ஆன்மிகம்

தெய்வத்தின் குரல்: எத்தனை ஜனகர்கள்

செய்திப்பிரிவு

சீதையுடைய அப்பாவின் பேர் – ஜனகர் இல்லை! ஜனகர் என்பது மிதிலையைத் தலைநகராகக் கொண்டு விதேஹம் என்ற ராஜ்யத்தை ஆண்ட சூர்ய வம்சக்கிளைப் பிரிவினரில் நிமி என்பவரின் வழியில் வந்த எல்லாருக்கும் உரிய குடிப் பெயர். சீதையுடைய அப்பாவின் பேர், அதாவது இயற்பெயர், சீரத்வஜர் என்பது. குடிப் பெயரைச் சேர்த்து அவரை சீரத்வஜ ஜனகர் என்று சொல்ல வேண்டும்.

சீரம் என்றால் கலப்பை. சீரத்வஜர் என்றால் கலப்பைக் கொடியை உடையவர். இந்தக் கலப்பைக் கொடிக்காரருக்குப் பொருத்தமாகக் கலப்பை கிளறிவிடும். உழுபாதையிலேயே சீதை அகப்பட்டாள். “சீதா” என்றாலே கலப்பை முனையின் பாதைதான்.

மிதிலை ராஜவம்சத்தைச் சேர்ந்த அநேக ஜனகர்களில் கேசித்வஜ ஜனகர், காண்டிக்ய ஜனகர் என்று இரண்டு பேர். அந்த இரண்டு பேரும் பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகள். தர்மத்வஜ ஜனகர் என்பவர் இவர்களுடைய பாட்டனார். அவருக்கு அமிதத்வஜர், க்ருதத்வஜர் என்று இரண்டு பிள்ளைகள். க்ருதத்வஜரின் பிள்ளை கேசித்வஜர், அமிதத்வஜரின் பிள்ளை காண்டிக்யர்.

தர்மத்தையே ஜீவித லக்ஷ்யமாகக் கொண்டு, கொடியைத் தூக்கிப் பிடிக்கிற மாதிரி உசத்திக் காட்டுகிறவந்தான் தர்மத்வஜன். ஆனால் ‘தர்மத்வஜன்’ என்ற வார்த்தைக்கு ‘ஆஷாடபூதி’, ‘ஹிபாக்ரிட்’ என்றும் கேலியாக ஓர் அர்த்தம் உண்டு. தர்மாநுஷ்டானத்தை அடக்கமாகப் பண்ணாமல் பகட்டாகக் கொடி பிடித்துக் காட்டுகிறவன் போலியாகத்தான் இருப்பான் என்ற அபிப்ராயத்தில் இப்படி அர்த்தம் ஏற்பட்டது. நான் சொன்ன தர்மத்வஜ ஜனகர் இம்மாதிரி போலி இல்லை. இந்த விஷயம் இருக்கட்டும்.

ஆசையற்ற ராமன்

முழு ராஜ்யத்தையும் தலைப் பிள்ளைக்கே பட்டம் கட்டுவதுதான் பொது வழக்கம். ஆனாலும் சில சமயங்களில் இளைய பிள்ளைகளுக்கும் ராஜ்யத்தில் ஸ்வதந்திரமான பங்கு தருவதுண்டு. ஒரு கனிஷ்ட புத்ரன் மஹாசூரனாக யுத்தங்கள் பண்ணிப் புது ராஜ்யங்கள் பிடித்துக் கொடுக்கும்போது பிதாவான ராஜா ஜ்யேஷ்ட புத்ரனுக்கு மட்டுமில்லாமல் இவனுக்கும் மூத்தவனுக்கடங்கிய குறுநில அரசாக இல்லாமல், ஸ்வதந்திரமானதாகவே ராஜ்யத்தில் பங்கு தருவதுண்டு.

ராஜ்ய ஆசையேயில்லாமல், தம்பி ஆண்டால் அது தாம் ஆளுவதற்கு மேலே என்று நினைத்தவர் ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி. முடிவிலே அவர் கோஸல தேசத்தை இரண்டாகப் பிரித்துக் குசன், லவன் இரண்டு பேருக்கும் பட்டம் கட்டினார். அது மட்டுமில்லாமல், கோஸலத்துக்கு அப்பாற்பட்ட ராஜ்யங்களை லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்களின் எல்லாப் பிள்ளைகளுக்கும் பாகம் போட்டுக் கொடுத்தார்.

கேசித்வஜருக்கும் காண்டிக்யருக்கும் தகப்பனார்களாக இருந்த அண்ணா-தம்பி ஜனகர்கள் இரண்டு பேருமே தனித்தனி ராஜ்யங்களுக்கு ராஜாக்களாக இருந்தவர்கள். அதனால் அவர்களுக்கப்புறம் பிள்ளைகளான கேசித்வஜர், காண்டிக்யர் இரண்டு பேரும் அந்தந்த ராஜ்யங்களுக்கு வாரிசாக ஆட்சி பெற்றார்கள்.

கர்ம மார்க்கம் வேதாந்த ஞானம்

பழைய கால ராஜாக்கள் க்ஷத்ரிய தர்மப்படி வீர புருஷர்களாக யுத்தங்கள் செய்து ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போவார்கள். தர்ம சாஸ்த்ரப்படி நல்ல நிர்வாஹம் நடத்துவார்கள். அதோடு யாக யஜ்ஞாதிகளும் நிறையப் பண்ணுவார்கள். இப்படிக் கர்ம மார்க்கத்தில் சிறப்பாக ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு வேதாந்த ஞானமும் இருக்கும்.

