கர்னாடக இசை மேடைகளில் மிகவும் பிரபலமாக ஒலிக்கும் பாடல் ‘வாதாபி கணபதிம்’. இந்தக் கிருதியை எழுதியவர் முத்துசாமி தீட்சிதர். அவர் எழுதிய இன்னொரு முத்திரை பெற்ற கிருதி `ஸ்ரீ மகா கணபதிம்’. இந்தக் கிருதியை கௌளை ராகத்தில் அமைத்திருப்பார்.
`சிந்து பைரவி’ திரைப்படத்தில் இந்தக் கிருதிக்கு பக்கவாத்தியமாக வயலின் மட்டுமே ஒலிக்கும். படத்தின் கதைச் சூழ்நிலைக்கேற்ப, ரசிகர்களின் கைதட்டலையே தாளமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தக் கிருதியை ராக் இசையின் பின்னணியில் பாடியிருக்கிறார் ஸ்மிதா.
ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள், சிவஸ்துதிகள் போன்றவற்றை ஏற்கெனவே பாடியிருக்கும் ஸ்மிதா இம்முறை `த்ரியோரி’ இசைக் குழுவுடன் இணைந்து இந்தக் கிருதியைப் பாடியிருக்கிறார்.
தருணின் டிரம்ஸிலிருந்து தொடங்கி படிப்படியாக தத்தா சாயின் வயலின், மார்க்கின் கீபோர்ட், அலாங்கின் கிடார் என துள்ளல் ஒலியுடன் ஒரு முகப்பு இசையோடு தொடங்குகிறது. ஸ்மிதாவிடமிருந்து ஒலிக்கும் ஸ்வர வரிசைக்கும் அதனூடாகப் பயணிக்கும் வயலின் ஒலியும் டிரம்ஸின் அதிரடியும் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன.
ஆலாபனையில் தொடங்கும் மகா கணபதிம் பாடலை கேட்டுப் பழகிய காதுகளுக்கு இது துன்பத்தைக் கொடுத்தாலும், இந்தக் கால இசையை கேட்டுப் பழகிய காதுகளுக்கு நிச்சயமாக இது இன்பத் தேனாகத்தான் பாயும்!