முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன் 1,400 ஆண்டுகளுக்கு முன் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கு அருளப் பட்டது. மக்கா நகருக்குக் கிழக்கேயுள்ள ஹிரா மலைக் குகையில் முதன்முதலாக வானவர் ஜிப்ரீல் மூலம் நபி பெருமானுக்கு வழங்கப்பட்டது. அதன் அத்தியாயங்கள் கட்டம் கட்டமாக 23 வருடங்களில் அறிவிக்கப்பட்டன.
குர்ஆன் எனும் அரபி மொழிச் சொல்லுக்கு ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது என்று பொருள். முஹம்மது நபி அவர்கள், தமது நாற்பதாம் வயதில் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் 63 வயதுவரை 23 ஆண்டுளில் பகுதிவாரியாக குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் குர்ஆனின் ‘அலக்' (ரத்தக்கட்டி) என்ற 96-வது அத்தியாயத்தின் ஐந்து தொடக்க வசனங்கள் முதன்முதலாக மொழியப்பட்டன.
நபி நாயகம் வானவர்களின் தலைவர் ஜிப்ரீலை மூன்று முறை முழுத்தோற்றத்தில் பார்த்துள்ளார்கள் என்பதை குர்ஆன் வசனம் கூறுகிறது. ஜிப்ரீல் அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன என்று நபிமணி தெரிவித்தார்கள். ஜிப்ரீலை கிறிஸ்தவர்கள் கேப்ரியல் என அழைப்பதை அறிவோம்.
“மிக்க வல்லமையுடையவர் வானவர் ஜிப்ரீல், அவரே இறைவனின் துாதருக்குக் கற்றுக் கொடுத்தார். உறுதிமிக்க அவர், பின்னர் தமது இயற்கை உருவில் நமது தூதர்முன் தோன்றினார். அவர் வானத்தில் கடைக்கோடியிலிருந்து இறங்கி, நெருங்கி அருகில் வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு அறிவித்ததையெல்லாம், அவனுடைய தூதருக்கு அறிவித்தார்.'' என்று குர்ஆன் வசனங்கள் குறிப்பிடுகின்றன, பாக்கியமிக்க ரமலான் மாத இரவில் இறுதித் தூதருக்கு திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கி வைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
நபி அவர்களுக்கு ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டின் இறுதி ஹஜ்ஜின்போது, ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு அருள்புரிந்து அங்கீகரித்துக் கொண்டேன்'' என்ற அல்மாயிதா அத்தியாய வசனம் இறக்கியருளப்பட்டது.
இறைவனைத் தரிசிப்பதற்காக நபிகள் நாயகம் மேற்கொண்ட மிஹ்ராஜ் விண்ணேற்றப் பயணத்தை ஜிப்ரீலே வழிநடத்தினார். ஏழு வானங்களைக் கடந்து இறைவனின் சன்னிதானத்திற்கு ஒரே இரவில் சென்று வந்ததாகக் கூறப்படும் பயணம் அது.
மிஹ்ராஜ் விண்வெளிப் பயணத்துக்கு மறுநாள் முஹம்மது நபி அவர்களுக்காக ஜிப்ரீல் வானிலிருந்து இறங்கி வந்து தொழுகை நடத்தினார். ஐந்து நேரத் தொழுகைக்கும் ஜிப்ரீல் தலைமையேற்று தொழும் முறையையும் கற்றுக் கொடுத்தார்.
“தொழுகைக்கான நேரம், தொழும் முறை ஆகியவற்றை உங்களுக்கு எடுத்துக்காட்டுமாறு இறைவனால் நான் பணிக்கப்பட்டேன்” என்று நபி அவர்களிடம் ஜிப்ரீல் தெரிவித்தார் ஜிப்ரீல் அவர்களை இயற்கைத் தோற்றத்தில் இரண்டாவது முறை கண்ட செய்தியை நபி அவர்கள் விவரிக்கிறார்கள்.
“நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது வானத்தி லிருந்து ஒரு குரலைக் கேட்டு என் முகத்தை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும், பூமிக்குமிடையில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அச்சமடைந்தேன். வீட்டுக்குத் திரும்ப வந்து துணைவி கதீஜா நாயகியிடம் போர்வையால் போர்த்திவிடும்படிச் சொன்னேன் “எழுவீராக! மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!” என்ற 74- வது அத்தியாயத்தின் ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்!” என நபிமணி கூறினார்கள்.
“மற்றொரு முறையும் ஜிப்ரீல் இறங்கக் கண்டார். ஸித்ரதுல் முன்தஹா எனும் வான எல்லையிலுள்ள இலந்தை மரத்தருகே அதன் சமீபத்தில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சொர்க்கம் இருக்கிறது. ஸித்ரதுல் முன்தஹா எனும் அம்மரத்தைச் சூழ்ந்து கொண்ட வேளையில், அவருடைய பார்வை விலகவில்லை, அதைக் கடந்து மாறிவிடவுமில்லை. திடமாக அவர் தம்முடைய ரட்சகனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்''. குர்ஆன் வசனங்கள் இவை.
குர்ஆனில் ஜிப்ரீல் “மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து ஜிப்ரீல் என்னும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம்” (ரிஷபம் அத்தியாயம்) “நபியே! மெய்யாகவே இதை உம் இறைவனிடமிருந்து ஜிப்ரீல் தான் இறக்கிவைத்தார் என்று கூறுவீராக!” (தேனீ அத்தியாயம்) “பரிசுத்தமான ஒரு மகன் உமக்கு அளிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதற்காக இறைவனால், அனுப்பப்பட்ட ஜிப்ரீல் எனும் தூதன் நான்!” (மரியம் அத்தியாயம்) |
- ஜே. எம். சாலி