ஆன்மிகம்

ஓஷோ சொன்ன கதை: சவுல் பவுல் ஆக முடியும்

ஷங்கர்

அவன் பிறந்தபோது சவுல் என்றே பெயர் வைத்தனர். அவன் தனது இளமையிலிருந்து கிறிஸ்துவையும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களையும் வெறுப்பதிலும் துன்புறுத்துவதிலும் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு இருந்த வெறுப்பு பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும்; அது சாதாரணமானதல்ல; அது முழுமொத்தமுமானது. நீங்கள் ஒன்றை மொத்தமாக வெறுத்தால்தான், அது வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக மாறும்.

ஒரு நாள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் இன்னொரு நகரத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை மாற்றவும் மாற்றுவதற்கு மறுத்தால் தண்டிக்கவும் திட்டமிட்டு சவுல் பயணத்தைத் தொடங்கினான். அவன் போகும் வழியில் திடீரென்று கிறிஸ்து அவன் முன் தோன்றினார். “என்னை ஏன் மோசமாக நடத்துகிறாய்?” என்று கேட்டார்.

சவுலால் நம்பவே இயலவில்லை. அதிர்ச்சியும் பயங்கரமும் தாக்க பூமியில் விழுந்தான். புரண்டு அழுது மன்னிப்புக்காகக் கண்ணீர் சிந்தி கதறி அழுதான். அவனது பார்வை போய்விட்டது. பறிபோன பார்வையுடன் அந்தப் பழைய சவுல் மறைந்துவிட்டான். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வண்ணம் தனது பெயரை பவுல் என்று மாற்றினான். அந்தப் பழைய மனிதன் இறந்துவிட்டான். புதிய மனிதன் வந்தான். இயேசுவின் மிகப் பெரிய நேசன் ஆகி திருச்சபையை நிறுவினான்.

வெறுப்பு நேசமாக மாறமுடியும். சவுலில் இருந்த வெறுப்பின் தீவிரமே இயேசுவாக அவன் முன்னால் தோன்றியது. சவுலின் வெறுப்பால் அவதியுற்றிருந்த நனவிலியே ஏன் இப்படி வதைக்கிறாய் என்று கேட்டது. அந்த அற்புதம் ஏன் நடந்ததென்றால் சவுலின் வெறுப்பு ஒட்டுமொத்தமானது.

எது ஒட்டுமொத்தமாக நம்மைத் தாக்குகிறதோ அது தலைகீழ் மாற்றத்தை அடையும் வாய்ப்பு உண்டு. எதிர் உணர்வுகள் எப்போதும் ஒன்றையொன்று சமன் செய்பவையும்கூட. உங்களால் ஒட்டுமொத்தமாக உங்கள் துன்பத்தைத் தீவிரமாக அனுபவிக்க முடிந்தால், சவுலாக இருக்கும் நீங்கள் பவுலாக மாறிவிட முடியும். விருப்பத்துடன் நேசத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட துயரம் ஆசிர்வாதமாக மாறுவதைப் பார்ப்பீர்கள்.

SCROLL FOR NEXT