ஆன்மிகம் எந்த நாட்டுக்குத்தான் விதிவிலக்கு! சிங்கப்பூரில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களில் முக்கியமான நான்கு கோயில்களை நேரடியாக நிர்வகிக்கிறது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம். அவற்றில் சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலும், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளன.
ஆண்டுதோறும் இந்து அறக்கட்டளை வாரியம் முன்னின்று நடத்தும் இருபெரும் விழாக்கள் தைப்பூசத் விழா, தீமிதித் திருவிழா. தைப்பூசத் திருநாளில் சுமார் 10 ஆயிரம் பால் குடங்கள், ஆயிரம் காவடிகளைச் சுமந்து பக்தகோடிகள் நடைப்பயணம் செல்லும் காட்சியைப் பார்க்கும்போது பழநியில்தான் இருக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றிவிடும்.
அதேபோல, சிங்கப்பூர் சைனா டவுனில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழாவும் அரசு உதவியுடன் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்துவருகிறது. இது மட்டுமின்றி, சிவன் கோயிலில் நடக்கும் மகா சிவராத்திரி, வைராவி மடம் காளியம்மன் கோயிலில் ஐயப்ப சுவாமி மகர ஜோதி விழா ஆகியவையும் தமிழகக் கோயில்களுக்கு இணையாகச் சிறப்பாக நடந்துவருகின்றன.
இதையெல்லாம் எடுத்து நடத்தும் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய தலைவராக ஆர். ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய சிறப்பு நேர்காணலிலிருந்து..
தமிழகம் போலவே இங்குள்ள கோயில்களிலும் ஆகம சாஸ்திர விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்களா?
இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் வரும் கோயில்கள் மட்டுமின்றி, அனைத்து இந்துக் கோயில்களிலும் ஆகம சாஸ்திர விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன. சிவாலய வழிபாடுகள், பெருமாள் கோயிலில் நடக்கும் வைகானச ஆகமம்.. எதுவானாலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டே நடக்கின்றன. இந்திய வேதபாடசாலைகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், ஏற்கெனவே இந்துக் கோயில்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களையே அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கிறோம்.
அது மட்டுமல்லாமல், கணக்கு வழக்குகளிலும் மிக வெளிப்படையாகச் செயல்படுகிறோம். காணிக்கையாக வரும் சில்லறையில் தொடங்கி, நன்கொடைகளாக வரும் ரொக்கங்கள் வரை அனைத்துக் கணக்குகளும் மிகச் சரியாகப் பராமரிக்கப்படும்.
அதுபற்றி விரிவாகக் கூற முடியுமா?
காணிக்கைகள், நன்கொடைகளாக எங்களுக்குக் கிடைக்கும் நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்கே மீண்டும் பயன்படுத்துகிறோம். உதாரணமாகச் சிறைக் கைதிகள், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் நடத்துகிறோம். சிரமப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்குகிறோம். சமீபத்தில் 120 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. Project SMILE (Supporting and Motivating Ladies with Empowerment) என்ற திட்டம் மூலம் பெண்களுக்கும் உதவிகள் செய்கிறோம். ‘மக்களால் மக்களுக்காக’ என்பதுதான் எங்கள் நோக்கம்.
இந்தியாவில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, சாலை அகலப்படுத்துவது போன்ற பணிகளின்போது கோயில்கள் அகற்றப்படும் நிலை வந்தால், மதரீதியான பதற்றம் ஏற்படுவது உண்டு. சிங்கப்பூரிலும் கோவில் இடமாற்றம் நடக்கிறது. உங்கள் அனுபவம் எப்படி?
