ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளிருக்கும் அம்மன் ஆதிபராசக்தியாக காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரித் திருவிழா கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறுவதைப் போல சேதுபதி மன்னர்கள் காலம்தொட்டே வெகுச் சிறப்பாக இன்றும் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு தினமும் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை பாட்டரங்கம், பொம்ம லாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும், தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
நவராத்திரி என்றால் கொலுப்படிகள் இல்லாமலா?
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் ஐதீகப்படி அமைக்கப்பட்டிருக்கும் கொலுப்படிகளை பார்க்க மக்கள் நவராத்திரி திருவிழா தினங்களில் பக்தர்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர்.
நிறைவுநாளான தசரா பண்டிகையையொட்டி கோதண்டராமர், கன்னிகாபரமேசுவரி, குண்டுக்கரை முருகன், முத்து ராமலிங்கசுவாமி, கோட்டை வாசல் விநாயகர், முத்தாலம்மன் உட்பட பல்வேறு ஆலய உற்சவ மூர்த்திகள் அலங்காரங்களுடன், ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடனும் மாலையில் அரண்மனையிலிருந்து புறப்பட்டு கேணிக்கரை பகுதியை வந்தடைவார்கள்.
பின்னர் ஆலய உற்சவமூர்த்திகள் வரிசையாக நிற்க ராஜராஜேசுவரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் மேள தாளங்கள், வாணவேடிக்கையுடன் மகர்நோன்பு திடலை வந்தடைகிறது. அங்கு ராஜராஜேசுவரி அம்மன் மகிஷா சுரமர்த்தினி திருக்கோலத்தில் சூரனை அம்பு எய்தி வதம் செய்த அற்புத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாக்களில் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் உட்பட ராமநாதபுரம் சமாஸ்தானத்தைச் சார்ந்தவர்களும் வைகை கரையோரத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கிறனர்.
மன்னரும், மக்களும் வெவ்வேறு இடத்தில் பிறந்தாலும் ஓரணியில் இத்திருவிழா மூலம் இன்றும் ஒன்று கலக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
‘தி இந்து’ நவராத்திரி மலர் 2014-லிருந்து