‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய ஸ்ர்வ ஆமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:’
திருச்சி ஸ்ரீ ரங்கநாதருக்கு ஒரு சமயம் உடல்நலம் குன்றிய நேரத்தில், மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி பகவான் மருத்துவராகச் சென்று சிகிச்சை அளித்துக் குணமாக்கியுள்ளாராம். அந்த வகையில் உலகத்தையே காக்கும் ஸ்ரீ ரங்கனுக்கு வைத்தியம் பார்த்த முதல் மருத்துவரான தன்வந்திரி பகவானின் மூல மந்திரத்தை உச்சரித்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், கேரள மாநிலத்தில் நெல்வாய் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் மட்டும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. தனிக் கோயில் இல்லை.
வேலூர் மாவட்டம் வாலாஜாவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரிஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது. எட்டு அடி உயரமுள்ள தன்வந்திரி பகவான் மூலவராக நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், அமிர்தகலசம், சீந்தில் கொடி ஏந்தியவராக பத்மபீடத்தில் நின்றபடி பக்தர்களின் நோய் நொடிகளைத் தீர்ப்பவராக அருள்பாலிக்கிறார்.
2003-ம்ஆண்டு தொடங்கி 2004-ம் ஆண்டுவரை 665 நாட்கள் ஏறக்குறைய இரண்டு லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் கரிக்கோல யாத்திரையாக மூலவர் விக்கிரகம் எடுத்துச் செல்லப்பட்டது.
105 நாடுகளைச் சேர்ந்த 47 லட்சம் மக்கள் எழுதி அனுப்பிய 54 கோடி மகாமந்திரங்கள் யந்திரங்களாகப் பதிக்கப்பட்டு 2004-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஸ்ரீ தன்வந்திரி ஆலயத்துக்குக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
தன்வந்திரி பீடத்தில் பிற சன்னிதிகளும் விரிவடையத் தொடங்கின. சயனக் கோலத்தில் ஸ்ரீ வாஸ்துபகவான், ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ப்ரத்யங்கரா தேவி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அஷ்ட நாக கருடன், ஸ்ரீ கார்த்திவீர்யாஜூனன், நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,
ஸ்ரீ பால ரங்கநாதர், ஒரே கல்லினால் ஆன ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ ஆரோக்கியலக்ஷ்மி, ஸ்ரீ கஜலக்ஷ்மி, சத்திய நாராயணா, ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ வாணிசரஸ்வதி, ராகு, கேது, ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ மரகதாம்பிகா ஸமேத மரகதேஸ்வரர், நவபைரவர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி, ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், வேதாந்த தேசிகர், ஸ்ரீ அத்ரி பாதம், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி எனத் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
நீர் ஊற்றிப் பரிகாரம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் விசேஷம் அங்கேயுள்ள காலச் சக்கரம் ஆகும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளை 9 கிரகங்களுக்குள் உள்ளடக்கிய காலச்சக்கரத்தில் அந்தந்த ராசிக்குரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விருட்சங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் நீர் ஊற்றி தோஷங்களுக்கு பரிகாரம் செய்துகொள்ளலாம்.
இந்த பீடத்தில் விரைவில் அமைய உள்ள பாதாள தங்க சனீஸ்வரர் சன்னிதி, தரைக்குக் கீழே 13 அடி கீழே உள்ளது. சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் இது அமைக்கப்படவுள்ளது. “நவகிரகங்களின் அதிபதி சனி பகவான். நீதி தவறுபவர்களுக்குத் தண்டனையளித்து அவர்களைத் திருத்தி நல்வாழ்வு கொடுப்பவர் சனி பகவான். ஆயுள் தோஷங்களை நீக்கி எதிர்மறை அம்சங்களை
விலக்கி நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். முன்ஜென்மப் பாவங்களை நீக்குபவர் சனீஸ்வரர்தான். சனி பகவான் சோதனைகளைத் தந்தாலும் நேர்வழியில் அழைத்துச் செல்வதே இவரின் நோக்கம். சனியின் தாக்கம் நம்மால் தாங்க முடியாததாகவும் இருக்கும்.
இவற்றில் இருந்து நன்மை பெறுவதற்காக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 15 ஆண்டுகளாக சனி சாந்தி ஹோமம் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையும் நடந்து வருகிறது.’’என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
லட்சுமி வராஹர், தங்க சனீஸ்வரர் யந்திரங்களைத் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரசித்திபெற்ற சனி பகவான், லட்சுமி வராஹர் ஆலயங்களில் வைத்து சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ள ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திவ்ய விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சனி பகவான், லட்சுமி வராஹர் ஆலயங்களின் புண்ணிய தீர்த்தங்கள், புனித மண், புனிதக் கற்கள், மூலிகைகள் ஆகியவற்றைச் சேகரித்து யாகம் மற்றும் குடமுழுக்கு விழாவில் சேர்க்க இருக்கிறார்கள்.
தன்வந்திரியை வணங்கி குணம்பெறுவோம்.
- வி. செந்தில்குமார்