இங்கு திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு பல மாதங்கள் முன்பாகவே முன்னறிவிப்பு செய்யப்படும். மாற்று இடம் எங்கு இருக்கிறது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்படும். அந்த இடமாற்றத்துக்குத் தேவையான மனித வளமும், நிதி வளமும் அரசால் ஏற்பாடு செய்யப்படும். இதுபோக இடமாற்றத்தால் கோயில் நிர்வாகத்துக்குப் பண இழப்பீடு ஏற்பட்டால், அதுவும் அரசால் வழங்கப்படும். இந்தியர்களின் கடவுள் நம்பிக்கையை சிங்கப்பூர் அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது. அதனால்தான் இப்படியொரு அறக்கட்டளை வாரியத்தை அமைத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் நம்மிடமே வழங்கியுள்ளது. எந்தவொரு இந்திய விழாவாக இருந்தாலும், அதற்கென அமைக்கப்படும் செயற்குழுவில் அமைச்சர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் பாகுபாடின்றி இணைந்து செயலாற்றுவார்கள். அரசு நடவடிக்கைகளால் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதில் சிங்கப்பூர் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கும்.
சீனர்கள், மலாய் மக்களையும் இந்துக் கோயில்களில் நிறைய பார்க்க முடிகிறதே...
சிங்கப்பூரில் வாழும் அனைத்து இன மக்களும் இந்துக் கோயிலுக்கு வருவார்கள். சீன மக்களுக்கு இந்து சமய கோட்பாடுகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. காரணம், அவர்களது புத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகள். அவர்கள் புத்தரின் பாதங்களில் தாமரைப் பூ வைத்து வழிபடுவார்கள். இந்துக் கோயிலுக்கு வரும்போதும் தாமரைப் பூ வாங்கி, சந்நிதானம் வரை வந்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். சீனர்கள் பலர் தைப்பூசத்தில் காவடி எடுப்பதையும் பார்த்திருப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தின்போது முன்னறிவிப்பில்லாமல் வந்து 50 லட்சம் ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) நன்கொடையாக வழங்கிவிட்டுச் சென்ற சீன தொழில் அதிபர்களும் உண்டு.
ஒரு சீனர், பெருமாள் கோயிலின் நீண்ட கால பக்தர். தங்க முலாம் தொழில் செய்கிறார். கும்பாபிஷேகத்தின்போது, கோயில் விமானம், கவசங்களுக்கான கோல்ட் ப்ளேட்டிங் பணிகளை அவரே தன் பொறுப்பில் கேட்டு வாங்கிச் சீரமைத்துத் தருவார்.
இந்துக் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் எத்தனை பேரைச் சென்றடைகிறது? குறிப்பாக சனி, ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே...
அனைத்து இந்துக் கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டும் 5000 முதல் 7000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் பெரிய பலம். அன்னதானம் வழங்கும் செலவை ஏற்பதற்கு ஒரு பெரிய வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. பொதுவாக லிட்டில் இந்தியா, செராங்கூன் சாலைகளில் சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால் இங்குள்ள பல கோயில்களில் சனிக்கிழமை சுப்ரபாதத்தில் தொடங்கி, அர்த்தஜாமம் வரை அன்னதானம் வழங்கப்படும்.
குடும்பத்துடன் வந்து அன்னதானம் ருசிப்பவர்களும் உண்டு. இந்தியாவில் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் தனியாக வாழும் பக்தர்களும் வருவது உண்டு. அப்படித் தனியாக வசிப்பவர்களுக்குக் கோயில்கள் தரும் மனபலம் அசைக்க முடியாதது.
இனி வரும் வருடங்களில், உங்கள் தலைமையில் இந்து அறக்கட்டளை வாரியம் எதிர்நோக்கவிருக்கும் புதிய வளர்ச்சித் திட்டங்கள்..?
அர்ச்சனை, ஹோமங்களுக்கு முன்பதிவு போன்ற பல விஷயங்களைக் கணினிமயமாக்கி வருகிறோம். விரைவில் ஒவ்வொரு திட்டமாகச் செயல்படுத்தப்படும். எங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு கோயில்களின் செயல்பாட்டுத் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும். முக்கிய இந்து மத நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் முழு நிறைவுடன் வழங்க வேண்டும். மறுவாழ்வு மையங்களை விரிவுபடுத்த வேண்டும். சமூக, கலாச்சார, கல்வி மற்றும் வெவ்வேறு தொண்டு நிகழ்வுகள் மூலம் சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அரசாங்கம், அதிகாரிகள், பக்தர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் ஒத்துழைப்பு இருக்கும்போது, சாதிப்பது சுலபம்தான்.