தீவிரமான கட்டுப்பாடுகளைக் கொண்ட சமணர்களின் வாழ்க்கைக்கு மறு பக்கம் உண்டு. அதுதான் வடநாட்டு சமணக் கோவில்களில் காணப்படும் களிப்புடன் கூடிய இனிமை,செழுமை,ஆடம்பரம். இவர்களுடைய கோவில்களில் தலையாய ஆலயம் ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில்களாகும். மவுண்ட் அபு என்னும் மலைவாசஸ்தலத்தில் உள்ளது. குளிர்ச்சியும் தென்றலும் நிறைந்த இடம் இது.
பளிங்கில் கைவண்ணம்
பளிங்கில் இத்தனை நயத்துடனும் நுட்பத்துடனும், கைத்திறனுடனும், மென்மையுடனும் செதுக்கல்கள் வேறெங்கும் உருவாக்கப்படவில்லை என்பது வல்லுநர்கள் கருத்து. கல்லை இத்தனை லாவகத்துடனும், மென்மையுடனும் கையாள முடியுமா என்பது நம்ப முடியாததாகத்தான் உள்ளது. பெரிய பிரகாரம்.இதில் வட்டமான மண்டபம், தாழ்வாரம்,தலைவாயில்.
இவைகளைத் தாங்குபவை அலங்காரத் தூண்கள்.எல்லாவற்றிற்கும் மத்தியில் கருவறை. இந்த முழு வளாகத்தை இந்து சிற்பங்களும் சமணர் சிற்பங்களும் பங்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் நம்மைக் கவர்வது தூண்கள்,வளைவுகள், நிலைவாசலில் இருக்கும் செதுக்கு வேலைப்பாடுகள்தான். ஆரம்பத்தில் தெவல்வாரா (தேவர்களின் இல்லம்) என்றழைக்கப்பட்டது.
இங்குள்ள ஐந்து கோவில்களில் விமல் வாசாஹி ,லூனா வாசாஹி என்ற கோவில்கள்தான் ஒப்பற்ற அழகுடையவை.
விமல் வாசாஹி கோவில்
முதலாம் பீம் தேவ் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்த விமல் ஷா 1031-ல் கட்டிய கோவில் இது. ஆதிநாத் என்ற முதல் தீர்த்தங்கரருக்கான கோவில் இது. சிற்பிகளுக்கு தங்கத்திலும் வெள்ளியிலும் கூலி தரப்பட்டதாம். அந்தக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்புகள் விலைமதிப்பற்றவை.
இந்தக் கோவிலில் பிரபலமானது ரங்க மண்டபமாகும்.கர்ப்பகிரகத்தின் நேர் எதிரே உள்ள இந்த மண்டபம் 12 தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தூண்களிலிருந்து பளிங்கு வழிந்தோடுவது போல் தெரிகிறது.
லூனா வாசாஹி கோவில்
22-வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கும் மாலை போல தோரணங்கள்,அதற்கு மேல் செதுக்கு வேலைகள்,அலங்காரத் தூண்கள் என்று எங்கும் அபரிமிதம். எந்த இரண்டு தூண்களும் ஒரே மாதிரியாக இல்லை. இதில் நம்மைக் கவர்ந்திழுப்பது கவிழ்ந்த நிலையில் விட்டத்திலிருந்து, தொங்கிக் கொண்டிருக்கும் தாமரைதான்.
இதிலிருக்கும் நூற்றுக்கணக்கான பளிங்கு இதழ்கள் பிரகாசமான மொடமொடப்பான காகிதம் போல மாயை புரிகின்றன. இதைப் போல பல இடங்களிலும் பளிங்கு தெளிவாக உள்ளது. நேமிநாதர் அழகிய கதவுகள் வழியாக சம்மணமிட்டபடி தரிசனம் தருகிறார். அடுத்து வருவது புரவலர்களின் அரங்கம். இந்த நீளமான அறையில் கருப்பு சலவைக் கல்லில் யானைகள் செதுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குப் பின்னால் வள்ளல்களுடைய சிலைகளும் (மனைவிமார்களுடன்)அமைந்துள்ளன. மொத்தத்தில் இக்கோவில்கள் காண்பவருக்குப் பரவசம் தருபவை.