ஆன்மிகம்

பெண்மையின் வழி பாமதி

பவித்ரா

உபநிடதங்களிலுள்ள ஆன்மிக, தத்துவக் கருத்துகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கும் அடிப்படை வேதாந்த நூலாக ‘பிரம்மசூத்திரம்’ இன்றும் திகழ்கிறது. பாதராயணர் தொகுத்து எழுதிய இப்படைப்புக்கு உரைகள் பல இருப்பினும் சிறந்த உரையாக வாசஸ்பதி மிஸ்ர எழுதிய ‘பாமதி’ நூல் தான் கருதப்படுகிறது.

பாமதி என்பது வாசஸ்பதி மிஸ்ரவின் மனைவியின் பெயர். பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுதிய தன் பெயர் மறக்கப்பட்டாலும் தன் மனைவி பாமதியின் பெயரை உலகம் நினைவில் கொள்ளவேண்டுமென்று தான் வாசஸ்பதி, தனது படைப்புக்கு அவர் பெயரை வைத்தார். பாமதி எப்படி அப்படியாக நினைவுகூரப்படுபவள் ஆனாள்?

வாசஸ்பதி சிறுவயதிலிருந்தே கடவுளையும் அடிப்படையான உண்மையையும் தேடத் தொடங்கியவன். எதைப் பற்றி யார் அவனிடம் பேசினாலும் அது கடவுள் சம்பந்தப்பட்டது என்று விளங்கிக் கொள்வான். அப்படி இருந்த அவனிடம், அவன் தந்தை கேட்டார். “வாசஸ்பதி, உனக்கோ வயது ஆகிறது. திருமணம் செய்து கொள்கிறாயா?”

வாசஸ்பதிக்குத் திருமணம் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது. ஆனால், அக்காலச் சூழலில், தந்தையின் ஆணையை ஒரு மகனால் மறுக்கவும் இயலாது.  வாசஸ்பதியின் மௌனம் சம்மதமென்று அர்த்தப்படுத்திக் கொண்டு அவனுக்குத் திருமணம் செய்வித்தார்.

மணமகனாக வாசஸ்பதி அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடக்கும் மணமகளின் ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எங்கு போகிறோம்? என்று தயக்கத்துடன் தந்தையிடம் கேட்க, “உனக்குத் திருமணம் இன்று. அதுகூட மனத்தில் இல்லையா.” என்று கடுமையாகக் கேட்டார். தனக்குத் திருமணமாவது இறைவனது சங்கல்பம் என்று வாசஸ்பதி எடுத்துக்கொண்டு மறுபடியும் தன் சிந்தனைக்குள் போய்விட்டான்.

திருமணம் முடிந்தது. மணப்பெண்ணோடு வீட்டுக்கு வந்த வாசஸ்பதிக்கு உடன் ஒருத்தி இருப்பது ஞாபகத்துக்கு வரவேயில்லை.

அப்போது பிரம்மசூத்திரத்துக்கான உரையை வாசஸ்பதி தொடங்கியிருந்தார். அவர் அந்த உரையை முடிப்பதற்கு 12 ஆண்டுகளுக்கு மேலானதாக கூறப்படுகிறது. 12 ஆண்டுகளும் அவரது மனைவி மாலையில் அவர் எழுதும் அறையில் பாமதி விளக்கை ஏற்றுவார்.

உணவு வேளையில் உணவைக் கொண்டுவந்து பரிமாறுவார். அவர் உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இடத்தில் இருந்த தடமே இல்லாமல் போய்விடுவார். பாமதி, வாசஸ்பதியின் எழுத்துக்கு எந்தத் தொந்தரவும் வராமல், தவறியும் கூட தன் இருப்பே தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்.

தன்னுணர்வே அற்றுப்போய் உரையெழுதிக் கொண்டிருந்த வாசஸ்பதி, ஒரு நாள் இரவில் தனது படைப்பை நிறைவு செய்தார். தீப விளக்கொளியில் ஒரு பெண் தனக்கு இரவு

உணவு கொண்டுவருவதை அப்போதுதான் பார்த்தார். “நீ யார்? இங்கே இந்தச் சமயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

“நான் பாமதி, உங்கள் மனைவி.” என்றாள் அவள். 

“இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. உனது கைகளைக் காட்டு. இந்தக் கைகள் தான் விளக்கேற்றி, உணவிட்டு என்னை எழுத வைத்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ப

ிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய பிறகு சன்னியாசம் செல்வதுதான் எனது குறிக்கோள். ஆனால் உன்னுடைய தியாகம் மிகவும் மகத்தானது.” என்று கூறிய வாசஸ்பதி, பாமதியின் கைகளைப் பற்றித் தேம்பி அழுதார்.

“நமது தாம்பத்தியத்தால் ஆவது என்னவோ, அதை உங்கள் கண்ணீர் ஈடு செய்துவிட்டது. எனக்கு கூடுதலாக வேறெதுவும் வேண்டாம். குற்றவுணர்வில்லாமல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.” என்றாள் பாமதி.

“இந்த உலகம் என்னைப் போன்ற எத்தனையோ உரையாசிரியர்களைப் பார்த்திருக்கும். நிபந்தனையற்ற அன்பு, பொறுமை, மகத்துவமான இதயத்தைக் கொண்ட உன்னைப் போன்ற ஒரு பெண்ணைப் பார்த்திருக்கவே செய்யாது. உன்னை இந்த உலகம் மறக்காமல் இருக்க வேண்டும்.” என்றார் வாசஸ்பதி.

வாசஸ்பதி தனது உரைக்கு ‘பாமதி’ என்று பெயரிட்டார்.

பெண்மையின் மர்மம் இதுதான். பெண் மட்டுமல்ல ஆணும் அடைய வேண்டிய இடம் அது. அவர்கள்தான் எந்தப் புகாரும் அற்றுத் தங்கள் இருப்போடு அடையாளம் காணமுடியும். அவர்களால்தான் பிரார்த்தனைத் தன்மையோடு கூடிய காத்திருப்பையும் நிகழ்த்த முடியும்.

அந்தப் பெண்மையின் வழிதான், பூமிக்கும் வானகத்துக்கும் திறவுகோல்.பெண்மையின் மர்மம் இதுதான். பெண் மட்டுமல்ல ஆணும் அடைய வேண்டிய இடம் அது. அவர்கள்தான் எந்தப் புகாரும் அற்றுத் தங்கள் இருப்போடு அடையாளம் காணமுடியும். அவர்களால்தான் பிரார்த்தனைத் தன்மையோடு கூடிய காத்திருப்பையும் நிகழ்த்த முடியும்.

SCROLL FOR NEXT