திருப்பத்தூர் பகுதியில் விவசாயம் செழிப்பதற்கும், விஷப் பூச்சிகள் கடியிலிருந்து காப்பதற்கும் அந்தப் பகுதி மக்களால் வணங்கப்படும் நாராயணன் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் வன்புகழ் நாராயணப் பெருமாள்.
திருப்பத்தூர், கொங்கரத்தி திருத்தலம் வன்புகழ் நாராயண பெருமாள் கோயிலில் ஆட்சிபுரியும் இவர் சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படுகிறார். இவரின் அருள் விஷப் பூச்சிகள் தீண்டுவதிலிருந்து காப்பாற்றுகிறது எனும் நம்பிக்கையை இந்தப் பகுதி மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
விவசாயிகளின் நண்பன்
தங்களின் வயல்வெளிகளைக் காக்கும் பெருமாளாக இந்தப் பகுதி மக்களால் போற்றப்படுகிறார் வன்புகழ் பெருமாள். அதனால் இந்தப் பெருமாளுக்கு தங்களின் வயல்களில் விளையும் முதல் அறுவடையை காணிக்கை ஆக்குகிறார்கள்.
‘நாராயணா... நாராயணா...’ என்னும் பாடலில் காணிக்கை நெல் கொடுத்தோம் நாராயணா... களஞ்சியத்தை நிறைத்திடுவாய்.. நலம் தரும் வன்புகழ் நாராயணா..’ என எளிய மக்கள் வழிபடும் சொற்களோடு இந்தப் பாடல் அமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.
இந்தப் பாடலை ‘கண்டரமாணிக்க நவரத்ன மாலை’ எனும் தலைப்பின் கீழ் ராம் இசையகம் வெளியிட்டிருக்கிறது. இந்த காணொலியில் இருக்கும் பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் சாயி செல்வம், இசையமைத்துப் பாடியிருப்பவர் டி.எல்.தியாகராஜன். இவர் வேறு யாருமல்ல, ‘வாராய் நீ வாராய்’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஆசையே அலைபோலே’, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ போன்ற மறக்கமுடியாத பாடல்கள் நம் காதுகளில் இன்றைக்கும் ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான திருச்சி லோகநாதனின் மகன்தான் இவர்.