நள்ளிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மதீனா நகரம். சலசலக்கும் பேரீச்ச மர ஓலைகளின் ஓசையைத் தவிர எங்கும் நிலவியது நிசப்தம். நெடிதுயர்ந்த உருவம் ஒன்று ஒவ்வொரு தெருவாய் நடந்து கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் ஆளரவமற்ற பாலைவனத் திடலில் மினுக் மினுக்கென்று விளக்கு எரிய அதை நோக்கி நடந்தது.
அங்கே ஒரு மனிதர் சோகத்துடன் அமர்ந்திருந்தார். விசாரித்ததில் கூடாரத்தில் பிரசவ வேதனையில் அவரது மனைவி துடிக்கும் விஷயம் தெரிந்தது. மருத்துவம் பார்க்க பணமுடை வேறு.
இதைக் கேள்விப்பட்டதும் தன் வீட்டுக்கு விரைந்தது அந்த உருவம். தனது மனைவியை உடனே தன்னுடன் கிளம்பும்படி பணித்தது. “நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?” என்று கேட்டார் மனைவி.
“அந்த உணவு இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது!”
“கொஞ்சம் பாலாவது சாப்பிடலாமே?” என்றார் மனைவி.
“வேண்டாம்.. பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். அவற்றை எடுத்துக்கொண்டு சீக்கிரம் கிளம்பு.. போகலாம்!”- என்றது அவ்வுருவம்.
சற்று நேரத்தில் அவர்கள் கூடாரத்தை அடைந்தார்கள்.
மனைவியை உள்ளே அனுப்பி வைத்த உருவம் கூடாரவாசியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, கூடாரத்திலிருந்து.. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்து கூறுங்கள். உங்கள் பூமியில் புதிய அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!” - என்று குரல் வந்தது.
ஜனாதிபதி என்ற சொல் கூடாரவாசியை நிலைகுலைய வைத்தது. பதறியவாறு அவர், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா.. இப்படி..?” - என்றார்.
“இதில் வியப்படைய என்ன இருக்கிறது சகோதரரே? ஒரு நாட்டின் தலைவன் உண்மையில் மக்களின் தலையாய ஊழியனில்லையா?” - என்றார்கள் மாறு வேடத்தில் இருந்த ஜனாதிபதி உமர் அவர்கள்.