ஆன்மிகம்

திருவாரூரில் கைசிக புராணம்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

ஏகாதசியைக் காட்டிலும் பெரிய விரதம் ஏதுமில்லை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களிலிருந்து 11-வது நாள் ஏகாதசியும், 12-வது நாள் துவாதசியுமாகும். ஏகாதசியைவிட துவாதசி முக்கியம்.

அன்றைய தினத்தில் உணவு வழங்கி நம்மால் இயன்ற தர்ம காரியங்களைச் செய்யும்போது திருமாலே நேரில் வந்து நமது உணவைச் சாப்பிட்டதாக ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க துவாதசியின் மகிமையை ஓங்கிச் சொல்லக்கூடியதுதான் கைசிக புராணம்.

கைசிகம் என்பது ஒருவகைப் பண். வராக அவதாரத்தில் பூமாதேவிக்கு வராகப் பெருமாள் அருளியதாக புராண வராலாறுகள் கூறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி திருவடிவழகிய நம்பித் திருக்கோயிலில் நம்பிபெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த மாதங்கன் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் இந்தக் கைசிக புராணம்.

இதை 500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். காலமாற்றத்தில் இந்த நாடகம் அழிந்துவிட்ட நிலையில், டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த நாட்டிய வல்லுநர் அனிதா ரத்னத்தின் முயற்சியால் மறைந்த பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் புத்துருவாக்கம் செய்யப்பட்டது. நம்பாடுவான் (மாதங்கன்) வழிபட்ட, அதே கார்த்திகை மாதம் வருகின்ற சுக்லபட்ச வளர்பிறை கைசிக ஏகாதசி முடிந்த துவாதசியில் 18 ஆண்டுகளாக திருக்குறுங்குடி அழகிய நம்பித் திருக்கோயிலில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் முன்னோட்டமாகத் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் நடத்தப்படும் இந்த நாட்டிய நாடகம் அண்மையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் கோதண்ட ராமசாமி ஆலயத்தில் நடைபெற்றது. புகழ்மிக்க நட்டுவாங்கக் கலைஞர், ஹேரம்பநாதன், மாதங்கனாக ராஜகுமாரி, ரெங்கநாயகி, பிரம்ம ராட்சசனாக எஸ்.கோபி, ராஜன், ஹரிஹரன், நம்பிக்கிழவராக எம்.ஏ.அருணோதயம், கயல்விழி, துணைப்பாத்திரங்களாக கே.பி.கோகிலாவாணி, சுமதி, கலைவடிவு, மோக்ஷதாரணி ஆகியோரின் உருக்கமான நடிப்பும் நாட்டியமும் காண்போரை புராண காலத்துக்கே அழைத்துச் சென்றன.

SCROLL FOR NEXT