கர்னாடக இசைப் பாடகர்களில் மதுரை சோமுவின் `ஃபுல் பென்ச்’ இசை நிகழ்ச்சிகளைக் காண 70-80களில் பெரும் திரளான ரசிகர்கள் கூடுவார்கள்.
மதுரை சோமுவின் கச்சேரியில்தான் கச்சேரி மேடையிலும் பக்கவாத்தியம், உப பக்கவாத்தியங்கள், கொன்னக்கோல் என்று பல வாத்தியங்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள். கச்சேரி மேடைக்கு எதிரிலும் எண்ணற்ற ரசிகர்கள் திரண்டிருப்பார்கள்.
அசாத்தியமான அவருடைய குரல் வளத்துக்கு நிறைய உதாரணங்களை சொல்வார்கள். அவருடைய `என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.. இன்னும் என்ன சோதனையா முருகா’ பாடலை உள்ளம் உருக கேட்ட பாக்கியவான்களுக்குத்தான் மதுரை சோமுவின் இசையில் எப்படிக் கரைந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
ஆனையாம்பட்டி ஆதிசேஷய்ய அய்யர் எழுதிய இந்தப் பாடலை அன்றைக்குக் கச்சேரி மேடைகளில் லால்குடி ஜெயராமன் வயலின், சி.எஸ்.முருகபூபதி (மிருதங்கம்) போன்ற இசை மேதைகளுடன் பாடியிருப்பார் மதுரை சோமு.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் பாடலை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆதி என்னும் இளைஞர் மதுரை சோமு எனும் மேதைக்கு இசை அஞ்சலியாகப் பாடி வெளியிட்டிருக்கிறார். அவருடைய இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீலமணி எனும் அரிய ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாடல் இது. மெலிதாக பாஸ் கிடார், மிக மிக நுட்பமாக டிரம்ஸின் ஹையட் ஒலிக்க, கலிபோர்னியாவின் லுகுனா கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகளே தாளமாகி ஆதி பாடும் இந்தப் பாடலுக்கான காலப் பிரமாணத்தைத் தீர்மானிக்கின்றன.
என்னகவி பாடினாலும் பாடலைக் காண இணையச் சுட்டி: