ஒ
ரு குறிப்பிட்ட வேலையைச் செய்து கொடுப்பதில் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் வல்லவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தனக்காகச் செய்து தரக் கோரி ஒரு நிறுவனம் அவரை வேண்டுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். இப்போது இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். ஒப்பந்தத்தில், நிறுவனத்தார் வழங்க வேண்டிய ஊதியம் எவ்வளவு, செய்து தரவேண்டிய வசதிகள் என்னென்ன என்பன போன்றவையும், தொழில்நுட்பவியலாளர் செய்து தர வேண்டிய வேலை எத்தகையது, வேலையை நிறைவேற்றித் தர வேண்டிய கால அளவு என்ன என்பன போன்றவையும், பிரிவுகளாகக் கண்டு எழுதப்படும்.
ஒப்பந்தத்தை இரு தரப்பினரில் எவர் ஒருவர் மீறினாலும், எழுதிக்கொண்டபடி அதை நிறைவேற்றித் தர வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, வழக்குத் தொடர்ந்து, சட்டப்படியான நீதியைப் பெறலாம். எனவே, ஒப்பந்தம் என்று ஒன்று செய்துகொள்ளப்பட்ட பிறகு, அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.
இந்தக் கட்டாயத்துக்கு ஒரு விதிவிலக்கும் உண்டு. Force Majeure அல்லது Vis Major, அதாவது, ‘Act of God’ அல்லது ‘கடவுளின் செயல்’ என்ற தலைப்பில், ஒப்பந்தத்தின் பொதுப் பிரிவுகளில் ஒன்றாக இந்த விதிவிலக்கைச் சேர்ப்பார்கள். போர், ஆழிப் பேரலை, நிலநடுக்கம், இனக் கலவரம் போன்ற, இரு தரப்பினரின் கையையும் மீறிய, எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும்போது, நிறுவனத்தார் கொடுக்க வேண்டிய ஊதியம் தடைபடலாம்; அல்லது, தொழில்நுட்பவியலாளர் செய்து தர வேண்டிய வேலை தடைப்படலாம். தர வேண்டியதை ஏன் தரவில்லை, செய்ய வேண்டியதை ஏன் செய்யவில்லை என்று இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளவோ வழக்காடி நீதி பெறவோ முடியாது.
தன் கையை மீறிய இத்தகைய செயலைக் கடவுள் நம்பிக்கையற்ற நம்முடைய அரசியல் தலைவர்கள் சிலரின் சொற்களில் குறிப்பிடுவதானால், இது ‘காலத்தின் கட்டாயம்.’ ஒன்றும் செய்வதற்கில்லை. அவர்களைப் போலவே கடவுள் நம்பிக்கையற்ற வேறு சிலர் அதை ‘ஊழ்’ என்றோ ‘விதி’ என்றோ அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
திருமூலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அல்லவா? எனவே, இத்தகைய கை மீறிய செயல்களைக் ‘காலத்தின் கட்டாயம்,’ ‘ஊழ்,’ ‘விதி’ ஆகிய சொற்களால் அடையாளப்படுத்தாமல், கடவுளின் செயல் என்று அடையாளப்படுத்துகிறார்:
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்;
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.
(திருமந்திரம் 45)
கடல் சூழ்ந்த இந்தப் பேருலகம் விதியின் வழியில்தான் நடக்கிறது. இன்பதுன்பங்கள் எல்லாமே விதியின் வழியில்தான் வருகின்றன. அப்படியானால் என்னை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி மூச்சடைக்கச் செய்யும் இந்த விதியை நான் வெல்வது எப்படி என்று கேட்பீர்களேயானால், விதியை வகுக்கிறவன் இறைவன். துதி வழியில் அவனைக் காணலாம். ஆகவே, அவனைப் போற்றித் துதியுங்கள். இருட்டில் கண்டுபிடிக்க முடியாதவற்றையெல்லாம் பகலவன் தன் ஒளியால் காட்டித் தருவதுபோல, நீங்கள் அடைய வேண்டியவற்றையும், அதற்காகச் செய்ய வேண்டியவற்றையும் பதியாகிய இறைவன் பளிச்சென்று காட்டித் தருவான்.
