பல ஆண்டுகள் தவம் புரிந்த பிறகு, பிரம்மா நேரில் தோன்றி அவன் கோரிய வரத்தைக் கொடுத்தார். முனிவர் கோபத்துடன் அவனைப் பார்த்து, 'சாம்பலாகப் போவாய்!' என்றவுடன் அவன் எரிந்து சாம்பலாகிப் போனான். இவ்வாறு புராணக் கதைகளில் படிக்கிறோம். என்ன பொருள் இதற்கு? ஒருவரை ஒருவர் இப்படிச் சபிக்க முடியுமா?
இந்திரன் கௌதமரின் உருவில் வந்து அகலிகையுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அவள் கல் லாகப் போகட்டும் என்று கௌதமர் சாபம் கொடுத்தார். பல்லாண்டுகள் கல்லாக இருந்த அகலிகை பிறகு ராமபிரானின் பாதம் பட்டுச் சுய உருவை அடைந்தாள் என்று ராமாயணத்தில் படித்திருக்கிறோம்.
‘முனிவர் சாபம் கொடுத்ததால் அவருடைய தவவலிமை குறைந்து போயிற்று,' என்றும் படிக்கிறோம். தவவலிமை என்று உண்மையில் ஏதேனும் இருக்கிறதா? விஞ்ஞான வளர்ச்சி இந்த அளவுக்கு ஏற்பட்ட பின்னரும் இதையெல்லாம் நம்புவதற்கு இடமிருக்கிறதா?
பிரபஞ்சம் பொருளால் ஆனது
இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்துகொண்டாக வேண்டும். பொதுவாக விஞ்ஞானம் பிரபஞ்சம் பொருளால் ஆனது என்று நம்புகிறது. அந்த அடிப்படையில்தான் அதன் ஆராய்ச்சிகள் அனைத்தும் நிகழ்கின்றன.
ஆனால் பொருள் என்பது என்ன என்று விஞ்ஞானம் இன்னும் கண்டுபிக்கவில்லை. பொருளும் சக்தியும் அடிப்படையில் ஒன்றுதான் என்று மட்டும் அது கண்டுபிடித்திருக்கிறது. பொருளும் சக்தியுமாக வியாபித்திருப்பது எது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெகு சில விஞ்ஞானிகள் புதிய திசையில் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
புதிய உண்மைகளை அவர்கள் கண்டறிந்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாகப் பல விஞ்ஞானிகள் இன்னும் பழைய நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் பார்த்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
பிரபஞ்சம் பொருளால் ஆனதா, பிரக்ஞையால் ஆனதா? விஞ்ஞானம் அறிவையும் சிந்தனையையும் மட்டுமே அறுதியான உபகரணங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
பொதுமனம் விஞ்ஞானம் சொல்வதை அப்படியே நம்பிவிடுகிறது. மேற்கத்திய உலகம் புறவயமாக இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருந்த நேரத்தில், நம் ரிஷிகள் அகவயமாக ஆராய்ந்து பெரும் உண்மைகளை அறிந்துகொண்டனர்.
அந்தப் பெரும் உண்மைகளைச் சுய பரிசீலனையோ புரிதலோ இல்லாமல் வெறும் நம்பிக்கையாகப் பலர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு சாரார் அவற்றை அர்த்தமற்ற மூடநம்பிக்கையென்று ஒதுக்கிவிடுகிறார்கள்.
ஆனால் வெகுசில விஞ்ஞானிகள் பொதுவிஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகளை மீறிப் பார்த்திருக் கிறார்கள். ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்னும் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (Phycisist), 1925ம் ஆண்டு வாக்கில், ''புதிய விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது,, இந்தப் பிரபஞ்சம் ஒரு மாபெரும் மனத்தில் இருக்கக்கூடிய எண்ணத்தைப்போல் இருக்கிறது,'' என்று சொல்லியிருக்கிறார்!
பிரக்ஞை கொண்ட சக்தி
இதுதான் கிட்டத்தட்ட நம் ரிஷிகள் கண்டுபிடித்துச் சொன்னதற்கு மிகவும் நெருக்கத்தில் வருகிறது. 'பிரபஞ்சம் பிரக்ஞையால் ஆனது. பிரக்ஞை என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தி.
இந்தச் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது; ஒவ்வொரு கணமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சக்தி, சுயப்பிரக்ஞை உள்ளது. பிரபஞ்சம் மறைந்து போனா லும் இந்தச் சக்தி மட்டும் தொடர்ந்து காலமற்று எப்போதும் இருந்து கொண்டிருக்கும்,' என்றார்கள் ரிஷிகள்.
