கார்த்திகை மாதம் முதல் நாளில் வைகறை பொழுதில் வீசும் காற்றில் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷம் கலந்திருக்கும். அன்றிலிருந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்றுவருவதே மறுபிறவிக்கு சமம் என்னும் ஐதீகம் நிலவுகிறது.
அய்யப்பனின் பெருமையைப் பாடும் எத்தனையோ பாடல்களை பெரிய மேதைகளின் இசையமைப்பில் பலரும் பாடியிருந்தாலும் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும் `ஹரிவராசனம்’ பாடலுக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.
இந்தப் பாடலுக்கு பலரும் இசையமைத்து இருந்தாலும் ஜி.தேவராஜன் இசையில் ஜேசுதாஸ் பாடிய பாடலே சபரிமலையில் நடை சாத்தும் வேளையில் ஒலித்துவந்தது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடலின் மெட்டிலேயே தற்போது மலையாளத்தில் `விஸ்வ விஸ்மயம்.. தேவ சங்க மேஸ்வரம்…’ என்னும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
கானக வாசன்; கான விலாசன்
வட இந்தியாவில் பக்த மீரா, பக்த துக்காராம், ராமதாசர் போன்றவர்களால் செழுமையாக வளர்க்கப்பட்ட இசை வடிவம் பஜனை பத்ததி. தென்னகத்தில் பஜனை பத்ததி பாணியை பல ஆண்டுகளுக்கும் முன்பாகவே இயல்பாக வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றியிருக்கிறது அய்யப்ப பக்தர்களின் பக்தி இசை.
சரண கோஷப் பிரியரான அய்யப்பனுக்கு சபரிமலையில் அதிகாலையில் நடை திறக்கும்போது, ‘வந்தே விக்னேஸ்வரம்..’ என்ற அய்யப்ப சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சியாக ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும். மாலையில் நடை திறக்கும்போது, ‘ஸ்ரீஒகோவில் நடை துறன்னு’ என்ற மலையாளப் பாடல் ஜெயனின் (ஜெய-விஜயன்) குரலில் ஒலிக்கும். தொடக்கத்தில் ‘ஹரிவராசனம்’ பாடலை அத்தாழ பூஜையின் போதே பாடிவந்திருக்கின்றனர்.
‘ஹரிவராசனம்’ பாடல் ஒலித்து முடிக்கும் நேரத்தில், கதவை மெதுவாக சாத்திவிட்டு அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். சுவாமியைத் தூங்கவைக்கிற தாலாட்டுப் பாடல்போல இருப்பதால் மலையாளத்தில் இதை ‘உறக்குப் பாட்டு’ என்கிறார்கள். தற்போது சன்னிதானத்தில் பழைய ஹரிவராசனம் பாடலே ஒலிக்கிறது.
தற்போது ஜேசுதாஸ் ஹரிவராசனம் மெட்டில் பாடியிருக்கும் ‘விஸ்வ விஸ்மயம்’ பாடலைக் கேட்கும் போதும் நம் மனம் நிம்மதி அடைகிறது. லேசாகிறது. பறவையின் அகன்ற றெக்கையிலிருந்து விடுபட்ட ஒற்றை இறகாகி நாம் பறப்பதை நாமே காணும் ஒரு வித்தியாச அனுபவத்தைத் தருகிறது இந்தப் பாடல்.