமானால் அவற்றின் முழுப் பயனை நாம் அடைய முடியும்.
(வரைபடம் நீளும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com