பரம்பொருளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவு என்ன?பரமாத்மா என்பதும் ஜீவாத்மா என்பதும் வேறு வேறு என்று துவைதம் கூறுகிறது. இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.
இவற்றுக்கு இடையில் பாலம்போல நிற்கிறது விசிஷ்டத்வைதம்.இரண்டும் வேறு வேறுதான். ஆனால் ஜீவாத்மா தன் சாதகத்தாலும் பக்தியாலும் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பது விசிஷ்டத்வைதம்.
இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையா என்றால் ஆம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.
நாம் காணும் உலகம் வித்தியாசங்களின் சங்கமம். பல விதமான வேற்றுமைகள் நிலவுகின்றன. எல்லைக்குட்பட்ட இந்த உலகம், நமது வாழ்க்கை, நமது திறன்களின் எல்லைகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
இந்த வேற்றுமைகளை நுணுகி ஆராய்ந்து பார்க்கும் ஒருவர் இவற்றுக்கு அடிச்சரடாக ஓர் ஒருமையைக் காணவும் வாய்ப்பு இருக்கிறது. இதை உணர்ந்த ஒருவருக்கு அனைத்தும் அடிப்படையில் ஒன்றுதான் என்ற எண்ணம் எழும்.
துவைதிகள் இருமையாகக் காணும் அதே விஷயத்தை அத்வைதிகள் ஒருமையாகக் காண்கிறார்கள். கோணங்கள் மாறுபடுகின்றன. காட்சிகளும் மாறுபடுகின்றன.
விசிஷ்டாத்வைதிகள் இவை இரண்டுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கிறார்கள். இருமை என்ற கண்கூடான உண்மையிலிருந்து ஒருமை என்னும் சூட்சுமமான நிதர்சனத்தைக் கண்டடைவது சாத்தியம் என்கிறார்கள்.
நாம் உண்ணும் உணவை வைத்து இந்த மூன்று நிலைகளையும் வேதாத்ரி மகரிஷி விளக்குகிறார்.
நமக்கு முன் இருக்கும் உணவு - துவைதம்
வயிற்றுக்குள் உணவு - விசிஷ்டாத்வைதம்
உணவு உடலில் சத்தாக மாறிக் கலந்துவிட்ட நிலை - அத்வைதம்
என்று அவர் விளக்குகிறார். இதே விஷயத்தை ஆஞ்சநேயர் வேறு விதமாகக் கூறுகிறார். ராமனிடம் அவர் கூறுவதாக அமைந்த ஒரு கூற்று இதை அழகாக விளக்குகிறது என்று சுவாமி சின்மயானந்தர் குறிப்பிடுகிறார்.
உடல் அளவில் நான் உன் அடிமை
மன அளவில் நான் உன்னில் ஒரு பகுதி.
ஆத்மாவின் அடிப்படையில் நீயே நான்
என்று அனுமன் கூறுவதில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய அனைத்தும் இருப்பதை உணரலாம்.
தத்துவங்களுக்குள் முரண்களைக் கண்டு விவாதிப்பது ஒரு விதமான தேடல். தத்துவங்களுக்குடையே ஒருங்கிணைவைக் கண்டு அவற்றினூடே பேருண்மையை உணர முயல்வது வேறு விதமான தேடல். ஒருங்கிணைவைக் காணும் மனதின் பிரதிநிதியாக அனுமன் இருக்கிறார்.