ஆன்மிகம்

ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்

டி.கே

செல்வந்தராக இருந்து, அதைத் துறந்து துறவு வாழ்க்கை வாழ்வதற்கு மனப்பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் எந்த வயதில் ஏற்படும் என்று சொல்லிவிடமுடியாது. ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகளுக்கு அந்த மனப்பக்குவம் இளம் வயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. 32-ம் வயதிலேயே ஞானம் பெற்று துறவு வாழ்க்கையின் அடையாளமாக பரதேசியாக மாறியவர். பெரும் வணிகராகவும், மிகுந்த செல்வந்தராகவும் இருந்த இவரது இயற்பெயர் சுப்பையா.

இவருடைய காலம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லுகிறார்கள். பரதேசியாக மாறிய பின்னர் கால் போன போக்கில் சென்ற இவர், அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கநாதர் ஆலயத்துக்கு வந்தடைந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் அருள் கிடைக்க அங்கேயே தங்கினார் சுவாமிகள். சுவாமிகள் இக்கோயிலில் தங்கிய காலத்தில் பெரும் காடுதான் கோயிலைச் சுற்றி இருந்தது. காட்டின் நடுவே ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து மந்திரத்தைச் சொல்லி தவமிருந்தார்.

இதைக் கேள்விப்பட்டு இவரைத் தேடி வந்த மக்களின் குறைகளைத் தீர்த்ததாக, நோய்களைக் குணமாக்கியதாக நம்பப்படுகிறது. ஆன்மா தன் உடலை விட்டு நீங்கும் காலத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட சுவாமிகள், காட்டின் நடுவே சமாதியானார். சுவாமிகள் சமாதியான பிறகு அவர்களது சீடர்களின் கனவில் வந்து பல காரியங்களை செய்ய வைத்திருக்கிறார்.

அப்படி உருவானதுதான் அவரது கோயிலும். அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கநாத சுவாமி , மீனாட்சி அம்மன் அருள்பாலிக்கும் சொக்கலிங்க புரத்திலே இக்கோயில் அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள்.

இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை என இரு வேளையிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT