இரு கண்களை மூடிக்கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
-ஜலாலுதீன் ரூமி
கண்களுக்கு எட்டியதே உலகம், அறிவுக்குப் புலப்பட்டதே வாழ்வு என்பதே மனிதனின் நம்பிக்கையாய் உள்ளது. ஆனால், ஞானிகளின் உலகும் வாழ்வும் வேறானது. அவர்களின் நம்பிக்கை வேறானது. கண்களுக்குப் எட்டாத, அறிவுக்குப் புலப்படாத, அரூப வடிவில் எங்கும் நிரம்பியிருக்கும் இறைவனே அவர்களை வழிநடத்தும் ஒளி. அந்த ஒளியின் மீதான மோகத்தைக்கொண்டு மனத்தை நீர்த்துப் போகச் செய்வதே ஞானிகளின் வாழ்வு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, ’இறைநம்பிக்கையின் தலைவர்’ என்றழைக்கப்படும் ‘இப்ராஹீம் அல் கவ்வாஸ்’ஸின் வாழ்வும் அத்தகையதே.
ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு என்று அவரது வாழ்வைச் சொல்லலாம். சிறுவயதிலேயே அறிவும் தெளிவும் மிகுந்தவராக அவர் இருந்தார், ஆன்ம ஞானத்தைத் தேடும் வேட்கையும் மெய்யறிவைத் தேடும் தாகமும் அவருக்கு இயல்பாகவே இருந்தன. குழந்தைப்பருவத்திலேயே இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார்.
சமர்ராவைப் பூர்வீகமாகாக்கொண்ட கவ்வாஸ், முஹம்மது இப்னு இஸ்மாயீல் மஃரிபியிடம் கல்வி பயின்றார். சூபி ஞானத்தின் மிகப் பெரும் ஆளுமைகளான ஜூனைத்தும் நூரியும் அவரது உற்ற தோழர்களாக இருந்தனர். நிச்சியமற்ற வாழ்வில் இறைவன் மட்டுமே நிச்சியமானவன் என்பதில் மிகுந்த உறுதியுடன் அவர் இருந்தார். மாற்றங்களால் கட்டமைக்கப்பட்ட உலகவாழ்வில், இறைவனை அடையும் பாதையே மாறாதது என்ற தெளிவும் அவருக்கு இருந்தது.
ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்
தனக்கென்று எதையும் சேமித்து வைக்கும் பழக்கம் அவருக்குக் கிடையாது. பாலைவனங்களில் நீண்டநாட்கள் பயணிக்கும்போதும், தனக்கென்று உணவோ உடையோ எடுத்துச் செல்லமாட்டார். ’எனக்கு வேண்டியதை, எனக்குத் தேவையான நேரத்தில், கொடுப்பதற்கு அவன் இருக்கும்போது, நான் ஏன் எனக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துச் சேமிப்பத்தில் ஏன் நான் காலத்தை வீணாக்க வேண்டும்’ என்று கேட்பார்.
ஆனால், ஊசியையும் நூலையும் மட்டும் அவர் எப்போதும் தன்னிடம் வைத்திருப்பார். ’துறவியான என்னிடம் ஓர் உடை மட்டுமே உண்டு. பாலைவனத்தில் நீளூம் கரடுமுரடான நீண்ட பயணங்களில் என் உடை கிழிவதற்குச் சாத்தியம் அதிகம் உண்டு. கிழிந்த உடையுடன் இறைவனை வணங்க முடியாது என்பதால், கிழிசலைத் தைக்க, ஊசியும் நூலும் நான் வைத்துள்ளேன்’ என்று தனது செய்கைக்குப் பின்னாளில் விளக்கமளித்தார்.
