நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான இசை நூல்களில் ஆபிரகாம் பண்டிதரின் கருணாம்ருத சாகரம் முதன்மையானது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ளது நம்முடைய இசை. அதன் அருமைபெருமைகளை அதன் தொன்மையை எளிமையாக எடுத்துச் சொல்லும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளையின் கருணாம்ருத சாகரம் இணையதளம் இணையவழியில் காட்சிப்படுத்துகிறது.
நம்முடைய தொன்மையான இசை மரபு, சங்க காலம், சங்கம் மருவிய காலத்திலிருந்து, நாட்டுப்புற இசையாக, திரையிசையாக தற்போது பாடப்படும் கானா இசைவரை கண்டுள்ள பரிமாணங்களை இந்த இணையதளம் விளக்குகிறது.
இசையின் பல்வேறு வகைகளைக் கையாண்டு அவர்கள் இருக்கும் பகுதியில் இருப்பவர்களை மகிழ்வித்தபடி ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். வெளி உலகுக்கு தெரியாமல், விளம்பர வெளிச்சம் படாமல் ஆனாலும் அமைதியாக இசைப் பணியில் ஈடுபட்டுவரும் எளிய மனிதர்களை இந்த கருணாம்ருத சாகரம் இணையதளம் ஆவணப்படுத்துகிறது.
ஏழு இசை மாநாடுகளை நடத்தி கருணாம்ருத சாகரம் இசை நூலை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கும் ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்திலிருந்து சில பேர் இந்த ஆவணத்தில் இசை குறித்த தங்களின் கருத்துகளையும் ஆபிரகாம் பண்டிதரின் பாடல்களையும் பாடியிருக்கின்றனர். குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களை அபுபக்கர் பாடியிருக்கிறார். ஓதுவார் தேவாரம் பாடியிருக்கிறார். செவ்வியல் இசையில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கியவர் தண்டபாணி தேசிகர். அவரின் நேரடி மாணவரான முத்துக்குமாரசாமி, தேசிகர் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
`பார்க்கப் பலவிதமாய் பல்க அண்டம் தன்னை அடைகாக்கும் திருக்கருணை கண்ணே ரஹுமானே…’ குணங்குடி மஸ்தான் சாகிபு பாடலை, குமரி அபுபக்கரின் குரலிலும்,
`இசையின் எல்லையை யார் கண்டார் என்று
இயம்பிடுவாய் மனமே… இனிமைதரும்…’
- என்னும் தண்டபாணி தேசிகரின் பாடலை முத்துக்குமாரசாமியின் குரலிலும் இந்த இணையதளத்தில் தரிசிக்கலாம்.