காஞ்சி மாமுனிகள் 1961-ம் ஆண்டு புனித யாத்திரை மேற்கொண்டு சென்னை நங்கநல்லூரில் தன் பரிவாரங்களுடன் முகாமிட்டிருந்தார். அங்கேயுள்ள ஒரு குளக்கரைக்கு நித்ய அனுஷ்டானங்களுக்காக நீராட வந்தார். குளத்தின் கரையில் கவிழ்ந்து கிடந்த ஒரு சிவலிங்கம் துணி துவைக்கும் கல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக்கண்டு வருந்தினார். அவர் தன் பரிவாரங்களை அழைத்து அந்த சிவலிங்கத்தை எடுத்து குளக்கரையில் பிரதிஷ்டை செய்ய அருளினார். அச்சிவலிங்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சொல்லி "அர்த்தநாரீஸ்வரர்" என்றும் திருநாமகரணம் சூட்டினார்.
மகாசுவாமிகளின் உத்தரவுப்படி அர்த்தநாரீஸ்வர பெருமானின் லிங்கத்திருமேனி குளக்கரைக்கு அருகில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. அடியவா் பெருமக்களின் நித்ய வழிபாடுகளால் திருவுள்ளம் மகிழ்ந்த ஈசனின் அருளாற்றல் காரணமாக வளர்ச்சியை அடைந்த இத்திருக்கோயிலுக்கு 1967-ல் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இத்திருத்தலம் பல்வேறு வளா்ச்சிகளைக் கண்டு தற்போது ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் மிகப் பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது.
நாகாரபரணம் தரித்த ஈசன்
நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஈசன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்திமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பினைக் கொண்டுள்ளது இத்தலம். மகா மண்டபத்தில் பால விநாயகா் மற்றும் பாலசுப்ரமணியா் கிழக்குத் திருமுகமாக அருள்பாலிக்கின்றனா்.
மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்தில் இத்தல அம்பிகை “அா்த்தநாரீஸ்வரி” எழுந்தருளியுள்ளார். நடராஜப் பெருமானின் எழிலார்ந்த பஞ்சலோகத் திருமேனி அன்னை சிவகாமியுடன் மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் தெற்குப் பகுதியில் நர்த்தன விநாயகப் பெருமானும், தட்சிணாமூா்த்தியும் அருள்பாலிக்கின்றனா். கருவறைக்குப் பின்
லிங்கோத்பவா் அருள்பாலிக்கிறார்.
கோஷ்டத்தின் வடக்குப் பகுதியில் பிரம்மனும் துா்க்கையும் அருள்பாலிக்கின்றனா். பிரகார வலத்தில் சண்டிகேஸ்வரா், ஸ்வா்ணாகா்ஷண பைரவா் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தின் விருட்சம் ஈசனுக்கு உகந்த வில்வ மரமாகும்.
கருவறையில் அருளும் ஈசனின் தரிசனம் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றது. நாகாபரணம் தரித்து திருக்காட்சி தரும் பொன்னார் மேனியனின் திவ்ய தரிசனத்தால் நம் துன்பமெல்லாம் தீா்ந்தது போன்ற உள்ளுணர்வும் மன நிறைவும் இத்தலத்தில் நமக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஈசனின் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் அா்த்தநாரீஸ்வரர் ரிஷபத்துடன் காட்சி தருவது அரிய தரிசனமாகும்.
அஷ்டபுஜ சாந்தி துர்க்கை
அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் பின் பகுதியில் ஆறரை அடி உயர முள்ள அஷ்டபுஜ சாந்தி துர்க்கையின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 1987-ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அஷ்டபுஜ சாந்தி துர்க்கையின் கர்ப்பக்ருஹம் தோ் வடிவில் அமைக்கப்பட்டு அதன் நடுவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அன்னை துா்க்கையின் திருவடிவழகினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். “சாந்தி துா்க்கை” என்ற திருநாமத்துக்கு ஏற்ப கருணை பொங்கும் தேவியின் திருமுக தரிசனம் காணக் காத்துநிற்கும் பக்தர்கள் ஏராளம்.
மஹா கும்பாபிஷேக வைபவம் அா்த்தநாரீஸ்வரா் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக வைபவம் விகாரி வருடம் சித்திரை மாதம் 4-ஆம் தேதி (17.4.2019) புதன் கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் "காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின்" திருக்கரங்களால் நடத்தப்பட உள்ளது. 13.4.2019 முதல் பூா்வாங்க பூஜைகளும் 14.4.2019 முதல் யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன. |
எப்படிச் செல்லலாம்? சென்னை, நங்கநல்லூா், 4-வது மெயின் ரோடில் அமைந்துள்ளது அா்த்தநாரீஸ்வரா் ஆலயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி இத்திருத்தலம் செல்லலாம். |
- முன்னூர் கோ. இரமேஷ்