ஆன்மிகம்

அறிவின் அறுவடை ஆன்மிகம்!

ஆர்.சி.ஜெயந்தன்

மார்ச் 7: அவதானக் கலைஞர் ஆறுமுகனார் 125-வது பிறந்த தினம்

தேசம் முழுவதும் சுதந்திர உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுத்த காலம். அப்போது ஆன்மிகத்திலும் தழைத்தோங்கி நின்றது அறம் வளர்த்த தமிழ் நிலம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலயன் கோயில். அத்திரி முனிவருக்கும் அவர்தம் தேவி அனுசுயாவுக்கும் மும்பெரும் கடவுளராகிய மும்மூர்த்திகள் காட்சி அருளிய ஞானாரண்யம் அக்கோயில்.

அதன் மார்கழித் தேரோட்டம் அக்காலத்தில் காசி மாநகர் வரை புகழ்பெற்றிருந்தது. அப்படிப்பட்ட தேரோட்டத்தை அன்று வடம்பிடித்துத் தொடங்கி வைக்கும் முதல் மரியாதையைத் தமிழர் ஒருவருக்கு அளித்திருந்தது அன்றைய கேரள அரசான திருவிதாங்கூர். அவர்தான் ஆறுமுகனார் என்று அழைக்கப்பட்ட ‘தசாவதானி’ ஆறுமுகம் பிள்ளை.

அது 1930-ம் வருடம். தாணுமாலயன் கோயில் மார்கழித் திருவிழாவின் 9-ம் நாள். தேரோட்டத்துக்கு நேரம் குறித்து திருவிதாங்கூர் அரசப் பிரதிநிதிக்காகப் பக்தர்கள் காத்திருந்தார்கள். பிரதிநிதியும் வந்தார். ஆறுமுகனாரைத் தேடினார். “அவரை அழைக்கக் கூடாது. சொந்தச் சாதியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்” என்று நாஞ்சில் நாட்டுப் பெருந்தலைக்கட்டுகள் கூட்டமாகக் குரல் கொடுத்தார்கள்.

ஆனால், கூட்டத்தாரின் கூச்சலை பிரதிநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறுமுகனாரை அழைத்துவரச் செய்தார். எப்போதும்போல அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. அவர் தேரின் வடத்தைத் தொட்டுத் தர, நான்கு ரதவீதிகளையும் கம்பீரமாக வலம் வந்தது தேர்.

ஆறுமுகனார் எதற்காகச் சாதி நீக்கம் செய்யப்பட்டார்? ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து வருவார். குருபூஜைகள் நடத்தி, இறுதியில் சமபந்தி போஜனம் நடத்துவார். பிறப்பால், மதத்தால் உயர்வு தாழ்வு இல்லை எனப் போதிப்பார். தேவாரம், திருவாசகம் பயிற்றுவிப்பார். பக்தியைப் பற்றிக்கொள்ளச் சொல்லித்தரும் அதேநேரம் மாணாக்கரின் பசிப்பிணியை முதலில் போக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார்.

தன்னிடம் நன்றாகப் பயின்ற ஏழை மாணாக்கருக்கு வேலை வாங்கிக் கொடுப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார். சமயப் பணியுடன் கூடிய ஆறுமுகனாரின் இந்தச் சமூகச் சீர்த்திருத்தப் பணியைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் அவரைச் சாதி நீக்கம் செய்தார்கள். ஆனால், அவதானக் கலை எனும் அறிவின் ஆயுதத்தால் தன்மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளை அவர் தூசியெனத் துடைத்தெறிந்துவிட்டு, தமிழர் வாழும் நிலமெங்கும் மங்காப் புகழுடன் வலம் வந்தார்.

அது என்ன அவதானக் கலை? தமிழகத்துக்கு மட்டுமே உரிய அறிவுக் கலை. அவதானம், அவதானிப்பு என்றால் நினைவாற்றலால் கூர்ந்து ஆராய்ந்து விரைவாகக் கூறுதல் என்று பொருள். நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் உரிய பொதுத் திறமைதானே எனக் கேட்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் எட்டு வகை, பத்து வகை, பதினாறு வகை நூறு வகையான தரவுகளை மனத்திலே இருத்தி ஆராய்ந்து பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் சரியான பதில் அளிக்கும் திறன் அது.

மூளையில் பல பகுதிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிகிற உயரிய இந்த ஆற்றல், பரந்துபட்ட கற்றல் மூலமும் கற்றதைத் திரும்பத் திரும்ப மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டே இருப்பதன் மூலமும் சாத்தியப்படும் அரிய ஆற்றல். அதில் தசாவதானக் கலையில் தலைசிறந்து விளங்கினார் ஆறுமுகம் பிள்ளை.

