ஜென் குரு சோயன்சாவின் ஆசிரமத்தில் எல்லாருக்கும் பிரியமான செல்லப்பூனை கட்ஸி இறந்துபோய்விட்டது. சோயன்சாவின் மாணவர்களில் ஒருவரின் ஏழு வயது மகளை அந்த மரணம் பாதித்தது. அவள் நேராக சோயன்சாவிடம் சென்றாள்.
“என்ன நடந்தது கட்ஸிக்கு? அது எங்கே போனது?”
“நீ எங்கேயிருந்து வந்தாய்”
“நான் எனது அம்மாவின் வயிற்றிலிருந்து வந்தேன்.”
“உனது அம்மா எங்கிருந்து வந்தார்?”
அந்த ஏழு வயதுச் சிறுமி அமைதியானாள்.
“இந்த உலகுக்கு வரும் எல்லாமும் ஒரே வஸ்துவிலிருந்துதான் வருகின்றன. அது ஒரு பிஸ்கெட் தொழிற்சாலை போன்றது. அங்கே சிங்கம், புலி, யானை, மனிதர்கள் வடிவத்தில் பிஸ்கெட்கள் தயாரிக்கப்படும். அதற்கு வெவ்வேறு வடிவங்கள், வெவ்வேறு பெயர். ஆனால் அது ஒரே மாவிலிருந்து வருபவை. அதனால் நீ பார்க்கும் பூனை, நபர்கள், மரம், சூரியன் எல்லாம் ஒன்றுதான். மனிதர்கள் வார்த்தைகளை உருவாக்குகிறார்கள்.”
“நான் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதில்லையா.”
“பிரமாதம். உன்னிடம் யாராவது வந்து புத்தரென்றால் என்னவென்று கேட்டால் என்ன சொல்வாய்?”
சிறுமி அமைதியாக இருந்தாள்.
சோயன்சா, அதே கேள்வியைத் தன்னிடம் கேட்கச் சொன்னார்.
“புத்தர் என்றால் என்ன?”
சோயன்சா தரையில் விழுந்தார்.
சிறுமி சிரித்தாள்.
சோயன்சா அதே கேள்வியைத் திரும்பக் கேட்டார்.
சிறுமி தரையில் விழுந்தெழுந்து சிரித்தாள்.
“வேறு ஏதாவது கேள்விகள்?”
“கட்ஸி எங்கே போனதென்று சொல்லவேயில்லை.”
சோயன்சா குனிந்து அவளது கண்களை நோக்கி, ’உனக்கு ஏற்கெனவே தெரியும்.” என்றார்.
சிறுமி தரையில் விழுந்தாள். எழுந்து சிரித்தாள்.