ஒருமுறை பாலைவனத்தில் பயணம் சென்றுக்கொண்டிருந்தார். கிட்டத்திட்ட ஏழுநாட்கள் உணவை மறந்து பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைவில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. காகம் இருக்கும் இடத்தில் உணவு இருக்கும் என்று அந்தத் திசைநோக்கி ஓடினார். காகத்தின் இடத்தை அடைந்தபொழுது, அங்கிருந்த ஒரு வழிபோக்கன், அவரது முகத்தில் ஓங்கி குத்திவிட்டுச் சென்றான். நிலைகுலைந்து கீழே விழுந்த கவ்வாஸ் வலியில் துடித்தார்.
‘என் மீது நம்பிக்கைக்கொள்ளாமல், ஒரு காகத்தின்மீது நம்பிக்கைக்கொண்டு நீ ஒடிவந்தது முறையா?’ என்று ஓர் குரல் அப்போது அவர் காதில் ஒலித்தது. கவ்வாஸ் கூனிக் குறுகிவிட்டார். அவர் மனம் வேதனையில் விம்மியது. முகத்தில் விழுந்த அடியைவிட, அவரது மனத்தினுள் ஈட்டியாய் நுழைந்த குரல் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. காகம் கரைந்த இடத்தில், வகை வகையான உணவு இருந்தது. கவ்வாஸ் அதை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஒருமுறை பாலைவனத்தில் பயணிக்கும்போது, அவருக்கு இனிப்பான மாதுளம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை அவருள் உதித்த மறுகணமே, அவர் கண்ணில் அங்கு இருந்த மாதுளம்பழத்தோட்டம் கண்ணிற்பட்டது. மகிழ்சியடைந்த கவ்வாஸ், அங்கிருந்து பழத்தைப் பறித்து ஆசையுடன் சாப்பிட்டார். ஆனால், அந்தப் பழம் புளிப்பாக இருந்தது. அதைத் தூர வீசிவிட்டு, வேறு பழத்தைப் பறித்துச் சாப்பிட்டார்.
அதுவும் புளிப்பாகவே இருந்தது. வெவ்வேறு மரங்களில் இருந்து பழங்க்ளைப் பறித்துச் சாப்பிட்டுப் பார்த்தார். அவர் சாப்பிட்ட எல்லாமே புளித்தன. இறுதியில் பழத்தைச் சாப்பிடாமல், ஏமாற்றத்துடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
சற்றுத்தொலைவில் உயிருக்குப் போராடும் ஒரு முதியவரைக் கண்டார். அந்த முதியவரின் அழுகிய உடலில் இருந்து புழுக்கள் வெளிவந்துக்கொண்டிருந்தன. தேனீக்கள் அவரது உடலில் நுழைவதும் வெளிவருவதுமாக இருந்தன. அதைப்பார்த்து மிகுந்த வேதனைக்கொண்ட கவ்வாஸ், ‘உங்களுக்காக நான் இறைவனிடன் வேண்டிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். ”உடல் நலன் பெறுவது எனது விருப்பம். ஆனால், நான் அனுபவிக்கும் இந்த வேதனை அவரது விருப்பம். எனது விருப்பத்தைவிட, அவனது விருப்பமே எனக்கு முக்கியம்” என்று அவர் பதில் அளித்தார்.
தேடும் ஆசையை விரட்டு
தேனீக்களை மட்டுமாவது தான் விரட்டி விடட்டுமா என்று கவ்வாஸ் கேட்டார். அதற்கு அந்த முதியவர், “முதலில் உனது மனத்தில் இருந்து இனிப்பான மாதுளம்பழத்தைத் தேடும் ஆசையை விரட்டு” என்றார் அவர். கவ்வாஸ் வாய்விட்டு அழத்தொடங்கிவிட்டார். அதன்பின் தனது வாழ்நாளில் அவர் ஒருபோதும் ஆசைக்கொள்ளவில்லை. உடல் நலம் குன்றி, 291-ம் ஆண்டில் இவ்வுலகில் இருந்து மறையும்வரை அவர் எதற்கும் ஆசைக்கொள்ளவில்லை. இறைநம்பிக்கைக்குச் சான்றாக, அவரது வாழ்வு எழுத்து வடிவில் இன்றும் நம்மிடையே தொடர்கிறது.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in