கைவசமான கலைகள்

குமரி மாவட்டத்தின், நாகர்கோவில் நகரை ஒட்டிய கோட்டாற்றில் பிரம்மநாயகம் – தென்கரை மகராசி தம்பதியரின் ஒரே தவப் புதல்வராகப் பிறந்தார் ஆறுமுகம். தந்தையார் சைவப் பற்றுடையவர். அதனால் மகனின் சிறுவயது தொடங்கி தேவார, திருவாசகங்களை ஓதிவந்தார். புராணங்களையும் படித்துக் காட்டினார். இதனால் இளமையிலேயே ஆறுமுகத்தின் மனத்தில் பக்தி, கொடியெனப் படர்ந்தது.

பின்னர் அண்ணாவி எனப்படும் தமிழ்ப் புலவர் ஒருவரின் திண்ணைப் பள்ளியில் தமிழ்க் கல்வி பயின்றார். அந்த அண்ணாவி கணிதத்திலும் விற்பன்னராக இருந்ததால் நினைவாற்றலில் சிறந்து விளங்கிய ஆறுமுகனார்க்கு அதையும் கற்பித்தார். இளம் வயதில் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சாமிகளிடம் சிந்தாந்த சாத்திரங்கள் பதினான்கிலும் தேர்ச்சிபெற்றார். கணிதம் கைவரப்பெற்றபின் ஜோதிடக் கலையும் அவரை ஈர்த்தது.

கோட்டாற்றில் தலைசிறந்த ஜோதிடராகப் புகழ்பெற்றிருந்த முத்து ஜோதிடரிடம் மாணவராகச் சேர்ந்து அக்கலையிலும் பண்டித்யம் பெற்றார்.

இதன் பின்னர்தான் ஆறுமுகனார் வாழ்க்கையில் முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. தமிழின் தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியங்களில் ஒன்றான உமறுப்புலவரின் ‘சீறாப்புராண’த்துக்கு உரையெழுதியவரும் பல இலக்கியங்களைப் படைத்தவருமான செய்குத்தம்பி பாவலரும் கோட்டாற்றின் மைந்தர்தான். இளமை முதலே தசாவதானக் கலையால் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த செய்குத்தம்பி பாவலரிடம் சென்றார் ஆறுமுகனார்.

அவரது தமிழறிவைக் கண்டு வியந்த செய்குத்தம்பிப் பாவலர், சற்றும் தயங்காமல் ஆறுமுகனாரை மாணவராகச் சேர்ந்துகொண்டார். அவரிடம் அருந்தமிழ் நூல்களை மட்டுமல்ல; அவதானக் கலையையும் கற்றுக்கொண்டு குரு மெச்சும் மாணவராக உயர்ந்தார். குருவைப் போலவே மேடைச் சொற்பொழிவில் கேட்போரை மயக்கினார்.

சமயப் பிரச்சாரத்தில் சாதனை

ஆறுமுகனாரின் தமிழ்ப் புலமை, சமயப் புலமையைக் கேள்விப்பட்டார் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம். ஆறுமுகனாரை அழைத்த அவர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சமயப் பிரச்சாரகராகப் பொறுப்பில் அமர்த்தினார். அப்போது தொடங்கிய ஆறுமுகனாரின் சமயப் பிரச்சாரப் பணி அரை நூற்றாண்டுக் காலம் ஓயவில்லை. குமரியைத் தாண்டித் தமிழகம், இலங்கை என அவரது பணி புகழ்பெற்றது. சமயச் சொற்பொழிவின் ஒரு பகுதியாகவே அவதானக் கலையை மாற்றினார் ஆறுமுகம் பிள்ளை.

அவதான நிகழ்ச்சிகளில் கிடைக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணமுடிப்புகளை ஏழை மாணாக்கரின் கல்விக்காகக் கொடுத்தார். இவரது பணியைக் கண்ட சுசீந்திரம் ‘நற்கருமசாலை’ எனும் சமய நற்பணிக் கழகத்தினர் ஆறுமுகனாரை அதற்குத் தலைவராக்கினார்கள். அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி 1928-ம் ஆண்டு ‘தாணு விலாசம் புத்தக சாலை’ எனும் நூல் நிலையத்தைத் தொடங்கினார். இந்நூல் நிலையத்தைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு ஆறுமுகனார் செய்த தமிழ்ப் பணியும் கல்விப் பணியும் அக்காலத்தில் பெரும் முன்னுதாரணங்களாக அமைந்தன.

சோழமண்டல சதகம், குசேல வெண்பா, திருக்குறள் பாரத வெண்பா என்பன  போன்று போற்றப்பட்ட இலக்கிய நூல்களையும் சிவஞான போத சூரணிக் கொத்து, சைவ சித்தாந்த சரவெண்பா போன்ற சமய இலக்கியங்களையும் படைத்த தசாவதானி ஆறுமுகம் பிள்ளையின் நூற்றாண்டு விழா திருமுருக கிருபானந்த வாரியார் தலைமையில் 1992-ம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

SCROLL FOR NEXT