ஆன்மிகம்

வெண்குதிரையில் தோன்றும் கல்கி- ஆகஸ்ட் 27: கல்கி ஜெயந்தி

என்.ராஜேஸ்வரி

கல்கி அவதாரம் செய்த நாளே கல்கி ஜெயந்தி. கல்கி அவதாரம் நிகழ்ந்தால்தானே அதனை ஜெயந்தியாகக் கொண்டாட முடியும். கல்கியோ கலியுகத்தின் இறுதியில்தானே பிறப்பெடுப்பார். இக்கால கட்டத்தில் கல்கி ஜெயந்தியை எப்படிப் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்க முடியும் என்ற ஐயம் எழக்கூடும்.

யுகங்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. இவை நான்கும் சேர்ந்தது சதுர் யுகம். பல சதுர் யுகங்கள் உள்ளதால், ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றுவதற்காக கல்கி, பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

இதற்கு முன் சதுர் யுகத்தில் கல்கி அவதாரம் எடுத்த நன்னாளே கல்கி ஜெயந்தி. அந்த நன்நாள் இவ்வாண்டு ஆகஸ்ட் 27 அன்று கல்கி ஜெயந்தி என்று குறிக்கப்பட்டுள்ளது.

யுகக் கணக்கு

கிருத யுகத்திற்கு 17,28,600 ஆண்டுகள். திரேதாயுகத்திற்கு 92,96,000 ஆண்டுகள். துவாபர யுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள். கலியுகத்திற்கு 4,32,000 ஆண்டுகள் என வகுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடப்புச் சதுர்யுகத்தில் கலியுகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என்கின்றனர் சான்றோர். இந்த கலியுகத்தில் கல்கி பிறக்க இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகள் உள்ளன என்றால் மிகையில்லை.

கலி லட்சணம்

கலியுகம் பிறந்ததும் அதன் தோஷத்தால் மக்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வேத தர்ம மார்க்கங்கள் குழம்பும். ஆளும் அரசர்களே திருடுவார்கள். அதர்மமே தர்மமாகும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். இவை எல்லாம் கலியின் லட்சணங்களே.

இப்படிப்பட்ட கோரமான கலியை ஒழிக்க, கல்கி வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு உலகெங்கிலும் சுற்றித் திரிந்து, அரசாள்பவர் என்ற பெயரில் மறைந்து வாழும் கோடிக்கணக்கான திருடர்களைக் கொன்று குவிப்பார்.

துஷ்டர்களும் அழிவர். இதனால் காற்றில் புண்ணிய வாசனை கலந்திருக்கும். இதனால் மக்கள் மனத்தெளிவும், மனோதிடமும் பெறுவர். அந்நேரம் முதல் மக்கள் மனதில் சத்துவ குண சீலரான கல்கி வாசம் செய்வார். கல்கியை எண்ணத்தில் கொண்டவர்களின் சந்ததி நல்ல முறையில் பன்மடங்கு பெருகும்.

கலியை இறுதி யுகமாகக் கொண்ட சதுர் யுகம் முடிவுறும். மீண்டும் இனிமையான கிருத யுகம் சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் கூடும்பொழுது, தோன்றும் என்கின்றனர் சான்றோர்.

SCROLL FOR NEXT