அன்னை ஆயிஷா அம்மையார் நபிகளாரின் துணைவியார் ஆவார். விருந்தினர்களை உபசரிப்பதில் அவர் பெயர் பெற்றவர்.
ஒரு சமயத்தில் பெண்மணி ஒருவர், ஆயிஷா அம்மையாரைக் காண வந்தார். அவருடன் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெண்ணை யும், குழந்தைகளையும் ஆயிஷா அம்மையார் அன்போடு வரவேற்றார். பக்கத்தில் அமர வைத்தார். அவர்கள் புன்முறுவலுடன் பேச ஆரம்பித்தார்கள்.
மதீனாவில் உணவு கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்ட காலம் அது. நபிகள் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணும் உண்ண ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்தான் வந்திருந்தார்.
ஆனால், அன்பு நபியின் வீட்டிலோ அவர்கள் உண்பதற்கே உணவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விருந்தினருக்கு அளிக்க உணவேது?
பொதுவாகவே நபிகளார் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். ஏழ்மை நிலையிலேயே காலம் கழித்தார். அவர்களது வீட்டில் வாரக் கணக்கில் அடுப்பு எரியாது. உண்பதற்கு உணவு ஏதும் இருக்காது. வெறும் மாவு, பேரீச்சம் பழம் என்று காலம் கழியும். சில நேரங்களில் அதுகூட இருக்காது.
ஆயிஷா அம்மையார் விருந்தினருக்கு உண்ண ஏதாவது கிடைக்கிறதா என்று வீட்டில் தேடினார். மூன்று பேரீச்சம் பழங்கள் வீட்டில் கிடைத்தன.
ஆயிஷா அம்மையார் விருந்தினர்களுக்கு அந்தப் பழங்களை இன்முகத்துடன் கொடுத்தார். அதை அந்தப் பெண்ணும் ஆவலுடன் பெற்றுக்கொண்டார். தனது இரண்டு குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒன்றாக அவற்றைப் பிய்த்துக் கொடுத்தார். ஒன்றை உள்ளங்கையிலேயே வைத்துக் கொண்டார்.
பாவம் அந்தக் குழந்தைகள்! பல நாள் பட்டினி போல. அதனால் பேரீச்சம் பழங்களை ஒரே விழுங்காக விழுங்கிவிட்டன. அந்தப் பெண்மணியோ ஆயிஷா அம்மையாருடன் உரையாட ஆரம்பித்தார்.
குழந்தைகளின் பார்வை அம்மாவின் கையிலிருந்த மூன்றாவது பேரீச்சம் பழத்திலேயே இருந்தது. அதை அந்தப் பெண்ணும் ஓரக்கண்ணால் பார்த்தார். புன்முறுவல் பூத்தார். தன்னிடமிருந்த மூன்றாவது பேரீச்சம் பழத்தையும் இரண்டாகப் பிய்த்து ஆளுக்குப் பாதி அளித்தார்.
அந்தக் காட்சி ஆயிஷா நாச்சியாருக்கு வியப்பாக இருந்தது. தனது பசியையும் அடக்கிக்கொண்டு தனது பெண் குழந்தைகளின் பசியைப் போக்க முயல்கிறாளே இந்தத் தாய்! ஏழைப் பெண்ணின் ஒப்பற்ற தியாகம் அவரைப் பெரிதும் கவர்ந்தது.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வந்த விருந்தினர்கள் சென்றுவிட்டனர். நபிகளாரும் வீடு திரும்பினார்கள். நடந்த சம்பவத்தை ஆயிஷா அம்மையார் நபிகளாரிடம் தெரிவித்தார்.
அதைக் கேட்ட அன்பு நபிகளார், “யார் தமது பெண் குழந்தைகளிடம் அன்புடனும், கருணையுடனும் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாகிவிடுவார்கள்!” என்றார்.
அந்தப் பெண்மணி தனது பெண் குழந்தைகளிடம் காட்டிய அன்பாலும், கருணையாலும் சொர்க்கத்தில் நுழைவாள் என்று கூறினார் நபிகள்.