ஆன்மிகம்

தேர்த் திருவிழா: பாவம் போக்கும் அந்தியூர் குருநாத சுவாமி

ஜி.பாலமுருகன்

குருநாதரைத் தொழுதால் அருளும் பொருளும் குன்றாக வளரும் என்பார்கள். பூர்வஜென்ம சாபத்தையும் பாவத்தையும் போக்கி, வளமான வாழ்வைத் தருபவர் குருநாத சுவாமி. அவரது ஆலயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் குருநாதரின் வனம் உள்ளது.

கோயிலில் மூலவராக வீற்றிருக்கிறார் குருநாத சுவாமி. ஒரு பாதி சிவனின் அம்சமாகவும் மறு பாதி முருகனின் அம்சமாகவும் விளங்கும் குருநாதர், முரட்டு மீசை, ஒரு கையில் வாள் , மற்றொரு கையில் வேல் என நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவருடன் பெருமாளும் காமாட்சி அம்மனும் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்புரிகின்றனர்.

வனத்தில் குருநாதர் குன்றாகக் காட்சி அளிக்கிறார். காமாட்சி அம்மன் தவ நிலையில் இருந்து அருள்பாலிக்கிறார். இவர்களுடன் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன் சுவாமிகள், பெருமாள், ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர், கருடாழ்வார், அகோர வீரபத்திரர், முனிராயன் ஆகியோர் குடிகொண்டுள்ளனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.

தவத்திற்கு இடம் மறுத்த முனிராயன்

முன்பொரு காலத்தில் காமாட்சி அம்மன் தவம் இருப்பதற்காக அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். அப்போது அந்தப் பகுதியில் மாய மந்திரத்தில் வல்லவனாகத் திகழ்ந்த உத்தண்ட முனிராயன், அம்பாளை வழிமறித்து, இங்கு தவமிருக்க இடம் தர முடியாது என மறுத்தார். அன்னைக்கு வனத்தைத் தர மறுத்ததை அறிந்த குருநாதர், தனது சீடரான அகோர வீரபத்திரரை அனுப்பி, முனிராயனை அழிக்க உத்தரவிட்டார். அகோர வீரபத்திரரும் வனத்துக்குச் சென்று சண்டையிட்டு முனிராயனை அழித்தார்.

இறப்பதற்கு முன்பு மனம் திருந்திய முனிராயன், ''என் அகந்தையை அழித்த குருநாதா.. உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜென்ம சாபம் நீங்கப் பெற்றேன். இந்த வனத்தில் அன்னை காமாட்சி தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். என்றென்றும் உங்களுடனே இருக்க ஆசைப்படுகிறேன். அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பித் தலை வணங்கி நிற்க அருள்புரிய வேண்டும்'' என்று வரம் கேட்டான்.

குருநாத சுவாமியும் வரத்தைக் கொடுத்து முனிராயனை ஆட்கொண்டார்.

சாபத்தையும் பாவத்தையும் போக்குபவர்

இதனால், அசுர குணம் கொண்டவர்களுக்குக்கூட குருநாத சுவாமி பூர்வ ஜென்ம சாபத்தையும், பாவத்தையும் போக்கி, நல்லருள் புரிவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. வனக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனிராயரும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்து வந்திருப்பது ஆலயச் சிறப்பு. இங்கு வந்து வணங்கும் பக்தர்கள், “குருநாதா, உன் குன்று வளர்வதைப்போல் என் குலமும் வளர வேண்டும்'' என நெஞ்சுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களையும் குருநாதர் நிறைவேற்றி வைக்கிறார்.

ஜென்ம சாபம், பாவம் நீங்குவதற்கு மட்டுமின்றி பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகளால் தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்கவும் குருநாதரை மக்கள் வழிபடுகின்றனர். குருநாதருக்கும், காமாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பலரது குல தெய்வமாகவும் குருநாத சுவாமி விளங்குகிறார். குழந்தை இல்லாதவர்கள், வனக்கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் சேலைத் தலைப்பைக் கிழித்துத் தொட்டிலாக்கி, அதில் ஒரு கல்லை வைத்துக் கட்டி விடுகின்றனர். இதனால் தங்களுக்குப் பிள்ளைப் பேறு கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆடிதோறும் விழா

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் குருநாதருக்கு விழா எடுக்கின்றனர். ஆடி முதல் புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. நான்காம் புதன்கிழமை பல்லக்கில் காமாட்சி அம்மனும், சிறிய மகாமேரு தேரில் பெருமாளும், பெரிய மகாமேரு தேரில் குருநாத சுவாமியும் புதுப்பாளையம் கோயிலில் இருந்து வனத்துக்குப் புறப்படுவர். பல்லக்கையும் தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்தே வனத்துக்குக் கொண்டுசெல்கின்றனர். அன்றிரவு வனத்தில் தங்கிவிட்டு, மறுநாள் மூவரும் மீண்டும் கோயிலுக்குத் திரும்புகின்றனர்.

நான்கு நாட்கள் நடக்கும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

SCROLL FOR NEXT