ஹிஜ்ரி ஆண்டு 12 மாதங்களைக் கொண்டிருப்பதையும், அதன் சிறப்பையும் பற்றி குர்ஆன் எடுத்துரைக்கிறது. “நபியே! மாதந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் பிறக்கும் புதுப் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும்:அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் காலங்களையும் ஹஜ்ஜையும் அறிவிக்கக்கூடியவை.” என்று ரிஷபம் அத்தியாயம் கூறுகிறது.
முஹம்மது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சி ஹிஜ்ரா ஆகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஹிஜ்ரி உருவானது. கலீபா உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் ஹிஜ்ரி ஆண்டு தொடங்கப்பட்டது. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து 12 மாதங்களைக் கொண்டதாகும் ஹிஜ்ரியின் புத்தாண்டுக் கொண்டாட்டம் முதல் மாதமான முஹர்ரத்தில் நடைபெறுகிறது.
சபர் இரண்டாம் மாதம் ஆகும். துல்கஃதா, துல்ஹஜ், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாதில் அவ்வல், ஜமாதில் ஆகிர், ரஜப், ஷாபான், ரமலான், ஷவ்வால் ஆகியவை பின்னால் வரும் மாதங்களாகும். ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்டது. ஹிஜ்ரி ஆண்டு, பிறைக் கணக்கில் அமைந்தது முஹர்ரம் முதல் நாள் இஸ்லாமிய புத்தாண்டு தினம். ரஜப் 27-ம் நாள் புனித மிஹ்ராஜ்.
ரமலான் மாதத்தின் முதல் நாளன்று நோன்பு நாள் தொடங்குகிறது. ரமலானில் ஒரு நாள் லைலத்துல் கத்ர் எனும் 27-ம் நோன்பு தினம் ஆகும். ஷவ்வால் முதல் தினம் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது, துல்ஹஜ் 8-10 ஹஜ் செய்யும் நாட்கள், துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் ஹஜ் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முஹர்ரம் மாதத்தில்தான் பற்பல அற்புதங்களும் அரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. போர் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட மாதம் இது, ரபியுல் அவ்வல், நபிகள் நாயகத்தின் வாழ்வில் தொடர்புடைய சிறப்பான மாதம், இந்த மாதத்தின் 12-ஆம் நாளில்தான் அவர்கள் பிறந்தார்கள்.
அது கி.பி. 570-ம் ஆண்டு திங்கள்கிழமை, மறைந்த நாள் கி.பி. 632 ஜுன் 8, சந்திரக் கணக்கின்படி அவர்கள் வாழ்ந்த காலம் 63 ஆண்டுகள். ரமலான் மாதம் நோன்பு நோற்கும் மாதமாகும். துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் என்ற புனிதப் பயணத்தை நிறைவேற்ற வேண்டும். ஹஜ் கடமையைச் செய்ய முடியாதவர்கள் உம்ரா பயணம் செல்லலாம்.
ரமலான் நோன்பு மாதத்தின் 27-ம் நாள் லைலத்துல் கதர் இரவில்தான் குர்ஆன் வேதம் அருளப்பட்டது. தற்போது நடைபெறும் சபர், ஹிஜ்ரி ஆண்டின் இரண்டாம் மாதம் ஆகும். எல்லாவற்றுக்கும் வெற்றிகரமான மாதமாக இது கருதப்படுகிறது.
மக்கள் பொறுமையுடன் செயல்பட்டால் சபர், நன்மைகளை வழங்கும் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள். ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது சபர் மாதத்தில் பூரண நலம்பெற்றதாக நபிமணி தெரிவித்துள்ளார்கள்.
- ஜே.எம். சாலி