ஒரு பல்லி, வானில் பறக்கும் பறவைகள் மீது பொறாமைகொண்டபடி, தன் விதியின் மீதும் தன் உடல் வடிவத்தின் மீதும் எரிச்சல் கொண்டு தன் வாழ்க்கையை நிலத்தில் கழித்துவந்தது.
“நான்தான் உலகில் அதிகமாக வெறுக்கப்படும் உயிரினமாக இருக்கிறேன். அசிங்கமாக, வெறுப்பூட்டும்படி, நிலத்திலேயே ஊர்ந்து அலைவதற்குப் பழிக்கப்பட்டிருக்கிறேன்” என்று அது வருந்தாத நாள் இல்லை.
ஒரு நாள், கடவுள் அதன் முன் தோன்றி, ஒரு கூடு கட்டுமாறு கூறினார். பல்லிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்குமுன்னர் எப்போதும் கூடு கட்டியதே இல்லை. தான் இறந்து போவதற்கு முன்னாலேயே சமாதி கட்டும் உத்தரவோ என்றும் நினைத்தது.
இவ்வளவு நாள் மகிழ்ச்சியற்று இருந்தாலும், அது தன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துவந்தது. அது பழகியும் போய்விட்டது. “நான் ஒருவழியாக விஷயங்களுக்குப் பழக்கப்படுத்திகொள்ளும்போது, நீங்கள் என்னிடம் மிச்சமிருக்கும் சின்ன விடுதலையையும் பறிக்கிறீர்கள்”, என்று கடவுளிடம் கோபப்பட்டது. கடவுள் புன்னகைத்தபடி போய்விட்டார்.
பல்லி தன் கூட்டைக் கட்டத் தொடங்கியது. கட்டிய கூட்டுக்குள் போய், தன் இறுதி முடிவுக்காக விரக்தியுடன் காத்திருந்தது. சில நாட்களுக்குப்பிறகு, அது ஓர் அழகான பட்டாம்பூச்சியாக மாறியது. அதனால் வானில் பறக்க முடிந்தது. உலகம் அதைக் கொண்டாடத் தொடங்கியது.
(பாவ்லோ கொய்லோவின் ‘மக்துப்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கதை இது) | தமிழில்: கனி