ஆன்மிகம்

அன்னை மரியாள் எனும் முன்மாதிரி

அ.ஹென்றி அமுதன்

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவரை ஈன்று, வளர்த்து உலகுக்குத் தந்த அன்னை மரியாளை வழிபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆரோக்கிய அன்னை வேளாங்கன்னியாக அருள்பாலித்துவரும் மரியாளின், விண்ணேற்றப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அன்னை மரியாளின் பிறந்தநாளான செப்டம்பர் 8 ஆம் தேதியை ‘ ஆரோக்கிய அன்னை திருவிழாவாக’ கொண்டாடுகிறார்கள்.

கத்தோலிக்க மதத்தின் தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னை மரியாளின் வாழ்வு மலர்பாதையில் நடந்து வந்தது அல்ல. ஒரு தன்னலமற்ற தாயாக அவர் இருந்தார். அவர் வாழ்ந்து காட்டிய முன்மாதிரி அபூர்வமானது.

தன்னலமற்ற அன்பு

மனித குலத்தை மீட்கப் போகும் தனது மகனை, ஆண்-பெண் பாலுறவு எனும் முதல் பாவத்தின் வழியாக உலகுக்கு அனுப்பப் பரலோகத் தந்தை விரும்பவில்லை. தன்னலமற்ற, ஆனால் தேவச் சட்டத்தையும், தீர்க்க தரிசனங்களையும் மதித்து நடக்கும் ஞானம் நிறைந்த ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவைக் கருக்கொள்ளச் சித்தம் கொண்டார். அதற்கு அவர் தேர்வு செய்த உத்தமப் பெண்மணிதான் மரியாள்.

அப்போது மரியாளுக்கு நசரேத்தூர் யோசேப்புடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.தனது வாழ்வின் முக்கிய பகுதியாகிய திருமண வாழ்வை எதிர்கொள்ளக் காத்திருந்த நேரத்தில், காபிரியேல் இறை தூதன் அவர் முன் தோன்றி அறிவித்தார். மரியாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் பயந்தார். பிறகு ஆச்சரியப்பட்டார். ஒரு கன்னிகையாக இருந்ததால், “என் கணவனை நான் அறியேனே? எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என தெளிந்த சிந்தனையுடன் கேட்டார். இந்தப் பிறப்பு பரிசுத்த ஆவியால் சம்பவிக்கும் என்பதை இறைதூதன் அறிவித்தபோது, பரலோகத் தந்தை அனுப்பிவைத்த அந்தச் செய்தியை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்று கூறினார்(லூக்கா 1:30-38).

கடவுள் தன்னைத் தேர்ந்துகொண்டதை தனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியமாக மதித்து ஏற்றுக்கொண்டாலும் அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும், கஷ்டங்களையும், தாங்கிக்கொள்ள முடிவு செய்தார். எனினும் மனபோராட்டங்கள் அவரை தாக்காமலா இருந்திருக்கும்? நமக்கென்று நிச்சயயிக்கப்பட்ட ஆண்மகன் திருமணத்துக்கு முன்பே நாம் கர்ப்பமானதை அறிந்துகொள்ளும்போது, என்னை மணரத்து செய்ய நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மரியாளைத் துன்புறுத்தாமலா இருந்திருக்கும்? ஆனால் கடவுள் அனைத்தையும் வழிநடத்துவார் என்று மரியாள் திடமான விசுவாசம் கொண்டார்.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்து கடும் மனப்போராட்டத்தில் இருந்த யோசேப் மரியாளை ரகசியமாக மணரத்து செய்துவிட நினைத்தார் ஆனால் கடவுள் யோசேப்பை ஆற்றுப்படுத்தினார்.

நம்பிக்கை வைத்த நல்லாள்

யோசேப்புக்குத் தோன்றிய தேவதூதன் “உன் மனைவியாகிய மரியாளைக் காக்கத் தயங்காதே; அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றார்.

அந்தத் தெய்வீகக் கட்டளையைப் பெற்ற பிறகு, யோசேப்பு அதற்கேற்ப செயல்பட்டு மரியாளைக் கண்டு அவரைக் கண்ணும் கருத்துமாக காத்து வந்தார்(மத்தேயு 1:20-24). ஏழைக் குடும்பத்தின் தாய்

பரலோகத் தந்தை தனக்குக் கொடுத்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு தெய்வத்தாயாக மாறிய மரியாள், இயேசு பிறந்து சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, எருசலேமுக்குச் சென்று நியாயப் பிரமாணத்தில் சொல்லப்பட்டிருந்தபடி பலி செலுத்தினார்கள். நியாயப் பிரமாணக் கட்டளைப்படி, காட்டுப்புறாவுடன் செம்மறியாட்டுக் கடாவையும் பலியாகச் செலுத்த வேண்டும்.

ஆனால் அவர்களால் அந்தப் பலியை செலுத்த முடியவில்லை. ஏழைகளுக்காக நியாயப் பிரமாணத்தில் ஓர் ஏற்பாடு இருந்தது. அதன்படி யோசேப்பும் மரியாளும் ‘ஒரு ஜோடி காட்டுப் புறாவை அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளை’ காணிக்கையாகச் செலுத்தினார்கள்(லூக்கா 2:22).