புத்ரன் வயசுக்கு வந்ததும் அவனுக்குப் பட்டம் கட்டி விட்டு, ராஜபோகத்தை எல்லாம் விட்டுக் காட்டுக்குப் போய் தபஸ் பண்ணிப் பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். ஆள்கிறபோதே தாமரை இலைத் தண்ணீராக இருந்து கொண்டு நிரம்ப வேதாந்த விசாரம் செய்த ராஜாக்களும் இருந்திருக்கிறார்கள். இப்படியிருந்த ஒரு ஜனகரைப் பற்றி ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே நிறைய வருகிறது.

கேசித்வஜர், காண்டிக்யர் ஆகிய இரண்டு பேரில் கேசித்வஜர் நிரம்ப வேதாந்தக் கல்வி பெற்றவர். ஆனாலும் இந்த நாளில் பல பேர் ஏதோ புஸ்தகத்தில் வேதாந்தம் படித்துவிட்டு, ‘ஆத்மாவை ஒண்ணும் தொடாது; அது சடங்கு, கர்மா எதற்கும் பிடிபடாதது’ என்று சும்மாவுக்காகச் சொல்லிக் கொண்டு, அதனாலேயே எல்லா அநுஷ்டானத்தையும் விட்டு விட்டுத் தாங்கள் எதுவும் தொடாத நிலைக்கு வந்து விட்ட மாதிரி பிரமையில் இருப்பது போலப் பூர்வ காலங்களில் இருக்கமாட்டார்கள்.

படித்து, வேதாந்த தத்துவமெல்லாம் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் அபூர்வமாக எப்போதேனும் எவருக்கேனும்தான் ஈச்வராநுக்ரஹம் ஒரேயடியாகப் புரண்டு வந்து சட்டென்று ஆத்ம ஞானத்தைத் தருமே ஒழிய, மற்ற எல்லாரும் எவ்வளவு படித்திருந்தாலும் படித்த வேதாந்தம் அநுபவமாகணுமானால் அதற்குப் பூர்வ கர்மாவையும் மனஸின் வாஸனைகளையும் யதேஷ்டமாகக் கர்மாநுஷ்டானமும் பக்தியுபாஸனையும் பண்ணிப் போக்கிக் கொண்டால்தான் முடியும் என்று உணர்ந்திருந்தார்கள்.

அதனால் பிறப்புப்படி வாய்த்த ஸ்வதர்மத்தை முறையாகப் பின்பற்றியும், வைதிக கர்மாக்களையும் ஈச்வர ஆராதனையையும் நிறையப் பண்ணியும் வந்தார்கள். இதனால் பூர்வ கர்மாவும், ‘வாஸனை’ என்கிற சித்த மலமும் குறைந்து கொண்டே வந்து, சித்த சுத்தி ஏற்பட்டு, சித்தம் ஆடாமல் நிற்கப் பழக்கப்பட்ட அப்புறமே ஆத்ம தத்வத்தை நேராக விசாரம் செய்யும் பக்குவம் உண்டாகும். அப்போதுதான் ஞானாப்யாஸத்தில் முழுக்கப் பிரவேசிப்பார்கள். முடிவிலே புஸ்தக வேதாந்தத்தை அநுபவ வேதாந்தமாக்கிக் கொள்வார்கள்.

அதாவது, வேதத்தில் கர்ம காண்டம் என்று முதலிலும் ஞான காண்டம் என்று பிற்பாடும் இருப்பதை அநுசரித்துக் கர்மாவில் ஆரம்பித்தே ஞானத்துக்குப் போனார்கள். இம்மாதிரி கேசித்வஜருக்கு ஆத்ம வித்யையில் நல்ல வித்வத் இருந்த போதிலும் அது ஸ்வாநுபூதியாவதற்குப் பூர்வாங்கமாக ஸ்வதர்மப்படி முறையாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். யாகாதி அநுஷ்டானங்களும் பண்ணினார்.

ப்ருஹதாரண்யகத்தில் வரும் ஜனகர், சீதை அப்பா ஜனகர் முதலானவர்கள் ஆத்மாநுபூதியில் ஸித்தியே பெற்ற பிற்பாடும் ராஜ்ய நிர்வாஹம் பண்ணினவர்கள். பார்த்தால் வேடிக்கையாயிருக்கும் – லோகம் மாயை, உடம்பு மாயை, மனசு மாயை என்றிருந்த அத்வைத ஞானிகள் பல பேர் தான் இவற்றை நிஜமாக நினைக்கிற த்வைதிகளைவிடவும் லோகத்திலே காரிய ரூபத்தில் அபாரமாக சாதித்திருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் ஒரு உதாரணம் போதும். பரம அத்வைதியான அவர் முப்பத்திரண்டே வயசுக்குள் ஆஸேது ஹிமாசலம் இந்த தேசத்தை ஓர் இடம் விடாமல் சுற்றி, எத்தனை வாதம், எத்தனை பாஷ்யம், எத்தனை யந்த்ர ப்ரதிஷ்டை, மூர்த்தி ப்ரதிஷ்டை, ஸ்தோத்ர க்ரந்தம், மட ஸ்தாபனம் என்று பண்ணியிருக்கிறார்?

(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)

SCROLL FOR NEXT