மற்றொரு பாட்டின் வழியாகவும் இந்தக் கருத்தை நிலைநிறுத்துகிறார் திருமூலர்:
ஆவன ஆவ; அழிவ அழிவன;
போவன போவ; புகுவ புகுவன;
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்,
ஏவன செய்யும் இளங்கிளை யோனே. (திருமந்திரம் 504)
ஆக வேண்டியவை ஆகும்; அழிய வேண்டியவை அழியும்; போக வேண்டியவை போகும்; புக வேண்டியவை புகும். எது ஆகும், எது போகும் என்பதெல்லாம் நம்மால் கண்டறிய முடியாத, நமது சிற்றறிவுக்கு எட்டாத செய்திகள். இறைவன் காட்டித் தந்தால் இவற்றை நாம் காணலாம்; இறைவன் அறிவித்தால் நாம் இவற்றை அறியலாம். அவ்வாறு இறைவனால் காட்டப்பட்டு முழு உண்மையையும் கண்டவர்களே பேரறிவாளிகள்.
மேற்படிக் கடவுள் செயலை அல்லது ஊழை, ஔவையும் ஒப்புக்கொள்கிறாள்:
அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா (மூதுரை, 6)
ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்று தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், ஆக வேண்டிய காலம் வந்தால்தான் ஆகும். மரம் உயரமாக வளர்ந்துவிட்டது என்பதற்காக உடனே பழம் பழுக்கத் தொடங்கிவிடுமா? பூப்பூத்துக் காய் காய்த்துப் பழுக்கிற காலத்தில்தான் பழுக்கும் என்று சொல்வதன்மூலம், உங்கள் அவசரத்துக்கும் முயற்சிக்கும் காரியம் நடந்து விடாது; நடக்கிற காலத்தில்தான் நடக்கும் என்று துலக்கப்படுத்துகிறாள் ஔவை.
தத்துவக்காரர்களே! ஆன்மிகவாதிகளே! நம்புகிறவர்களே! நம்பாதவர்களே! ஊழ், விதி, கடவுள் செயல், காலத்தின் கட்டாயம் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அதை நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்லுங்கள்:
எது நிகழ்ந்தாலும் அதற்குக் காரணம் அதைச் செய்தவர் அல்லர்; கடவுள், அல்லது ஊழ், அல்லது விதி, அல்லது காலத்தின் கட்டாயம் என்று சொல்வது நல்ல சிந்தனையா? அவ்வாறு சொல்வது தனிமனிதச் செயலூக்கத்தை முறித்துப் போட்டுவிடாதா? எல்லாமே விதித்தபடிதான் நடக்கும் என்றால், நான் ஏன் செயலைச் செய்ய வேண்டும் என்று மனம் சோர்ந்து ஒருவன் படுத்துக்கொண்டுவிட மாட்டானா என்றால், சார்புகளைக் கடந்த பேராசான் திருவள்ளுவர் விடை சொல்கிறார்:
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620).
ஊழ் வலியதுதான். நீங்கள் ஆற்றுகிற செயலின் பயனை நீங்கள் அடைய முடியாமல் தடைப்படுத்தும் அளவுக்கு வல்லமை உள்ளதுதான். ஆனாலும், தளர்ச்சியடையாமல் தொடர்ந்து முயல்க. ஒரு முறை, இருமுறை அல்ல, ஓராயிரம் முறையானாலும் முயல்க. அயராமல் செய்கிற முயற்சி உரிய பயனைத் தரும்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619).
செய்த வேலைக்கான பயனைப் பெற விடாமல் ஊழ் அல்லது தெய்வம் தடுத்தாலும், முயற்சியின் அளவுக்கான கூலியாவது கிடைக்காமல் போகாது.
வள்ளுவரும் ஊழை முன்னிறுத்திப் பேசியவர்தாம். ‘ஊழைவிடப் பெரியது வேறு என்ன இருக்கிறது?’ என்று மலைத்தவர்தாம். ஆனால், அதற்காக முயற்சியை விட்டுக் கொடுக்காதவர்.
‘உடம்பு முழுக்க எண்ணெய்யைத் தடவிக்கொண்டு உருண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்’ என்று இந்தச் சிக்கலான சிந்தனையை மிக எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வார்கள் நம் மக்கள். உருளோ உருளென்று உருண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்பது ஊழ். உருளவே இல்லை என்றால் ஒன்றுமே ஒட்டாது என்பதும் தெளிவு.
கை மீறிய காரியங்களைக் ‘கடவுள் செயல்,’ ‘ஊழ்,’ ‘விதி’ என்று என்ன பெயரில் வேண்டுமானாலும் நியாயப்படுத்திக் கொள்க. ஆனால், அதற்காக மனம் தளர்ந்து தேங்கிவிடாது தொடர்ந்து முயல்க. முயற்சி திருவினை ஆக்கும்.
(திருமூலரைத் தொடரலாம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com