திபெத்தில் மார்பா என்னும் சீடனைப் பற்றிய அழகிய கதை ஒன்று நிலவுகிறது. அந்தக் கதையில் நடந்தவை எல்லாவற்றையும் ஒருவர் நம்ப வேண்டியதில்லை. ஆனால் அந்தக் கதை சொல்லும் உண்மை அழகானது.
மார்பா என்னும் இளைஞன் ஒரு குருவைத் தேடிக்கொண்டிருந்தான். அவனது பயணத்தில் ஒரு குருவையும் கண்டான். அவரைப் பார்த்து தாள்பணிந்தான். “நான் இனி என்ன செய்யவேண்டும் குருவே?” என்றான்.
“நீ என்னை வந்து சரணடைந்து விட்டால் போதும், எதையும் நீ செய்ய வேண்டிய அவசியமில்லை. என்னை மட்டும் நம்பு. எனது பெயர்தான் உனக்கு ரகசிய மந்திரம். நீ சிக்கலில் இருக்கும் போதெல்லாம் எனது பெயரை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள். எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.
மார்பா, குருவின் கால்களை மீண்டும் தொட்டு வணங்கினான். குரு சொன்னதை அவன் உடனடியாக முயற்சிக்கத் தொடங்கினான். அத்தனை எளிய பையன் அவன். அவன் நதி மீது நடக்கத் தொடங்கினான். குருவிடம் வருடக் கணக்கில் பயின்றுகொண்டிருந்தான். சீடர்களால் அந்த அதிசயத்தை நம்பவே முடியவில்லை. அவன் நீர் மீது நடந்துகொண்டிருந்தான்.
“உங்களிடம் வந்தவன் சாதாரண ஆள் இல்லை. அவன் தண்ணீரின் மேல் நடந்துகொண்டிருக்கிறான்” என்று சீடர்கள் குருவிடம் தெரிவித்தனர்.
குருவுக்கு இதைக் கேட்டதும் ஆச்சரியம். எல்லாரும் நதிக்கு ஓடினார்கள். மார்பா பாடல்களைப் பாடியபடி, நடனம் ஆடியபடி நதியின் மேல் நடந்துகொண்டிருந்தான். மார்பா கரைக்கு வந்ததும் குரு அவனிடம், “என்னதான் ரகசியம்?” என்று கேட்டார்.
மார்பாவுக்கு வியப்பு. “ஒரு ரகசியமும் இல்லை. உங்கள் பெயரைச் சொன்னேன். தயவுசெய்து என்னை தண்ணீரில் நடக்க அனுமதிக்கவும் என்று உங்களிடம் மானசீகமாகப் பிரார்த்தனை செய்தேன். நடக்க முடிந்தது.” என்றான்.
குருவால் நம்பவே முடியவில்லை. தன் பெயருக்கு இத்தனை வலிமையா என்று ஆச்சரியப்பட்டார். ஆனால் அவரால் ஒருபோதும் தண்ணீரில் நடக்க முடிந்ததே இல்லை. ஒருவேளை தண்ணீரில் நடக்க முயற்சித்தால் நடக்க முடியக்கூடுமோ என்று நினைத்தார்.
அதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களை மார்பாவை வைத்து முயற்சித்துப் பார்க்கலாம் என்று யோசித்தார் குரு. “மார்பா, உன்னால் மலையின் உச்சியிலிருந்து குதிக்க முடியுமா?” என்று கேட்டார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ! அதன்படி” என்றான் மார்பா.
மார்பா மலை மீது ஏறி மறுபுறம் குதித்தான். குருவும் அவரது மற்ற சீடர்களும் மார்பாவைத் தேடி மறுபுறம் சென்றனர். மார்பா புன்னகைத்தபடியே பத்மாசனத்தில் அவர்களை வரவேற்றான். அவன் உடலில் ஒரு சிறு கீறல்கூட இல்லை.
“இப்போதும் உங்கள் பெயரைத்தான் கூறிக் குதித்தேன” என்றான் மார்பா.
மார்பாவைச் சோதித்தது போதும் என்று முடிவுசெய்தார் குரு. தான் முதலில் நீரில் நடந்து பார்க்க வேண்டும் என்று நீரில் இறங்கினார்.
குருவால் நீரில் நடக்க இயலவில்லை. அவர் மூழ்கினார். சீடர்கள் குதித்துக் காப்பாற்றியிருக்காவிட்டால் மூச்சுத் திணறி இறந்தே போயிருப்பார்.
அந்தக் காட்சியைப் பார்த்து மார்பா “என்ன குருவே இது?” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான்.
“என்னை மன்னிக்க வேண்டும் மார்பா. நான் குரு அல்ல. வெறும் ஏமாற்றுக்காரன்” என்றார் குரு.
“நீங்கள் ஏமாற்றுக்காரர் என்றால், உங்கள் பெயர் எனக்கு எப்படிப் பயன்பட முடியும்?” என்றான் மார்பா.
“எனது பெயரால் எந்தப் பயனும் இல்லை. உனது நம்பிக்கையே அற்புதங்கள் புரிந்தது. நீ என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும்தான் உன்னை நீரில் நடக்கச்செய்தது. நான் என்னை நம்பவில்லை. மற்றவர்களையும் நம்பவில்லை. நீயோ கள்ளமற்றவன். நீ என்னை நம்பினாய். அதனால் அற்புதங்கள் விளைந்தன.” என்றார் குரு.
உங்களது துயரங்கள் உங்கள் தவறுகளால் விளைகின்றன. உங்கள் ஆனந்தம் உங்கள் நம்பிக்கையாலும் அன்பாலும் மலர்கிறது.