விலை குறைந்த ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தியதால் அவர்கள் ஏழைகள் என்பது தெரியவருகிறது. ஒரு ஏழைக் குடும்பத்தின் இல்லத் தலைவியாக மரியாள் வாழ்ந்தார்.

எருசலேம் தேவாலயத்துக்குக் தன் கணவரோடு சென்று பலிசெலுத்தித் திரும்பியபோது, சிசுபாலன் குழந்தை இயேசுவைக் கண்டார் ஒரு முதியவர். அவர் சிமியோன். பக்தியும் ஞானமும் மிக்க முதிய இறைவாக்கினரான அவர் மரியாளிடமிருந்து குழந்தையை வாங்கி ஆசீர்வதித்த அதேநேரம் “உன் இதயத்தை ஒரு வாள் உருவிப்போகும்”(லூக்கா 2:25-35) என்று கூறினார்.

“பெண்ணே பின்னாளில் உன் மகன், சிலுவை மரணத்துக்கு தீர்ப்பிடப்படுவன். அப்போது உன் இதயம் நொறுங்குண்டு போகும் என்பதையே சிமியோன் அவ்வாறு முன்னுரைத்தார். சிமியோன் அப்படிக் கூறியதைக் கேட்டு அந்தத் தாய் எப்படித் துடித்திருப்பார்?

காணமல் போன மகன் கண்ணீர் சிந்திய தாய்

பிறகு இயேசு பதின் பருவத்தைத் தொட்டு நின்ற சிறுவனாக இருந்தபோது பாஸ்கா பண்டிகைக்காக யோசேப்பு தனது குடும்பத்தை எருசலேமுக்குக் கூட்டிச் சென்றார். ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டியதாக இருந்தபோதிலும், ஆண்டுதோறும் குடும்பமாக எருசலேமுக்குச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது.

நாசரேத்திலிருந்து எருசலேம் செல்வதற்கு அவர்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. கணவரின் சொல்லைத் தட்டாமல் மரியாள் ஒவ்வொரு ஆண்டும் அவரோடு நடந்து வந்தது மட்டுமல்ல, வழிநெடுகிலும் அவர்களுக்கு சமைத்துத் தந்து, அவர்கள் களைப்படையாமல் பார்த்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட பாஸ்கா பயணத்தில் தன் மகன் காணாமல் போய்விட்டால் ஒரு தாயின் மனநிலை எப்படியிருக்கும். கண் முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த மகன் இயேசுவைக் காணவில்லை என்றதும் தவித்துப்போனார்.

உள்ளம் பதைபதைக்க எருசலேமை அடைந்ததும் அங்கே தேவாலயத்தில் தன் மகனைக் கண்டார். அந்த தெய்வத்தாய்க்கு மகன் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனால் அங்கே நியாயப் பிரமாணத்தில் தேர்ச்சி பெற்ற போதகர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் இயேசு பாலன்.

இதைப் பார்த்துக் கோபம் அத்தனையும் வடிந்துபோனது. 12 வயதே நிரம்பிய தன் மகன் கடவுளுடைய வார்த்தையில் அதிக ஞானமுடையவராகவும் அறிவுடையவராகவும் உரையாடுவதைப் பார்த்து மரியாள் வியந்தார். மகனின் மேதமை அந்தத் தாயை கனிய வைத்தது.

மகனின் மரணத்தைத் தாங்கிய தாய்

இவை எல்லாவற்றையும்விட கண் முன்னால் ரத்தம் சொட்டச் சொட்ட சிலுவையைச் சுமந்தபடி கல்வாரி மலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட மகனைச் சந்தித்த தாயின் பார்வை மொழியை எண்ணிப்பாருங்கள்.

பிறகு குற்றுயிரோடு கள்வர்கள் நடுவே மகன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டபோது எப்படித் துடித்திருப்பார். பிறகு அவர் உயிர் விட்டதும், சிலுவையிலிருந்து இறக்கிய மகனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டபோது அந்தத் தாயின் இதயத்தை சீமோன் குறிப்பிட்ட கொடுந்துயர் எனும் வாள் எத்தனையாவது முறையாக ஊடுருவிச் சென்றிருக்கும்? இறைமகனை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று, வளர்த்து பிறகு மரணத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பெண் அறிந்திருந்து வாழ்நாள் முழுவதும் துயர் கொள்வது எத்தனை பாரமானது? இத்தனை பாரங்களை மரியாள் சுமந்த காரணத்தால்தால் இன்று உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

அன்னைமரியாள் எனும் முன்மாதிரி

மீட்பராகிய தன் மகன் மீது மரியாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகும் அந்த விசுவாசம் தணிந்துவிடவில்லை. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின், ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடி வந்த உண்மையுள்ள சீடர்களுடன் அவரும் இருந்தாள். அவர் ஏற்றுக்கொண்ட வலிகள், அவரை வழிபாட்டுக்குரிய அன்னையாக மாற்றியிருக்கின்றன. இவர் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

SCROLL FOR NEXT