ஆன்மிகம்

மூழ்கிக் கிடந்த பரந்தாமன்

பிருந்தா கணேசன்

இயற்கை எழிலும் இறையருளும் சேர்ந்த வெகு சில இடங்களுள் வர்கலாவும் ஒன்று. இங்கிருக்கும் அற்புதமான புராதனமான கோவில்தான் ஜனார்த்தன சுவாமி கோவில். எதிர்ப் பக்கத்தில் சக்கர தீர்த்தம் என்ற பெயரில் குளம். நெடுநெடுவென்று படிகள் கோயிலை அடைய, வழியில் இரண்டு அடுக்குகள் கொண்ட கேரளா பாணியிலான வளைவு நம்மை வரவேற்கிறது.

கோவிலின் காலமும் புராணமும்

இக்கோவில் கட்டப்பட்ட காலம், 12-வது நூற்றாண்டு காலகட்டத்தை ஒட்டியதாக இருக்கலாம். இப்போது இருக்கும் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னனால் கட்டப் பட்டது என்று கேரளா நாட்டு வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த இடத்தை பிரம்ம குளம் என்றும் சக்ர தீர்த்தம் என்றும் வர்ணிக்கப்படுகின்றன.

பாண்டிய மன்னன் ஒருவன் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வர்கலா வந்தடைந்தான். அங்கு அவனுக்கு பாவத்திலிருந்து விடுபட்டது போன்ற நிம்மதி ஏற்பட்டது அங்கிருந்த ஒரு முனிவர் அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கடலில் ஏதோ ஒரு இடத்தில் மூழ்கி கிடக்கும் பரந்தாமனின் விக்ரகம்தான் என்று கூறினார் . கனவில் இறைவனும் வந்து அவனுக்கு வழி காட்ட மறு நாள் அதை நீரிலிருந்து மீட்டு அரசன் ஒரு கோயிலும் கட்டினான்

காலம் உருண்டது

17 -ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் உள்ளூர் அரசியின் கைக்கு மாறி இப்போது கேரள அரசின் கோயில்களின் பிரிவின் கீழ் உள்ளது . நுழை வாயிலில் ஒரு இரண்டு அடுக்கு கொண்ட வளைவு உள்ளது. உள்ளே நுழைந்ததும் வருவது சிவன் சந்நிதி அடுத்து ஸ்தல விருட்சமான அரச மரம்.இங்குதான் அனந்த கிருஷ்ணனின் சிலை உள்ளது.

பல நாக வடிவங்களும் உள்ளன. சற்று உள்ளே வெளிப் பிராகாரத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. சிவனுக்கும் சாஸ்தா கோயிலுக்கும் உள்ள கோபுரங்கள் தமிழ்நாட்டு பாணியில் உள்ளன. அருகில் ஒரு நாக லிங்க மரம் உள்ளது.செப்பால் கவரப்பட்ட கொடிக்கம்பம் கோயிலுக்கு முன்னே உயர்ந்து நிற்கிறது.

வட்ட வடிவமான கருவறை அதன் மேல் செப்புத் தகடுகளால் கூம்பு வடிவான குவி மாடம், கூரையில் மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்களைக் கொண்ட சதுர வடிவிலான நமஸ்கார மண்டபம், பலி பீடம்,

இவைகளைச் சுற்றி நாலம்பலம் எனப்படும் உள்பிராகாரம் யாவும் கேரளக் கட்டிடக் கலையின் முக்கிய அம்சங்களாகும் இங்குள்ள கல்வெட்டுகள், ராணி உமையம்மாவின் காலத்தில் புதுப்பிக்கபட்டதாகத் தெரிவிக்கிறது.

தங்கத்தில் அங்கி

கிருஷ்ணாஷ்டமி அன்றுதான் தங்கத்தால் அங்கி அணிவிக்கப்படும். .நாலம்பலத்தை சுற்றி வரும்போது உள்புறச் சுவர்களில் இருக்கும் தீப மங்கையரின் சிற்பங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

மலையாள நாட்காட்டிப்படி கற்கடக மாதத்தில் (ஆனி /ஆவணி) ஆயிரக்கணக்கில் அமாவாசை அன்று பக்தர்கள் கூடுகின்றனர். அன்று கடற்கரையில் ‘பிண்ட தானம்' கொடுக்கின்றனர். திருவனந்தபுரத்திலிருந்து

50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். இங்குள்ள சிறப்பு உயரமாக செங்குத்தாய் காணப்படும் மலைப் பறைகள்தாம் (cliffs). இந்தப் பாறைகளிலிருந்து கடலைக் காண்பதே தனி அழகு. எல்லையில்லா தூரம் வரை நீலப் பெருங்கடல், எந்நேரமும் பொங்கி வரும் பால் போன்ற அலைகள் . கடவுளர்களின் சொந்த ஊர் நிச்சயமாக இதுதான்.

SCROLL FOR NEXT