ரிஷிகள் தவத்தில் இருக்கும்போது இந்த அடிப்படைச் சக்தி அவர்களுக்குள் சேருகிறது. இந்தச் சக்தி ஆக்குவது மட்டுமில்லாது அழிக்கவும் கூடியது. இதனால்தான் வேண்டும் வரங்களையோ, வேண்டாத சாபங்களையோ அவர்களால் தர முடிகிறது.
அவர்களுடைய சங்கல்பம் (intention) பிரபஞ்ச சக்தியின் சங்கல்பத்துக்கு - நோக்கத்துக்கு - இசைவாக இயங்கும்போது அவர்களுடைய சக்தி குறைவதில்லை. ஆனால் பிரபஞ்ச சங்கல்பத்துக்கு மாறாக அவர்களுடைய சங்கல்பம் செயல்படும்போது - அதாவது சாபம் கொடுக்கும்போது - அவர்களுடைய சக்தி குறைந்துவிடுகிறது.
எது கேட்கிறது?
பிரபஞ்ச சிருஷ்டி இந்தச் சக்தியின் இயக்கமேயாதலால் அவர்கள் நினைப்பது நிச்சயமாக நிறைவேறும். இந்தக் காரணத்தால்தான் பெரும் ஞானிகளிடம் நம் குறைகளைச் சொல்லும்போது அவை நீங்கி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இது ஒருவிதத்தில் உண்மைதான். ஏனென்றால், அவர்கள் வலிந்து எதுவும் செய்வதில்லை. நாம் சொல்லும் குறை களைக் கேட்கும்போது அவர்கள் தம் தனிமனத்திலிருந்து கேட்பதில்லை.
பிரபஞ்சப் பிரக்ஞை தான் அதைக் கேட்கிறது. அதனால் அந்தக் குறை தீர்ந்து நன்மை விளைகிறது. இந்த விஷயத்தில் ஞானிகள் பிரபஞ்ச சக்தி இயங்குவதற்கு ஒரு சாதனமாக மட்டுமே இருக்கிறார்கள். இந்தச் சக்தி நமக்குள்ளும் நிறைந்திருந்து இயங்கிக் கொண்டிருப்பதால், நாமே நம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியும். ஆனால், நம் தனிப் பிரக்ஞை, பிரபஞ்சப் பிரக்ஞையோடு இசைந்து இயங்கினால்தான் இது நடக்க முடியும்.
சங்கல்பம் என்பது வெறும் சடங்கோ, அல்லது மனம் சார்ந்த விஷயமோ அல்ல. மிகவும் ஆக்கப்பூர்வமானதொரு இயக்கம் அது. முழு மனத்தோடு நாம் என்ன நினைத்தாலும் அந்தக் கணத்திலேயே அது நடப்பதற்கான இயக்கம் தொடங்கிவிடுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நம்மால் எந்த ஒரு விஷயத்தையும் முழுமனதோடு நினைக்க முடிவதில்லை என்பதுதான். ஒன்றை நினைக்கும்போதே அதற்கு நேர்மாறான வேறொரு விஷயத்தையும் நம் மனம் நினைத்துவிடுகிறது!
சற்று நேரம் நம் மனம் இயங்கு வதை நாம் கவனித்துப் பார்க்க முடிந்தால், இது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். இப்படிக் கவனித்துப் பார்ப்பதற்குக் கடினமான பயிற்சி தேவை. மிகுந்த சக்தியும் தேவை.
ஆனால் நம்முடைய சக்தியின் பெரும்பகுதி ஒவ்வொரு கணமும் பொறாமை, கோபம், ஆற்றாமை, ஏக்கம், பகைமை உணர்வு, ஆசை, பயம், வன்முறை, அகச்சிக்கல் என்று பலவிதமாக விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது.
அகச் சக்தி வளர்ந்து பெருகுவதற்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது நாம் செய்யவேண்டிய ஒரு விஷயம் அல்ல. ஒன்றும் செய்யாமல் உள்ளே கவனத்துடன் 'இருக்க' நாம் பயிலவேண்டிய ஒரு விஷயம் அது.
அப்படி 'இருக்கும்போது' ஆக்க சக்தி தானாக உள்ளே பெருகுகிறது. அப்படிப் பெருகும் சக்தியை நாம் சுயக்காரணங்களுக்குப் பயன் படுத்தாமல் இருந்தால் ஒரு நிலையில் பிரபஞ்ச சங்கல்பம் நம் வழியாக நடக்கத் தொடங்கிவிடும். அதுதான் நம் பிறப்பின் உண்மையான பயன்.
(ஆக்கம் பயில்வோம்)
கட்டுரையாளர் :
sindhukumaran2019@gmail.com