நாளைய தினம் 13.4.19 சனிக்கிழமை அன்று ஸ்ரீராம நவமி. இந்த அற்புதமான நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஸ்ரீராமபிரான் அவதரித்த நன்னாள் என்பதாலேயே பங்குனி மாதம் இன்னும் மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தநாளில், ஸ்ரீராமபிரானை மனதில் நிறுத்தி, வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். கருத்துவேற்றுமையால் சண்டையும்சச்சரவுமாக இருக்கும் தம்பதி, சுந்தரகாண்டம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து, வீட்டில் விளக்கேற்றினால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி கூட ஒன்றிணைவார்கள் என்பது ஐதீகம்!
’ராமராக வாழ்வது அத்தனை எளிதல்ல’ என்பார்கள். ராமரின் யதார்த்தமான வாழ்வுதான், ஒவ்வொரு மனிதருக்குமான வாழ்வியல் பாடம். அதுவே ராமாயணம். ’ஒரு இல்... ஒரு வில்... ஒரு சொல்...’ என்று வாழ்ந்து காட்டியவர் ராமபிரான் என்கிறது புராணம்.
நாளைய தினம் 13.4.19 சனிக்கிழமை ராமநவமித் திருநாள். இந்த நாளில், வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி, ஸ்ரீராமரின் துதிகளைப் படியுங்கள். சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். கண்கள் மூடி, ஒரு பத்துநிமிடம் ‘ராம ராம ராம...’ எனும் அவனுடைய திருநாமத்தை ஜபித்தபடி இருங்கள்.
இந்த பிரார்த்தனைக்கு அடுத்து, உங்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி. நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித்தவிக்கும் பெண்களுக்கு ராமகுணங்களுடன் நல்ல கணவன் வாய்ப்பார் என்பது சத்தியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.