நாயகத்தின் தோழர்கள் சஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் பட்டியல் விரிவானது. அவர்களில் சுவன வாழ்க்கைக்குரிய முன்மாதிரிகளாக பத்து தோழர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்,
சொர்க்க வாழ்க்கைக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து தோழர்களின் அறப்பணிகளை அப்துர் ரஹ்மான் பின் அல் அக்னாஸ் விரிவாக எழுதிவைத்துள்ளார். அவர் ஒருநாள் பள்ளிவாசலில் இருந்தபோது , ஒருவர் அலி பின் அபூ தாலிபைப் பற்றி குறை கூறிப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது நபித் தோழர்களில் ஒருவரான ஸயீத் பின் ஜைத் அந்த மனிதரைப் பிடித்துக் கொண்டு கூறினார்.
“பத்து நபர்கள் சுவனம் செல்வார்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள், அதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்றபடி ஒன்பது சஹாபிகளின் பெயர்களைக் கூறினார். பத்தாவது நபர் என்று வினவப்பட்ட போது, ”அவர் வேறு யாருமல்ல. சயீது இப்னு ஜைது ஆகிய நான் தான்!” என்று தமது பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னார்,
சுவர்க்க வாழ்க்கைக்கு நன்மாராயம் கூறப்பட்ட அந்த பத்து நபித் தோழர்கள் அபூபக்கர் சித்தீக், உமர், இப்னுல் கத்தாப் உதுமான், இப்னு அஃப்பான் அலி இப்னு அபூ தாலிப் தல்ஹா இப்னு உபைதுல்லா, ஜுபைர் இப்னு அவ்வாம் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் சஃது இப்னு அபீ வக்காஸ் சயீது இப்னு ஜைது அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் இப்னு என்ற சொல் மகனைக் குறிப்பதாகும்.அதை அடுத்து வருவது தந்தையின் பெயர். நபியின் தோழர்களான சஹாபாக்கள் இறைவனின் அன்பைப் பெறுவது ஒன்றே தங்கள் இலக்கு என்ற நோக்கத்துடன் வாழ்ந்தவர்கள். அதற்காகவே அவர்கள் அரும்பாடுபட்டார்கள். அதனால் சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய தமது தோழர்கள் என்று நபிகள் நன்மாராயம் கூறினார்கள்.
அபூபக்கர், உமர், உதுமான், அலி ஆகிய நால்வரும் அடுத்தடுத்து கலீபாக்களாக –ஆட்சியாளர்களாக- பதவி வகித்தார்கள். அபூபக்கரும் உமரும் நபி நாயகத்துடன் நெருங்கிப் பழகினார்கள். உமர் நல்ல வலிமையும் நற்பண்புகளும் உடையவர். அதனால் அவர்களின் ஆலோசனைகளை அண்ணல் நபி புறக்கணித்ததேயில்லை.
உதுமான் அவர்களும் இறைத் தூதரிடம் நெருக்கமாக இருந்தார். அபூபக்கர், உமர் ஆட்சியின் போது, இரண்டு கலீபாக்களுக்கும் ஆலோசகராக இருந்த பெருமைக்குரியவர் உதுமான்.
நான்காவது கலீபாவான அலி, நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அபூதாலிபின் நான்காவது மகன். இளம் வயதிலேயே இவர் நபிகள் நாயகத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இளையர்களில் இவரே முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர். துணிவும் தியாகச் சிந்தனையும் கொண்டவர். நபிகளின் புதல்வி பாத்திமா நாயகியை திருமணம் செய்துகொண்டவர்.
நபிகளின் பத்து தோழர்களும் இஸ்லாமை வாழ்க்கை நெறியாக வாழ்ந்து காட்டியவர்கள் ஆவர்.
- ஜே.எம்.சாலி